search icon
என் மலர்tooltip icon

    சினிமா

    சினிமா தயாரிப்பாளர் தற்கொலை வழக்கு: சசிகுமாரிடம் இன்று போலீஸ் விசாரணை
    X

    சினிமா தயாரிப்பாளர் தற்கொலை வழக்கு: சசிகுமாரிடம் இன்று போலீஸ் விசாரணை

    சினிமா தயாரிப்பாளர் அசோக்குமார் தற்கொலை வழக்கு தொடர்பாக நடிகர் சசிகுமாரிடம் இன்று போலீசார் விசாரணை நடத்த உள்ளனர்.
    தமிழ் திரைப்பட இயக்குனரும், நடிகருமான சசிகுமாரின் அத்தை மகன் அசோக்குமார்(வயது 43). இவர், சசிகுமார் நடத்தி வரும் ‘கம்பெனி புரொடக்‌ஷன்’ என்ற சினிமா தயாரிப்பு நிறுவனத்தின் இணை தயாரிப்பாளராகவும் இருந்து வந்தார்.

    சென்னை வளசரவாக்கம், ஆற்காடு சாலையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்த அசோக்குமார், கடன் தொல்லையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். சினிமா பைனான்சியர் அன்புசெழியனிடம் வாங்கிய கடனே தனது தற்கொலைக்கு காரணம் எனக்கூறி 2 பக்க கடிதமும் எழுதி இருந்தார்.

    இதுபற்றி சசிகுமார் அளித்த புகாரின்பேரில் வளசரவாக்கம் போலீசார், அன்புசெழியன் மீது தற்கொலைக்கு தூண்டியதாக வழக்குப்பதிவு செய்தனர். சம்பவம் தொடர்பாக 3 தனிப்படைகள் அமைத்து போலீசார் தீவிரமாக விசாரணை செய்து வருகின்றனர்.

    பைனான்சியர் அன்பு செழியனை பிடிக்க சென்னை தி.நகரில் உள்ள அவரது அலுவலகம் மற்றும் வீடுகளுக்கு போலீசார் சென்றனர். ஆனால் அங்கு அவர் இல்லை. அவர் தலைமறைவாகி விட்டது தெரிந்தது.



    வீடு, அலுவலகத்தில் சோதனை செய்த போது ஆவணங்கள் எதுவும் போலீசாரிடம் சிக்கவில்லை. தற்போது அவருடைய அலுவலகம் பூட்டப்பட்டு உள்ளதால் அங்கு போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

    அவருடைய சொந்த ஊர் மதுரை என்பதால் அவர் அங்கு சென்று இருக்கலாம் என்று கருதி, ஒரு தனிப்படையினர் மதுரை விரைந்தனர். அவர்கள் மதுரையில் உள்ள அன்புசெழியனின் வீட்டுக்கு சென்றனர். ஆனால் வீட்டின் கதவு வெளிப்புறமாக பூட்டப்பட்டு இருந்தது.

    அன்புசெழியனின் மனைவி, பிள்ளைகள் யாரும் வீட்டில் இல்லை. போலீசார் தன்னை தேடுவதை அறிந்த அன்புசெழியன் தலைமறைவாகி விட்டதால், அவருடைய மனைவி மற்றும் பிள்ளைகளை பிடித்து வைத்துக்கொண்டு அன்புசெழியனை பிடிக்க போலீசார் திட்டம் போடலாம் என்று கருதி அவரது குடும்பத்தினரும் தலைமறைவாகி இருப்பது தெரியவந்தது.

    அன்புசெழியனின் செல்போன் ‘சுவிட்ச் ஆப்’ செய்யப்பட்டு உள்ளதால் அவர் பதுங்கி உள்ள இடத்தை கண்டுபிடிப்பதில் போலீசாருக்கு சிக்கல் ஏற்பட்டு உள்ளது. மேலும் அவருடைய பாஸ்போர்ட்டு எண் மற்றும் அடையாள அட்டைகள் எதுவும் இல்லாததால் அவரை நெருங்குவதில் போலீசாருக்கு சிரமமாக உள்ளது.

    இதையடுத்து மதுரையில் உள்ள அன்புசெழியனின் உறவினர்களிடம் போலீசார் விசாரணை நடத்த உள்ளனர். மேலும் அவரது உறவினர்கள், தொழில் சார்ந்த நண்பர்கள் என அனைவரையும் போலீசார் ரகசியமாக கண்காணித்து வருகின்றனர்.



    அன்புசெழியன் வெளிநாடு தப்பிச்செல்ல விமான நிலையம் சென்றால் அங்கு வைத்து அவரை கைது செய்யவும் போலீசார் தீவிரமாக உள்ளனர்.

    தற்போது அவர், பெங்களூருவில் உள்ள நண்பர்கள் வீட்டில் பதுங்கி இருப்பதாக வந்த தகவலின்பேரில் போலீசார் அங்கும் விரைந்து உள்ளனர். அன்புசெழியனுக்கு உதவி செய்து வருவது யார்? என்பது குறித்தும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    இதற்கிடையில் தற்கொலை செய்து கொண்ட அசோக்குமார் குறித்து மேலும் பல விஷயங்களை அறிந்து கொள்வதற்காக, போலீசில் புகார் அளித்த நடிகர் சசிகுமார் மற்றும் ‘கம்பெனி புரொடக்‌ஷனில்’ பணிபுரியும் முக்கிய நிர்வாகிகளிடம் இன்று(வெள்ளிக்கிழமை) போலீசார் விசாரணை நடத்தி, அவர்களிடம் வாக்குமூலம் வாங்க உள்ளனர்.

    அதன்பிறகுதான் தற்போது பைனான்சியர் அன்புசெழியன் மீது தற்கொலைக்கு தூண்டியதாக பதிவு செய்யப்பட்டு உள்ள வழக்குடன், கந்து வட்டி சம்பந்தமான மேலும் ஒரு வழக்கு பதிவு செய்ய வாய்ப்பு உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

    இன்னும் ஒரு சில தினங்களில் பைனான்சியர் அன்புசெழியனை கைது செய்து விடுவோம் என்றும் போலீசார் தெரிவித்தனர்.
    Next Story
    ×