search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    மகா சிவராத்திரி விரத முறை
    X

    மகா சிவராத்திரி விரத முறை

    சிவராத்திரி தினத்தன்று மன சுத்தியோட ‘ஓம் நமச் சிவாய‘ என்று உச்சரிச்சுக்கிட்டு இருந்தாலே போதும் எல்லா பலன்களும் கிடைக்கும்.
    எல்லா விரதங்களுக்கும் போலவே சிவராத்திரிக்கும் சில விதிகள் இருக்கு. மற்ற பண்டிகைகளைப் போல கிடையாது சிவராத்திரி. கொஞ்சம் கடுமையாகத்தான் விரதம் இருக்க வேண்டும்.

    மற்ற பண்டிகைகள் எல்லாமே விரதத்துலயும் வழிபாட்டுலயும் ஆரம்பிச்சு விருந்தில் முடியும். ஆனால் சிவராத்திரி அப்படி இல்லை. மனிதர்களுக்கு ரொம்ப முக்கியானது இரண்டு விஷயம். உணவு, நல்ல தூக்கம், இந்த இரண்டையும் விலக்கி, சிவனுக்காக நாம் விரதமிருப்பது தான் இந்த நாளின் நோக்கமாகும்.
    உணவையும் உறக்கத்தையும் விலக்கினால் புலன்கள் தானாகவே அடங்கும்.

    அப்போது இறையுணர்வு பெற முடியும். நினைத்த காரியம் சித்தி ஆகும்.
    ‘சிவராத்திரி விரதம் இருப்பவர்கள் அன்றைய தினம் முழுவதும் உபவாசம் இருப்பது மிகவும் நல்லது. அவ்வாறு இருக்க இயலாதவர்களுக்கு விதி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. பால், பழங்கள் மட்டுமே சாப்பிட்டு விரதமிருக்கலாம் அல்லது சர்க்கரை வள்ளிக்கிழங்கை உப்பில்லாமல் வேக வைத்து உண்ணலாம் அல்லது சத்துமாவை வெல்லத்துடன் கலந்து ஒரே ஒருவேளை மட்டும் உண்ணலாம்.

    விரதம் இருப்பவர்கள் சிவபுராணம், கோளறு பதிகம், லிங்காஷ்டகம், பஞ்சாட்சர ஸ்தோத்திரம், நடராஜப் பத்து, பரமசிவன் ஸ்தோத்திரங்களைப் படிக்கலாம். தமிழில் திருமறைகளையும் ஓதலாம்.

    சிவராத்திரியன்று பஞ்சாட்ச மந்திரம் உச்சரிப்பதால் மற்ற நாள்களில் நூறு முறை பஞ்சாட்சரம் ஜபித்த பலன் கிட்டும் என்கிறது சாஸ்திரம். அதே போல் தான் லிங்கபுராணம், திருவிளையாடல் புராணம், பெரிய புராணம், திருவாசகம் ஆகியவற்றைப் படித்தாலும் கேட்டாலும் பலன்கள் மற்ற நாள்களை விட அதிகமாகவே கிடைக்கும்.

    சிவராத்திரி விரதத்தின் மகிமையை, சிவன் நந்திக்கு உபதேசித்தார். அதனைக் கேட்ட நந்தி அதை அனைத்துத் தேவர்களுக்கும் கூறினார். அந்தத் தேவர்கள் அனைத்து முனிவர்களுக்கும் ரிஷிகளுக்கும் அதனைக் கூறினார்.

    சிவராத்திரி தினத்தன்று மன சுத்தியோட ‘ஓம் நமச் சிவாய‘ என்று உச்சரிச்சுக்கிட்டு இருந்தாலே போதும் எல்லா பலன்களும் கிடைக்கும்.



