search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    திருமண வரம் தரும் புதுச்சேரி சாரம் சுப்பிரமணியர் கோவில்
    X

    திருமண வரம் தரும் புதுச்சேரி சாரம் சுப்பிரமணியர் கோவில்

    அரிய கோவில் என பல்வேறு பெருமைகள் கொண்டதாக திகழ்வது, புதுச்சேரி சாரம் சுப்பிரமணியர் ஆலயம். இந்த கோவில் வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.
    புதுச்சேரியில் சஷ்டி விழாவிற்கும், சூர சம்ஹாரத்திற்கும் புகழ்மிக்க கோவில், காவல் தெய்வம் நாகமுத்து மாரியம்மன் வாழும் தலம், மாசி மகத்தில் புதுவை வரும் மயிலம் முருகனுக்கு விருந்தோம்பல் செய்யும் முருகன், பழமையான வன்னி மரத்தடியில் சனி பகவான் விளங்கும் அரிய கோவில் என பல்வேறு பெருமைகள் கொண்டதாக திகழ்வது, புதுச்சேரி சாரம் சுப்பிரமணியர் ஆலயம்.

    தல வரலாறு :

    புதுவை மாநகரில் முக்கியப் பகுதியாகத் திகழ்வது சாரம். இந்தப் பகுதியினரின் காவல் தெய்வமாக விளங்குவது நாகமுத்து மாரியம்மன். இக்கோவில் சிறப்புக்குப் பழங்காலத்து பூங்குளமும், பூந்தோட்டமும் சான்றாக விளங்குகின்றன. இக்கோவிலை வைத்தே மாரியம்மன் கோவில் வீதி ஏற்பட்டது. 1880-ம் ஆண்டு இந்த ஆலயத்தில் எதிரில் சற்று தூரத்தில் அரசமரத்தடி விநாயகர் இருந்தார். அவரையும் அந்தப் பகுதியினர் வழிபட்டு வந்தனர். இவரை பக்தர்கள் ‘முத்து விநாயகர்’ என்று அழைத்தனர்.

    இந்நிலையில் 1907-ம் ஆண்டில் இந்தப் பகுதியில் தேவனூர் கிராமத்தைப் பூர்வீகமாகக் கொண்ட சனி வீராசாமிப் பிள்ளை என்பவர் வசித்து வந்தார். இவர் முருகப்பெருமான் மீது கொண்ட தீவிர பக்தியின் காரணமாக, அங்கு விநாயகருக்கு அருகில், முருகப்பெருமானையும் பிரதிஷ்டை செய்ய விரும்பினார். சென்னையை அடுத்த மகாபலிபுரத்தில் வள்ளி- தெய்வானை சமேத சுப்பிரமணியர் சிலை வடிவங்களை செய்து, அதனை முத்துவிநாயகரின் பின்புறம் அமைத்து முருகப்பெருமான் ஆலயம் எழுப்பினார். பின்னர் இந்த ஆலயத்திற்கு, தேவனூரில் உள்ள தனக்கு சொந்தமான இருபது காணி நிலத்தை தானமாக எழுதி வைத்தார்.

    1907-ல் தொடங்கிய கோவில் திருப்பணி இரண்டு ஆண்டுகளில் நிறைவடைந்தது. கி.பி. 1909-ல் முத்து விநாயகர், வள்ளி-தெய்வானை சமேத சுப்பிரமணியர், தட்சிணாமூர்த்தி உள்ளிட்ட மூர்த்தங்களோடு குடமுழுக்கு விழா இனிதே நடந்து முடிந்தது. சனி வீராசாமியின் ஈடுபாட்டினால் உந்தப்பட்ட அவரது நண்பர் நாராயணசாமி என்பவர், புதுச்சேரி அருகே உள்ள பட்டானூரில் தனது 23 காணி நிலத்தை முருகப்பெருமான் ஆலயத்திற்கு தானமாக வழங்கினார். இப்படி ஒவ்வொருவராக தானம் செய்ய, ஆலயம் வளர்ச்சி பெறத் தொடங்கியது. 1987-ல் பதினாறு அடி உயர சுற்றுச்சுவர் எழுப்பப்பட்டது. 2001-ல் வைத்தீஸ்வரன், தையல் நாயகி, தட்சிணாமூர்த்தி, சண்டிகேஸ்வரர், ஐயப்பன் சன்னிதிகள் அமைக்கப்பட்டு குடமுழுக்கு நடந்தேறியது.

