search icon
என் மலர்tooltip icon

    சினிமா

    பாவனா கடத்தல் வழக்கில் கைதான குற்றவாளி ஒன்றரை கோடி கேட்டு நடிகர் திலீப்புக்கு மிரட்டல் கடிதம்
    X

    பாவனா கடத்தல் வழக்கில் கைதான குற்றவாளி ஒன்றரை கோடி கேட்டு நடிகர் திலீப்புக்கு மிரட்டல் கடிதம்

    பாவனா கடத்தல் வழக்கில் கைதான குற்றவாளி நடிகர் திலீப்பிடம் ஒன்றரை கோடி கேட்டு மிரட்டல் கடிதம் எழுதியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
    தமிழ் மற்றும் மலையாளப் படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகை பாவனா. கடந்த பிப்ரவரி மாதம் கொச்சியில் நடந்த படப்பிடிப்பில் பங்கேற்று விட்டு நடிகை பாவனா ஒரு காரில் வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்தார். அதிகாலை நேரத்தில் கொச்சி புறநகர் பகுதியில் அவரது காரை ஒரு கும்பல் வழி மறித்தது.

    அதில் இருந்த நபர்கள் பாவனாவின் காருக்குள் ஏறிக் கொண்டனர். அவர்கள் ஓடும் காரில் பாவனாவுக்கு பாலியல் தொல்லை கொடுத்தனர். இதுபற்றி பாவனா போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து பாவனாவின் கார் டிரைவர் மற்றும் கூலிப்படையினர் உள்பட 5 பேரை கைது செய்தனர்.

    அவர்களிடம் நடத்திய விசாரணையில், இந்த சம்பவத்திற்கு மூளையாக செயல்பட்டது சுனில் என்ற பல்சர் சுனில் என தெரிய வந்தது. அவரையும் போலீசார் கைது செய்தனர். அவர், போலீசாரிடம் கூறும்போது, பாவனாவிடம் பணம் பறிக்கவே கடத்தல் சம்பவத்தில் ஈடுபட்டதாக கூறினார். ஆனால் பாவனா விவகாரத்தில் மலையாள திரையுலகின் முன்னணி நடிகருக்கு தொடர்பு இருப்பதாக சமூக ஊடகங்களில் தகவல் வெளியானது.



    அதில், நடிகை பாவனாவுக்கும், நடிகர் திலீப்புக்கும் இடையே ஏற்கனவே பிரச்சினை இருந்து வந்ததாகவும் அவர்தான் நடிகை பாவனா விவகாரத்தில் தொடர்புடையவர் என்றும் கூறப்பட்டது. இதனை திலீப் மறுத்தார். ஒருபோதும் இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டதில்லை என்றும், வேண்டுமென்றே எனது பெயரை கெடுப்பதற்காக சிலர் வதந்தி பரப்புவதாக கூறினார். அத்துடன் இந்த பிரச்சினை கிணற்றில் போடப்பட்ட கல் போல ஆனது.

    இதற்கிடையே பாவனா, வழக்கில் கைதான முக்கிய குற்றவாளி பல்சர் சுனில், அடைக்கப்பட்ட ஜெயில் அறையில் அவருடன் ஜின்சன் என்ற கைதியும் தங்க வைக்கப்பட்டார். அவர் பல்சர் சுனிலுடன் நெருங்கி பழகினார். அப்போது பல்சர் சுனில், பாவனா கடத்தல் விவகாரத்தில் வெளிவராத மற்றும் போலீசாரிடம் கூறாத சில முக்கிய தகவல்களை ஜின்சனுடன் பகிர்ந்து கொண்டார். அந்த தகவல்களை ஜின்சன் போலீஸ் உயர் அதிகாரிகளுக்கு கூறினார்.

    இதனால் நடிகை பாவனா வழக்கில் மீண்டும் திருப்பம் ஏற்பட்டது. கடந்த சில நாட்களுக்கு முன்பு நடிகை பாவனாவை இந்த வழக்கை விசாரிக்கும் பெண் ஏ.டி.ஜி.பி. சந்தியா அழைத்து பேசினார். அப்போது பாவனாவும் பல்வேறு புதிய தகவல்களை கூறினார்.

