search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வேதநாராயண பெருமாள் கோவில்"

    தொட்டியம் அருகே திருநாராயணபுரம் வேதநாராயண பெருமாள் கோவிலில் வைகாசி திருவிழா தேரோட்டம் நடைபெற்றது. இதில், திரளான பக்தர்கள் கலந்துகொண்டு தேரை வடம் பிடித்தனர்.
    திருச்சி மாவட்டம், தொட்டியம் அருகே உள்ள திருநாராயணபுரத்தில் சிறப்பு வாய்ந்த வேதநாராயண பெருமாள் சமேத வேதநாயகித் தாயார் கோவில் உள்ளது. வைணவத் தலங்களில் ஆதிரங்கம் என்றழைக்கப்படும் இக்கோவில் தமிழகத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற பெருமாள் கோவில் ஆகும். இங்கு பெருமாள் 4 வேதங்களை தலையணையாக கொண்டு பிரம்மாவிற்கு வேத உபதேசம் செய்து ஸ்ரீதேவி, பூதேவியுடன் காட்சியளிக்கிறார்.

    இதனால், தன்னை வணங்க வரும் மாணவ-மாணவிகளுக்கு கல்வி செல்வத்தை அள்ளித் தருகிறார். மேலும் பிரகலாத ஷேத்திரம், அரயருக்கு மோட்சம் தந்த தலம் என பல சிறப்புகளை பெற்ற இக்கோவிலில் ஆண்டுதோறும் வைகாசி மாதத்தில் திருவோண நட்சத்திரத்தில் வைகாசித்திருவிழா நடைபெறுவது வழக்கம்.

    அதன்படி, இந்த ஆண்டு வைகாசித்திருவிழா கடந்த மாதம் 25-ந்தேதி தொடங்கியது. அதைத் தொடர்ந்து பெருமாள், துவஜா ரோஹனம், ஹம்ச வாகனம், சிம்மம், கருடன், ஹனுமந்த வாகனம், யானை, குதிரை, நம்பிரான் ஆகிய வாகனங்களில் வீதியுலா வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தார். அதனைத்தொடர்ந்து சூர்ணாபிஷேகம், நெல் அளவு கண்டருளுதல், உபநாச்சியாருடன் திருக்கல்யாண உற்சவம் ஆகியவை நடைபெற்றன.


    ஸ்ரீதேவி, பூதேவியுடன் தேரில் எழுந்தருளிய வேதநாராயண பெருமாள்.

    விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று நடைபெற்றது. முன்னதாக காலை வேதநாராயணப்பெருமாள் மற்றும் உபநாச்சியார்களுக்கு மஞ்சள், திருமஞ்சனம், பஞ்சாமிர்தம், பால், தயிர், இளநீர், பன்னீர், சந்தனம் மற்றும் பழ வகைகளால் 12 வகையான அபிஷேகம் செய்யப்பட்டு, பின்னர் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு ஸ்ரீரங்கத்தில் இருந்து உபயதாரர் வாங்கி வந்த கிளி மாலை அணிவிக்கப்பட்டு, ஸ்ரீதேவி மற்றும் பூதேவியுடன் பெருமான் தேரில் எழுந்தருளினார்.

    காலை 10 மணிக்கு பக்தர்கள் கோவிந்தா, கோவிந்தா கோஷம் முழங்க தேரை வடம் பிடித்து இழுத்தனர். நான்கு வீதிகள் வழியாக கோவிலை வலம் வந்த தேர், 12 மணிக்கு நிலையை வந்தடைந்ததும் பூஜைகள் மற்றும் தீபாராதனை நடைபெற்றது. பின்னர் அன்னதானம் வழங்கப்பட்டது.

    தேரோட்டத்தில் நாமக்கல், எருமபட்டி, முசிறி, தொட்டியம், காட்டுப்புத்தூர், பாலசமுத்திரம், மணமேடு, மோகனூர் ஆகிய பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் பணியாளர்களும், கிராம மக்களும் செய்திருந்தனர். 
    ×