search icon
என் மலர்tooltip icon

    சினிமா

    பேரறிவாளனை சந்தித்த சத்யராஜ் அங்கிருந்து திரும்பியபோது எடுத்தபடம்.
    X
    பேரறிவாளனை சந்தித்த சத்யராஜ் அங்கிருந்து திரும்பியபோது எடுத்தபடம்.

    பேரறிவாளனின் பரோலை நீட்டிக்க வேண்டும்: சத்யராஜ் கோரிக்கை

    பேரறிவாளனின் பரோலை அவருடைய தந்தையின் உடல்நிலையை கருத்தில் கொண்டு மேலும் நீட்டிக்க வேண்டும் என ஜோலார்பேட்டைக்கு வந்த நடிகர் சத்யராஜ் கூறினார்.
    முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று வேலூர் மத்திய ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ள பேரறிவாளன் ஒரு மாத பரோலில் ஜோலார்பேட்டையில் உள்ள அவரது வீட்டிற்கு வந்துள்ளார். அவரை பல்வேறு அரசியல் கட்சிகளை சேர்ந்த பிரமுகர்களும், நண்பர்களும், உறவினர்களும் சந்தித்து நலம் விசாரித்து வருகின்றனர்.

    இந்த நிலையில் பிரபல நடிகர் சத்யராஜ், வெளிநாட்டில் நடந்த படப்பிடிப்புகளை முடித்து விட்டு நேற்று பேரறிவாளனை பார்ப்பதற்காக ஜோலார்பேட்டைக்கு வந்தார். பழைய ஜோலார்பேட்டை தங்கவேல் தெருவில் உள்ள அவரது வீட்டுக்கு சென்றார். அங்கு பேரறிவாளனை பார்த்து நலம் விசாரித்ததோடு அவரது தந்தை ஞானசேகரன் என்ற குயில்தாசன், தாயார் அற்புதம்மாள் ஆகியோரையும் சந்தித்து பேசினார்.

    இதனை தொடர்ந்து வீட்டிலிருந்து வெளியே வந்த சத்யராஜ் நிருபர்களிடம் கூறியதாவது:-

    பேரறிவாளனையும் அவரது குடும்பத்தினரையும் சந்தித்ததில் மகிழ்ச்சியடைகிறேன். அவரை பரோலில் விடுதலை செய்ய நடவடிக்கை எடுத்த முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அரசுக்கு நான் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

    பேரறிவாளனை அவரது தந்தையின் உடல்நலனை கருத்தில் கொண்டு பரோலை அரசு மேலும் நீட்டிக்க வேண்டும்.

    மேலும் பேரறிவாளன் உள்பட இந்த வழக்கில் ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ள 7 பேரும் விடுதலை செய்ய தகுதியானவர்கள். எனவே அவர்கள் அனைவரையும் விடுதலை செய்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பின்னர் அவர் சென்னைக்கு புறப்பட்டுச் சென்றார்.
    Next Story
    ×