search icon
என் மலர்tooltip icon

    சினிமா

    படப்பிடிப்புகளை ரத்து செய்த தீபிகா படுகோனே
    X

    படப்பிடிப்புகளை ரத்து செய்த தீபிகா படுகோனே

    பத்மாவதி பட எதிர்ப்பை தொடர்ந்து நடிகை தீபிகா படுகோனே விழாக்கள் மற்றும் படப்பிடிப்புகளில் பங்கேற்பதை ரத்துசெய்து விட்டார்.
    ராஜஸ்தான் மாநிலம் சித்தூரை ஆண்ட ராணி பத்மினி வாழ்க்கையை மையமாக வைத்து தயாரான பத்மாவதி படத்தில் நடித்த தீபிகா படுகோனேவுக்கு எதிர்ப்பு கிளம்பி இருக்கிறது. இந்த படம் வெளியாவதை தள்ளிவைத்த பிறகும் அவருக்கு அச்சுறுத்தல்கள் தொடர்கின்றன. இதில் பத்மினி வேடத்தில் தீபிகா படுகோனே நடித்து இருப்பதால் எதிர்ப்பாளர்கள் அவர் மீது ஆத்திரத்தில் உள்ளனர்.

    ராஜபுத்திர மன்னனை திருமணம் செய்த தீபிகா படுகோனே டெல்லி சுல்தான் அலாவுதீன் கில்ஜி மீது காதல் வயப்படுவது போல் நடித்து இருப்பதாக குற்றம் சாட்டுகின்றனர். மத்தியபிரதேசம், உத்தரபிரதேசம், ராஜஸ்தான், அரியானா, குஜராத் ஆகிய மாநிலங்களில் தீபிகா படுகோனேவின் கொடும்பாவிகள் எரிக்கப்பட்டன.

    லட்சுமணன், சூர்ப்பனகையின் மூக்கை அறுத்தது போல் தீபிகா படுகோனேவின் மூக்கை அறுப்போம் என்று எச்சரித்தனர். தீபிகா படுகோனேவை உயிரோடு எரிப்பவருக்கு ரூ.1 கோடி பரிசு வழங்கப்படும் என்று சத்ரிய மகா சபா அறிவித்தது. அவரது தலைக்கு ரூ.5 கோடி பரிசு வழங்கப்படும் என்றும் சிலர் அறிவித்துள்ளனர்.



    அரியானா மாநிலத்தை சேர்ந்த பா.ஜனதா ஊடக தொடர்பாளர் சூரஜ் பால் அமு இந்த தொகையை உயர்த்தினார். தீபிகா படுகோனே மற்றும் சஞ்சய் லீலா பன்சாலி தலையை கொண்டு வருபவர்களுக்கு ரூ.10 கோடி பரிசு வழங்கப்படும் என்றார். தொடர் கொலை மிரட்டல்களால் தீபிகா படுகோனே அச்சத்தில் இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

    இதனால் படபிடிப்புகளில் பங்கேற்பதை ஒத்திவைத்துள்ளார். விழாக்களில் பங்கேற்பதையும் ரத்துசெய்து விட்டார். ஐதராபாத்தில் வருகிற 28-ந்தேதி பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைக்கும் சர்வதேச முதலீட்டாளர்கள் மாநாட்டில் கலந்துகொள்ள தீபிகா படுகோனே ஒப்புதல் அளித்து இருந்தார்.



    ஆனால் தற்போது திடீரென்று விழாவுக்கு வரமுடியாது என்று அவர் தகவல் அனுப்பி இருப்பதாக தெலுங்கானா அதிகாரி ஒருவர் தெரிவித்தார். வெளியில் தலைகாட்டாமல் வீட்டிலேயே முடங்கி இருப்பதாக கூறப்படுகிறது.

    தீபிகா படுகோனேவுக்கு கொலை மிரட்டல் விடுத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும்படியும், அவருக்கு பாதுகாப்பு வழங்கும்படியும் நடிகர்கள் கமல்ஹாசன், பிரகாஷ்ராஜ், பிரியாமணி உள்ளிட்ட பலர் வற்புறுத்தி உள்ளனர். நடிகர்கள் ஷாருக்கான், அமீர்கான் உள்ளிட்டோர் போனில் தீபிகாவுடன் பேசி ஆதரவு தெரிவித்து உள்ளனர்.

    தீபிகா படுகோனே பெங்களூரில் பிறந்து வளர்ந்தவர். இவரது தந்தை பிரகாஷ் படுகோனே பிரபல பேட்மின்டன் வீரர் ஆவார். ஐஸ்வர்யா என்ற கன்னட படத்தில்தான் தீபிகா படுகோனே அறிமுகமாகி ‘ஓம் சாந்தி ஓம்’ இந்தி படத்தில் நடித்து பிரபல நடிகையாக உயர்ந்தார். இதனால் தீபிகா படுகோனே பாதுகாப்பில் கர்நாடக அரசு அக்கறை எடுத்து பிற மாநில அரசுகளுக்கும், மத்திய அரசுக்கும் கடிதங்கள் அனுப்பி வருகிறது.
    Next Story
    ×