    அன்று இரவு பதினான்கு நாழிகையின்போது முறைப்படி விரதமிருந்து சிவனை வழிபட்டால் கோடி பிரம்ம ஹத்திகளும் (பாவங்களும்) விலகும் என்பது உறுதி.
    சிவராத்திரி தினத்தன்று அதிகாலையில் எழுந்து கொள்ள வேண்டும். நீராடிவிட்டு சிவாலயம் ஒன்றிற்குச் சென்று, தான் இன்று சிவராத்திரி விரதம் அனுசரிக்க விருப்பதாகவும் தன்னுடைய விரதம் எவ்விதப் பங்கமும் இல்லாமல் நிறைவேற அருள வேண்டும் என்றும் தன் புலனடக்கத்திற்கு எந்தவிதக் கேடும் வந்து விடக்கூடாது என்றும் எம்பெருமானை வேண்டிக்கொள்ள வேண்டும்.

    பிறகு பூஜைக்குத் தேவையான பொருட்களை எல்லாம் சேகரித்து வைத்துக்கொள்ள வேண்டும். பொழுது சாயும் வேளையில் குளித்து விட்டு சுத்தமான உடைகளை உடுத்திக் கொள்ள வேண்டும். மூன்று முறை ஆசமனம் செய்து பரமேஸ்வரனைத் துதித்து பூஜையைத் தொடங்க வேண்டும்.

    நான்கு ஜாமங்களிலும் நான்கு சிவலிங்கங்களை மண்ணால் செய்து வழிபட வேண்டும். வேதம் கற்றவர்களைக் கொண்டு மந்திரங்களை உச்சரித்து பூஜையை நிறைவு செய்ய வேண்டும். பால், தயிர், தேன், நெய், சர்க்கரை ஆகியவற்றால் அபிஷேகம் செய்ய வேண்டும்.

    சிவராத்திரியின் முதல் நாள் பிரதோஷ தினம் ஆகையால் மாலையில் நடராஜப் பெருமானையும், சிவ மூலவரையும் வழிபட வேண்டும். சிவராத்திரி இரவில் நான்கு கால வழிபாடு நடைபெறும். முதல் காலத்தில் சோமாஸ்கந்தரையும், இரண்டாம் காலத்தில் தட்சிணாமூர்த்தியையும், மூன்றாம் காலத்தில் லிங்கோத்பவரையும், நான்காம் காலத்தில் ரிஷபாரூடர் என்று அழைக்கப்பெறும் சந்திரசேகரரையும் வழிபட வேண்டும். நான்கு காலங்களிலும் கருவறையிலுள்ள சிவ மூலவரை ஆகம முறைப்படி அபிஷேகங்கள் செய்வித்து வழிபட வேண்டும்.

    மூன்றாம் காலம் லிங்கோத்பவ காலம் ஆகும். அந்நேரத்தில் கருவறைக்குப் பின்னே உள்ள லிங்கோத்பவரை முறைப்படி வழிபட வேண்டும். அந்நேரத்தில் ஸ்ரீருத்ரத்தைப் பாராயணம் செய்தல், ஸ்ரீ சிவ ஸகஸ்ர நாமங்களை உச்சரித்தல், தேவாரத்தில் உள்ள லிங்கபுராண திருக்குறுந்தொகையையும் பாராயணம் செய்தல் வேண்டும்.

    சிவராத்திரி விரதமானது எம பயத்தை நீக்கும். சிவராத்திரியின் நான்காம் காலத்தில் மிருத்யுஞ்சய மந்திரத்தை ஓதுவதால், உடல் பிணிகள் அனைத்தும் விலகும். சிவராத்திரி அன்று தான தருமங்கள் செய்வதால் கோடிப் புண்ணியம் கிடைக்கும். சிவலிங்கம், உருத்திராட்சம், ரத்தினங்கள், நிவேதனப் பொருட்கள், அன்னம் போன்றவைகளைத் தானம் செய்யலாம்.

    நான்கு காலங்களிலும் சிவபெருமானுக்கு பஞ்ச வில்வ தளங்களால் பஞ்சமுக அர்ச்சனை செய்ய வேண்டும். நான்காம் காலத்தில் மட்டும் செய்தால் கூடப் போதுமானது. பஞ்சமுக அர்ச்சனை செய்து, ஐந்து வகை அன்னங்களை சிவபெருமானுக்குப் படைத்தல் வேண்டும்.

    Next Story
    ×