search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    குடும்ப ஒற்றுமை காக்கும் கோதண்டராமர் கோவில்
    X

    குடும்ப ஒற்றுமை காக்கும் கோதண்டராமர் கோவில்

    பல நூற்றாண்டுகளைக் கடந்த அரிய பழமையான ஆலயமான அருள்மிகு கோதண்டராம ஆலயம் உள்ளது. இந்த கோவில் வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.
    முள்ளங்குடி ஒரு சின்னஞ்சிறு கிராமம்.

    பச்சை பசேல் வயல் வெளிகளும் கரும்பு சோலைகளும் நிறைந்த அழகான ஊர் இது. பல நூற்றாண்டுகளைக் கடந்த அரிய பழமையான ஆலயமான அருள்மிகு கோதண்டராம ஆலயம் இங்குதான் உள்ளது.

    ஆலயம் கிழக்கு திசை நோக்கி அமைந்துள்ளது. நுழைவுவாயிலைத் தாண்டியதும் கருடாழ்வார் சன்னிதி உள்ளது. அடுத்துள்ளது மகாமண்டபம். அடுத்துள்ள அர்த்த மண்டப நுழைவுவாயிலின் முன்பு இடது புறம் தும்பிக்கை ஆழ்வாரும் வலதுபுறம் ஆஞ்சேநயரும் அருள்பாலிக்கின்றனர்.

    கருவறையில் கோதண்டராமர் தனது மடியில் சீதாப்பிராட்டியை அமர்த்திக் கொண்டு சங்கு சக்கரத்துடன் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். இங்குள்ள கருடாழ்வாருக்கு வியாழன் தோறும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறுகின்றன.

    ராமநவமி, அனுமன் ஜெயந்தி, நவராத்திரி ஆகிய நாட்களில் இறைவன், இறைவி மற்றும் ஆஞ்சநேயருக்கு சிறப்பு ஆராதனைகள் நடை பெறுகின்றன.

    பிள்ளைப் பேறு வேண்டுவோர், திருமணம் நடைபெற வேண்டுவோர் இங்குள்ள ஆஞ்சேநயரை பிரார்த்தனை செய்ய அவர்கள் பிரார்த்தனை பலிப்பது நிஜம் என்கின்றனர் பக்தர்கள். தங்கள் பிரார்த்தனை பலித்ததும் ஆஞ்சநேயருக்கு வடை மாலை சாத்தி புளி சாதம், எள்ளு சாதம், நைவேத்தியம் செய்து பக்தர்களுக்கு வினியோகம் செய்து தங்கள் நன்றிக்கடனை நிறைவேற்றி கொள்கின்றனர்.

    இங்குள்ள ராமபிரானை பிரார்த்தனை செய்வதால் தோஷ நிவர்த்தி ஏற்படுவதாக சொல்கின்றனர் பக்தர்கள்.

    இத்தலத்தின் புராணம் என்ன ?

    திவ்ய தேசமான திருவெள்ளியங்குடியில் மூலவர் கோல வில்லிராமர். இங்கு ராமபிரான் சங்கு சக்கரமின்றி, சீதை, லட்சுமணர் இல்லாமல் தனிமையாக சயனக் கோலத்தில் காட்சி தருகிறார்.

    ராமபிரானை இங்கு தரிசித்த கருடாழ்வாரின் மனம் சங்கடபட்டது. சங்கு சக்கரமில்லாமல் சீதாப்பிராட்டி இல்லாமல் ராமரை தரிசனம் செய்ததில் அவர் மன நிறைவு கொள்ளவில்லை. ராமபிரானை தனித்து பார்த்த தன் கண்களால் அவரை சீதாப்பிராட்டியுடன் இணைத்து பார்க்க வேண்டும் என்ற ஆவல் ஏற்பட்டது. தனது ஆவலை கயிலாச நாதரிடம் தெரிவித்தார் கருடாழ்வார்.

    கயிலாசநாதர் அவரை முள்ளங்குடிக்குச் சென்று தியானம் செய்யும்படி பணித்தார். அதன்படி முள்ளங்குடி வந்த கருடாழ்வார் ராமபிரானை வேண்டி தியானத்தில் ஆழ்ந்தார். அவர் தியானம் செய்வதைக் கண்டு மனம் இறங்கிய ராமபிரான் சங்கு சக்கரத்துடன் சீதாபிராட்டியை மடியில் வைத்துக் கொண்டு தரிசனம் தந்தார்.

    கருடாழ்வார் மெய்மறந்து ராமபிரானை தரிசித்தார். ‘புள்’ளாகிய கருடனுக்கு அவர் விரும்பிய அமர்ந்த கோலத்தில் தன் மடிமீது சீதா தேவியை அணைத்துக் கொண்டு ராமபிரான் காட்சி தந்ததால் இந்த ஊர் புள்ளங்குடி என்ற பெயர் பெற்றது. அதற்கு பிறகு முள்ளங்குடி என்று அழைக்கப்படலாயிற்று.

    இந்த ஆலயத்தில் ஆஞ்சநேயர் தலையில் கிரீடம் இல்லாமல் இரு கரங்களையும் கூப்பி கண்களை மூடி தியான நிலையில் காட்சி தருகிறார். கருடன் இந்த தலத்தில் தியானத்தில் இருந்த போது அனுமனும் தியானம் செய்து ராமபிரானின் தாம்பத்ய கோல தரிசனம் பெற்றார்.

    இந்த தலத்தில் ராமபிரான், சீதா தேவியை தன் மடி மீது அமர்த்திய கோலத்தில் அபூர்வமாக சேவை சாதிப்பதால் குடும்ப ஒற்றுமை, இல்லற மகிழ்ச்சி, தாம்பத்ய உறவு ஆகியவைகளை அருளும் தலமாக இத்தலம் விளங்குவது உண்மையே!

    சென்னை - கும்பகோணம் நெடுஞ்சாலையில் உள்ள அணைக்கரை என்ற ஊரில் இருந்து 6 கி.மீ. தொலைவில் உள்ளது முள்ளங்குடி.
    Next Story
    ×