search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    நோய்களை தீர்க்கும் திருவெண்காடு
    X

    நோய்களை தீர்க்கும் திருவெண்காடு

    திருவெண்காடு தலத்தில் புதனுக்குத் தனி சன்னிதி உள்ளது. இவரை வழிபட நரம்பு தொடர்புடைய நோய்கள் மட்டுமின்றி சகல நோய்களும் தீரும் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கை.
    உலகத்திலுள்ள உயிர்கள் தம்மை வழிபட்டு உய்யும் பொருட்டு இறைவன் திருமேனி தாங்கித் திருக்கோயில் கொண்டு எழுந்தருளி இருக்கும் திருத்தலங்கள் பல உள்ளன. அவற்றுள் திருப்பதிகம் பெற்றவை மிகச் சிறந்தவை. அவைகளைப் பாடல் பெற்ற பதிகள் என சொல்வார்கள். சோழ நாடு, ஈழ நாடு, பாண்டிய நாடு, மலை நாடு, கொங்கு நாடு, நடு நாடு, தொண்டை நாடு, துளுவ நாடு, வடநாடு என நாட்டு வகையாக அத்தலங்களை நம் முன்னோர்கள் பிரித்திருக்கின்றனர். அதிலும் சோழ நாட்டை இரு பகுதிகளாக வகுத்துள்ளனர்.

    அவை காவிரியாற்றுக்கு வடகரையில் 63, தென்கரையில் 127 திகழும் தலங்களாகும். இதில் திருவெண்காடு தலம் காவிரி வடகரைத் தலங்களுள் பதினொன்றாவது ஆகும்.

    சோழ நாட்டில் இரண்டு ஆரண்யேசுவரர்கள் மிகவும் புகழ் வாய்ந்தவர்கள். ஒருவர் வேதாரண்யேசுவரர். இன்னொருவர் திருவெண்காட்டில் எழுந்தருளி அருள்பாலிக்கும் சுவேதாரண்யேசுவரர். மூர்த்தி தல தீர்த்தத்தில் காசிக்கு நிகரான தலம் இது. திருவெண்காடு தலத்திலும் சிவ பெருமான் தம் வீரத்தை நிலை நாட்டி அந்தநார்ந்த திருக்கோலத்தை இன்னமும் காட்டி வருகிறார். அவர் தான் அகோரசிவம்.

    அசுரர்கள் தவம் கிடந்து வரம் கேட்டனர். இறைவனிடம் வரம் பெற்ற பின் தங்களது அசுரக்குணத்தை வெளிப்படுத்துவர். மருத்துவாசுரனும் அப்படித்தான் சிவபிரானிடம் வரம் பெற்ற பின்பு தேவர்களை வருத்த ஆரம்பித்திருக்கிறான். தீய சக்தியை இனியும் வளர்த்தால் ஆகாது என்னும் நிலை உருவாகிட, பெருமான் மண்ணுலகும் விண்ணுலகும் அஞ்சும்படியாக அகோர சிவமாக ஆர்த்தெழுந்துச் சென்று மருத்துவாசுரனை அடக்கினார். அதை பக்தர்களுக்கு உணர்த்தும் வகையில் ஈசன் இத்தலத்தில் எழுந்தருளி உள்ளார்.

    இத்திருத்தலம் நாகை மாவட்டத்தில், சீர்காழி வட்டத்தில் இருக்கிறது. மயிலாடுதுறை, சீர்காழி, பூம்புகார் ஆகிய ஊர்களிலிருந்து பேருந்துகளில் செல்லலாம்.
    திருவெண்காட்டிற்கு தெற்கே மூன்று கி.மீ. தொலைவில் காவிரியாறும், வடக்கே ஒரு கி.மீ. தூரத்தில் மணிகர்ணிகை என்னும் மண்ணியாறும் ஓடுகின்றன. திருச்சாய்காடு (சாயாவனம்), காவிரி பூம்பட்டினத்துப் பல்லவனீச்சரம், திருவலம்புரம், கீழைத் திருக்காட்டுப்பள்ளி, திருக்கலிக்காமூர் முதலிய தலங்கள் திருவெண்காட்டைச் சூழ்ந்துள்ளன. திருநாங்கூர், திருவாலி, திருநகரி என்ற வைணவப் பதிகளும் இதன் அருகே இருக்கின்றன.

    காசிக்கு சமமாகத் திகழும் ஆறு தலங்களுள் திருவெண்காடும் ஒன்று. பிற தலங்கள் திருவையாறு, மயிலாடுதுறை, திருவிடைமருதூர், சாய்க்காடு, ஸ்ரீவாஞ்சியம் ஆகியனவாகும். வால்மீகி ராமாயணத்தில் இத்தலத்தை பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது. சுவேதாரண்ய ஷேத்திரத்தில் எமனை சுவேதாரண்யேசுவரர் எவ்வாறு சம்ஹாரம் செய்தாரோ அவ்வாறு கரதூஷனாதிகளை ராமன் சம்ஹாரம் செய்தான் என்று வால்மீகி முனிவர் ஆரண்ய கண்டத்தில் குறிப்பிட்டுள்ளது இத்தலத்தின் தொன்மைக்கு சான்றாகத் திகழ்கிறது.