    ஆலய அமைப்பு :

    இந்தக் கோவிலின் பெயரால் வழங்கப்படும் சுப்பிரமணியர் கோவில் வீதியில், கிழக்கு முகமாக மூன்று நிலை ராஜகோபுரத்தைக் கொண்டு ஆலயம் அமைந்துள்ளது. ராஜகோபுரத்தின் உள்ளே நுழைந்ததும், எழிலான முத்து விநாயகர் நம்மை வரவேற்று காட்சி தருகிறார். கருவறை விமானத்தின் கிழக்கில் சரஸ்வதி மற்றும் லட்சுமியுடன் விநாயகர், தெற்கில் தட்சிணாமூர்த்தி, மேற்கில் ஸ்ரீதேவி-பூதேவி சமேத விஷ்ணு, வடக்கில் பிரம்மா ஆகியோர் சுதைச் சிற்பங்களாக அமைந்திருக்க, அதன் அடிப்பகுதியில் துர்க்கை, கோஷ்ட தெய்வமாக வீற்றிருக்கிறார்.

    இதன் இடது பின்புறமும் முருகப்பெருமான் சன்னிதி அமைந்துள்ளது. சிறிய கொடிமரம், பலிபீடம், மயில் இவற்றைக் கடந்ததும், வள்ளி- தெய்வானை சமேத சுப்பிரமணியர் எளிய வடிவில், இரண்டரை அடி உயரத்தில் புதுப்பொலிவுடன் அருள் காட்சி வழங்குகிறார். நான்கு கரங்களோடு காட்சி தரும் இத்தல முருகப்பெருமான், மேல் இரண்டு கரங்களில் சூலம், வஜ்ராயுதம் தாங்கியும், கீழ் இரண்டு கரங்களில் அபய, வரத முத்திரைகளோடு அருள்புரி கிறார். பின்புறம் வடக்கு நோக்கிய அசுரமயில் எழிலாக அமைந்துள்ளது. இந்த முருகப்பெருமானின் உருவ அமைப்பு வயலூர், கந்தக்கோட்டம் முருகன் வடிவங்களை நினைவுபடுத்துவதாக அமைந்துள்ளன. மூர்த்தி சிறிதானாலும், கீர்த்தி பெரிது என்பதற்கு சாரம் முருகன் சிறந்த எடுத்துக்காட்டு.

    இவரது கருவறை விமானத்தில் முன்புறம் தன் துணைகளான வள்ளி- தெய்வானையுடனும், வடக்கில் சுவாமிமலை உபதேச காட்சி, மேற்கில் பழனி தண்டாயுதபாணி காட்சி, தெற்கில் அன்னையிடம் சக்திவேல் வாங்கும் காட்சி ஆகியவை சுதைச் சிற்பங்களாக அமைந்துள்ளன.



    முத்துவிநாயகரும், சுப்பிரமணியரும் பிரதான சன்னிதி களில் விளங்க, வைத்தீஸ்வரன், தையல் நாயகி, தட்சிணாமூர்த்தி, ஐயப்பன் சன்னிதிகள் நேர்த்தியாக அமைந்துள்ளன. ஐயப்பன் சன்னிதி அருகே உற்சவ மூர்த்திகள் மண்டபம் அமைந்துள்ளது. முருகப்பெருமான் சன்னிதியின் பின்புறம், தலமரமான வன்னிமரம் செழித்தும், பசுமையாகவும் வளர்ந்திருக்க, அதன் அடியில் சனி பகவான் நின்ற கோலத்தில் மேற்கு முகமாய்க் காட்சி தருகின்றார். இந்த அமைப்பு அரிதான ஒன்றாகும். சனி தோஷம் உள்ளவர்களுக்குச் சிறந்த வரப்பிரசாதி இவர்.