    இதையடுத்து பாவனா வழக்கு மீண்டும் சூடு பிடித்தது. விரைவில் மலையாள சினிமா நட்சத்திரம் ஒருவர் இந்த வழக்கில் சிக்குவார் என்று கூறப்பட்டது. அந்த நட்சத்திரம் யார்? என்று அனைவரும் எதிர்பார்த்து கொண்டிருந்த நிலையில் நடிகர் திலீப் திடீரென போலீஸ் டி.ஜி.பி.யை சந்தித்து ஒரு புகார் மனு அளித்தார்.

    அதில், பாவனா வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்டு ஜெயிலில் இருக்கும் பல்சர் சுனில் தனக்கு மிரட்டல் கடிதம் அனுப்பியிருப்பதாகவும், அவரது நண்பர் எனக்கூறி விஷ்ணு என்பவர் டெலிபோனில் ரூ.1½ கோடி பணம் கேட்டு மிரட்டுவதாகவும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கூறி இருந்தார்.



    இந்த நிலையில் நேற்று திலீப்புக்கு பல்சர் சுனில், காக்கநாடு சப்-ஜெயிலில் இருந்து எழுதிய கடிதம் ஜெயில் முத்திரையுடன் சமூக ஊடகங்களில் வெளியானது. கடந்த ஏப்ரல் மாதம் 12-ந்தேதி அந்த கடிதம் எழுதப்பட்டுள்ளது. திலீப் அண்ணா, நான் சுனில். ஜெயிலில் இருந்து இந்த கடிதத்தை எழுதுகிறேன். இப்போது எனக்கு மிகவும் கஷ்டமாக இருக்கிறது. வழக்கை நடத்தவும், மற்ற செலவுகளுக்கும் பணம் தேவைப்படுகிறது. எனவே எனக்கு உடனே பணம் தரவும். அந்த பணத்தை இந்த கடிதம் கொண்டு வரும் நண்பன் விஷ்ணுவிடம் கொடுக்க வேண்டும். இந்த கடிதம் கொண்டு வரும் நண்பருக்கு வழக்கு பற்றி எதுவும் தெரியாது.

    எனவே நீங்களும் அவரிடம் எதுவும் பேச வேண்டாம். பணத்தை மட்டும் கொடுத்து விடவும். ஒரே தவணையாக கொடுக்க முடியாவிட்டால் 5 மாதங்களில் 5 தவணையாக கொடுக்கவும். உங்களைதான் மிகவும் நம்பி இருக்கிறேன். இந்த வழக்கில் உங்களது பெயரை கூறுமாறு மலையாள நடிகர், ஒரு நடிகை மற்றும் டைரக்டர் ஒருவர் என்னிடம் அடிக்கடி வலியறுத்தி வருகிறார்கள்.

    இதற்காக அதிக பணம் தருவதாகவும் ஆசை காட்டி வருகிறார்கள். ஆனால் நான், உங்களின் நம்பிக்கைக்கு உரியவன். எனவே நான் எதையும் கூறவில்லை. ஆனால் இப்படியே எப்போதும் இருப்பேன் என்று கூற முடியாது. உங்கள் முடிவு உடனே தெரியாவிட்டால் என்ன வேண்டுமானாலும் நடக்கும். தங்களின் விசுவாசமுள்ள பல்சர் சுனில் என அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

    இந்த கடிதத்தின் நகலையும், பல்சர் சுனிலின் நண்பன் விஷ்ணு டெலிபோனில் பேசிய பேச்சுக்களின் பதிவையும் போலீசாரிடம் திலீப் கடந்த ஏப்ரல் மாதமே அளித்துள்ளார். ஆனால் இப்போதுதான் இந்த விவகாரம் சூடு பிடிக்க தொடங்கி உள்ளது. விசாரணை தீவிரமாகும் போது மேலும் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாவதோடு முக்கிய நபர்களும் கைதாகலாம் என்ற பரபரப்பு மலையாள திரையுலகில் ஏற்பட்டுள்ளது.
    Next Story
    ×