    ஆதி சிதம்பரம் இதுவாகும். உலகத்தில் உள்ள உயிர்கள் வாழும் வண்ணம் பெருமான் 1008 விதமான தாண்டவம் புரிந்தார். இத்தலத்தில் பெருமான் ஆனந்த தாண்டவம் புரிந்தார். ஆனந்த தாண்டவம், காளீ நிருத்தம், கவுரீ தாண்டவம், முனி நிருத்தம், ஸந்தியா தாண்டவம், திரிபுர தாண்டவம், புஜங்க லலிதா தாண்டவம், ஸம்ஹார தாண்டவம், பைஷாடனம்” ஆகிய ஒன்பது தாண்டவ ஷேத்திரங்களுள் திருவெண்காடு முதன்மையானது. சிதம்பரத்தில் நிற்குணமாக ஆடி முக்தியைத் தருகிறார். திருவெண்காட்டில் சகுணமாக ஆடி இருமைப் பயனும் தருகிறார்.

    விஷ்ணு, சூரியன், சந்திரன், அக்னி, இந்திரன், ஐராவதம் சிவப்பிரியர் வேதராசி, சுவேதகேது, சுவேதன் முதலியவர்கள் இத்தலத்தை வழிபட்டுள்ளனர்.
    சக்தி பீடங்கள் 108 ஆகும். சக்தி பீடங்களுள் இத்தலமும் ஒன்று. நவகோள்களில் புதன் வழிபட்ட தலம். இத்தலத்தில் புதனுக்குத் தனி சன்னிதி உள்ளது. இவரை வழிபட நரம்பு தொடர்புடைய நோய்கள் மட்டுமின்றி சகல நோய்களும் தீரும்.

    சிவபெருமானின் 64 மூர்த்தி பேதங்களுள் ஒன்றாகிய ஸ்ரீஅகாரமூர்த்தியை இத்தலத்தில் மட்டுமே காணலாம். இவ்வூர் சங்கல்பத்தில் “பிர்மஸ்மசானம்” என்று சொல்லப்படுகிறது. பிரமசமாதி அம்பிகைக் கோயிலுக்கு வடபால் உள்ளது. இது, “எண்ணிலி இந்திரர் எத்தனையோ பிரமர்களும், மண்மிசை மால்பலர் மாண்டர்”, “நூறுகோடி பிரமர்கள் நொந்தினார்” என்ற கணக்கில் இறந்தவர்களுடைய ஈமச்சுடலையாகும்.

    இத்தலத்தில் சுவேதாரண்யேசுவரர், ஸ்ரீநடராஜர், அகோரமூர்த்தி என சிவமூர்த்தங்களாக மூன்று அமைந்துள்ளன. இத்தலத்தில் தீர்த்தங்கள் மூன்று -அக்கினி தீர்த்தம், சூரிய தீர்த்தம், சந்திர தீர்த்தங்கள். இத்தலத்தில் தல விருட்சங்கள் மூன்று - ஆல், கொன்றை, வில்வம்.

    திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர், மாணிக்கவாசகர் முதலிய நால்வராலும் திருப்திகம் பெற்றத் தலம் பரஞ்சோதி முனிவர், கபிலதேவ நாயனார், பரணதேவ நாயனார், பட்டினத்தடிகள், சேக்கிழார், கச்சியப்ப சிவாசாரியார், காஞ்சி சிதம்பர முனிவர், சோமசுந்தர தேசிகர், சைவ எல்லப்ப நாவலர் முதலியோர் இத்தலத்தைப் போற்றியுள்ளனர்.

    பதினோராம் திருமுறையில் பாடிய திருவெண்காடராகிய பட்டினத்தடிகள் சிவதீட்சை பெற்ற தலம்.சிறுத்தொண்டர் இளமையில் வாழ்ந்ததும், அவர்தம் மனைவி திருவெண்காட்டு நங்கையும், சந்தனத்தாதியும் பிறந்ததுவும் இத்தலமாகும். பன்னிரு சூத்திரங்களைக் கொண்ட சிவஞானபோதம் என்னும் சைவ சித்தாந்த முழுமுதல் நூலை அருளிச் செய்த மெய்கண்டார் அவதரித்த தலம்.

    திருஆவடுதுறை ஆதீன எட்டாவது குருமகா சந்நிதானமாகிய ஸ்ரீலஸ்ரீ மாசிலமாணி தேசிகர் அவர்கள் சமாதி இவ்வூரின் மேல வீதியில் மேல்திசையில் உள்ளது. ஸ்ரீகாஞ்சி காமகோடி பீடாதிபதி சங்கராசார்ய சுவாமிகளின் பரம்பரையில் வந்தவருமாகிய ஸ்ரீபரமசிவேந்திர சரஸ்வதி சுவாமிகளின் சமாதி இவ்வூரிலுள்ள மணிகர்ணிகை கட்டத்தில் உள்ளது. இத்தல புராணத்தில் சொல்லப்பட்டிருக்கும் தகராகாச வித்தையைப் பற்றி ‘தகரவித்யா பிரகாசிகை’ என்னும் நூலை சுவாமிகள் எழுதியுள்ளார்.

    சோழர் காலத்தில் செம்பு, ஐம்பொன் வார்ப்பு விக்ரகங்களை உருவாக்கும் தொழில் கூடமாகத் திருவெண்காடு விளங்கியது. இத்திருக்கோயிலில் உள்ள வார்ப்புச் சிலைகள் மிக நேர்த்தியானவை. திருவெண்காட்டில் தோண்டி எடுக்கப்பட்ட சிலைகள் சென்னையிலும், தஞ்சையிலும் உள்ள கலைக் கூடங்களிலும் சிறப்பாக திகழ்கின்றன.
    Next Story
    ×