    இவ்வாலயத்தில் பழமையான ஐம்பொன் சிலைகளாக விநாயகர், வள்ளி- தெய்வானை சமேத சுப்பிரமணியர், நாகமுத்து மாரியம்மன் ஆகியோர் சிலைகள் அமைந்துள்ளன. அண்மையில் உருவான நடராஜர், சிவகாமி, மாணிக்கவாசகர் வடிவங்களும் இடம் பெற்றுள்ளன.

    விநாயகர் சதுர்த்தி, வைகாசி விசாகம், திருக்கார்த்திகை தீபம், நவராத்திரி, பங்குனி உத்திரம், கிருத்திகை, பிரதோஷம் உள்ளிட்ட அனைத்து விழாக்களும் இந்த ஆலயத்தில் சிறப்பாக நடத்தப்பட்டு வருகின்றன. ஐப்பசி மாதத்தில் சஷ்டி விழாவாக பதினோரு நாட்கள் பிரம்மோற்சவம் வெகு விமரிசையாக நடத்தப்படுகின்றன. இதில் சூரசம்ஹாரம், திருக்கல்யாணம் போன்ற முக்கிய நிகழ்வுகள் நடை பெறுகின்றன. பிரம்மோற்சவத்தில் எட்டு நாட்களும், தை, கார்த்திகை, ஆடிக் கிருத்திகை, பங்குனி உத்திரத்திலும் முருகன் வீதியுலா வருவார். மாசி மகத்தில் மயிலம் முருகனை வரவேற்று உபசரித்தல், நூற்றாண்டுகளைக் கடந்து நடந்தேறி வருகிறது.

    நாகமுத்து, மாரியம்மனுக்கு ஆடி வெள்ளிக் கிழமைகளில் விழாவும், நவராத்திரியில் விழாவும், அதில் ஒருநாள் அம்பு போடும் விழாவும் நடத்தப்படுகிறது. ஆடிப்பூரம் மற்றும் சித்திரை ஒன்றிலும் வீதியுலாவும் நடத்தப்படுகிறது.

    பிரார்த்தனைத் தலம் :

    இவ்வாலயத்து முருகன் தன்னை நாடி வரும் அடியார்களின் குறை தீர்க்கும் வள்ளலாக விளங்குகின்றான். குறிப்பாக, சஷ்டியில் விரதம் இருந்து வழிபடுவோருக்குத் தடைகளை நீக்கி திருமணப்பேறு, மகப்பேறு அருள்வதில் வல்லவனாகத் திகழ்கின்றான். இதனை இங்குவரும் பக்தர்கள் அனைவருமே உறுதி செய்கின்றனர்.

    ஆலய நிர்வாகத்தை புதுச்சேரி மாநில அரசின் இந்து அறநிலையத்துறை கவனித்து வருகின்றது. இவ்வாலயம் முத்து விநாயகர், வள்ளி தெய்வானை சுப்பிரமணியர், நாகமுத்து மாரியம்மன் ஆலயம் என்ற பெயரில் வழங்கப்பட்டு வருகிறது.

    இங்கு தினமும் காலை 6 மணி முதல் 10 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 9 மணி வரையிலும் சுவாமி தரிசனம் செய்யலாம்.

    அமைவிடம் :

    புதுச்சேரி மாநிலம் புதுச்சேரி நகரில் சாரம் பகுதியில் சுப்பிரமணியர் கோவில் வீதி, மாரியம்மன் கோவில் வீதிகளின் சந்திப்பில் அமைந்துள்ளது. புதிய பேருந்து நிலையத்திற்கு வடமேற்கே 2 கிலோமீட்டர் தொலைவில் இது உள்ளது. இத்திருக்கோவிலுக்குச் செல்ல ஆட்டோ வசதி உள்ளது. 
    Next Story
    ×