search icon
என் மலர்tooltip icon

    சினிமா

    சினிமா பாடலாசிரியர் நா.காமராசன் மரணம்
    X

    சினிமா பாடலாசிரியர் நா.காமராசன் மரணம்

    600-க்கும் மேற்பட்ட பாடல்களை எழுதிய சினிமா பாடலாசிரியர் நா.காமராசன் சென்னையில் நேற்று இரவு மரணம் அடைந்தார். அவருடைய இறுதிச்சடங்கு இன்று நடக்கிறது.
    எம்.ஜி.ஆர். நடித்த ‘பல்லாண்டு வாழ்க’ படத்தில் ‘போய் வா நதியலையே...’ என்ற பாடல் எழுதியதின் மூலம் பிரபலமானவர், பாடலாசிரியர் நா.காமராசன். ரஜினிகாந்த் நடித்த ‘நல்லவனுக்கு நல்லவன்’ படத்தில் ‘சிட்டுக்கு செல்ல சிட்டுக்கு ஒரு சிறகு முளைத்தது...’, ‘தங்கமகன்’ படத்தில் ‘அடுக்கு மல்லியே...’, பாலுமகேந்திரா டைரக்டு செய்த ‘மறுபடியும்’ படத்தில் ‘ஆசை அதிகம் வச்சு...’ உள்பட 600-க்கும் மேற்பட்ட பாடல்களை இவர் எழுதி இருந்தார்.

    ஏராளமான புதுக்கவிதைகளை எழுதி, பல விருதுகளை பெற்று உள்ளார். எம்.ஜி.ஆர். ஆட்சியில் அரசவை கவிஞராக பதவி வகித்தார். தமிழக அரசின் ‘கலைமாமணி’ விருதையும் பெற்றிருந்தார்.

    கடந்த சில மாதங்களாகவே நா.காமராசன் உடல்நலக்குறைவாக இருந்தார். நேற்று இரவு அவருடைய உடல்நிலை திடீரென்று மோசமானது. உடனடியாக சென்னையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அவரை சேர்த்தார்கள். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் இரவு 9 மணியளவில் அவர் மரணம் அடைந்தார். அவருடைய இறுதி சடங்கு சென்னையில் இன்று (வியாழக்கிழமை) நடக்கிறது.

    மரணம் அடைந்த நா.காமராசனுக்கு வயது 75. அவருடைய சொந்த ஊர் போடிநாயக்கனூர் அருகே உள்ள மீனாட்சிபுரம் என்ற கிராமம் ஆகும். பல வருடங்களாக சென்னை கோடம்பாக்கத்தில் குடும்பத்துடன் வசித்து வந்தார்.
    Next Story
    ×