search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வெல்லும் சனநாயகம் மாநாடு"

    • ஜெயலலிதா, கருணாநிதி இல்லை என தமிழகத்தில் பாஜக சடுகுடு விளையாட முயன்றால் அதை தடுத்து நிறுத்தும் சக்தி விடுதலை சிறுத்தைகளுக்கு உண்டு.
    • தமிழகம் மட்டுமல்லாமல் நாடு முழுவதும் இந்தியா கூட்டணி அமோக வெற்றி பெறும்.

    திருச்சி:

    திருச்சி சிறுகனூரில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் வெல்லும் சனநாயகம் எனும் தலைப்பில் பிரமாண்ட மாநாடு நடைபெற்றது. இதில் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பி. தலைமை தாங்கினார். பொதுச்செயலாளர் ரவிக்குமார் நோக்க உரையாற்றினார். பொதுச்செயலாளர் சிந்தனைச் செல்வன் வரவேற்றார்.

    சிறப்பு விருந்தினராக தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-

    நானும் திருமாவளவனும் எப்போதும் தமிழினத்தின் உரிமைக்கு வலு சேர்க்கிற அடிப்படையில் தான் இணைந்திருக்கிறோம். நமக்குள் இருப்பது தேர்தல் உறவு அல்ல. அரசியல் உறவு அல்ல. கொள்கை உறவு. தந்தை பெரியாரையும், புரட்சியாளர் அம்பேத்கரையும் யாராவது பிரிக்க முடியுமா? அதுபோலத்தான் திராவிட முன்னேற்றக் கழகமும் விடுதலை சிறுத்தைகளும்.

    சமூகநீதி, சமத்துவ சிந்தனை கொண்ட ஆட்சியை நாடு முழுவதும் அமைக்க வேண்டும் என்று தான் இந்த மாநாட்டை திருமாவளவன் நடத்தி இருக்கிறார்.

    இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் சொல்லப்பட்டுள்ள மக்களாட்சி மாண்புகள் காக்கப்பட வேண்டுமானால் ஜனநாயகம் வெல்ல வேண்டும்.

    இந்தியாவின் ஜனநாயகத்தை, பன்முகத் தன்மையை, ஒடுக்கப்பட்ட ஏழை எளிய மக்களை காப்பாற்ற வேண்டுமானால் பாஜக மீண்டும் ஆட்சிக்கு வரக்கூடாது.

    இதுதான் நமது இலக்கு. பாரதிய ஜனதா மீண்டும் ஆட்சிக்கு வந்தால் இந்தியா என்ற கூட்டாட்சி அமைப்பே இருக்காது. ஜனநாயக அமைப்பு முறையே இருக்காது. பாராளுமன்ற நடவடிக்கையே இருக்காது. ஏன்? மாநிலங்களே இருக்காது. இதை எல்லோரும் உணர்ந்து கொள்ள வேண்டும். மாநிலங்களை கார்ப்பரேஷன்களாக மாற்றி விடுவார்கள்.

    பாரதிய ஜனதா ஆட்சிக்கு வரக்கூடாது என்ற ஒற்றை லட்சியம் தான் எல்லோருக்கும் இருக்க வேண்டும். பாஜகவுக்கு எதிரான வாக்குகள் எந்த காரணத்திலும் சிதற கூடாது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    மாநாட்டில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் பேசியதாவது:-

    இந்த மாநாடு மாபெரும் வெற்றி பெற்றுள்ளது. இங்கே திரண்டு வந்த தொண்டர்களின் வாகனங்கள் நெரிசலில் சிக்கியதால் பலராலும் மாநாட்டு திடலுக்கு வர இயலவில்லை.

    இந்த மாநாடானது பாஜக, ஆர்.எஸ்.எஸ்., சனாதன சக்திகளுக்கு எதிரானது. இது வெறும் தேர்தல் அரசியல் கணக்கல்ல நாட்டைக் காக்க, நாட்டு மக்களை காக்க வேண்டும் என்பதற்கானது. இன்றைக்கு ஜனநாயகத்திற்கு பேராபத்து சூழ்ந்துள்ளது. அம்பேத்கர் வகுத்து தந்த அரசியல் அமைப்பு சட்டத்துக்கு ஆபத்து வந்துள்ளது. ராமர் கோவிலை கட்டி முடிக்கும் முன்பாக திறந்திருக்கிறார்கள். இது யாரை எய்ப்பதற்காக?

    ராமர் பக்தியை நாம் எதிர்க்கவில்லை. ராமர் அரசியலை தான் எதிர்க்கிறோம்.

    அம்பேத்கரின் அரசியலமைப்புச் சட்டத்தை தூக்கி எறிய சனாதன சக்திகள் முயற்சிக்கிறது. மதுரை தூக்கி எறிந்தால் நாடு என்னாகும்? நாமெல்லாம் தலை நிமிர்ந்து வீதிகளில் நடமாட முடியுமா? சமூக நீதியை பாதுகாக்க முடியுமா? இட ஒதுக்கீட்டினை பெற முடியுமா? நம் குழந்தைகள் உயர்கல்வியை பெற முடியுமா? என்பதை நீங்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும். அப்பாவி உழைக்கும் சூத்திர இந்துக்கள் விழிப்பாக இருக்க வேண்டும். தமிழகம் சிறுத்தைகள் மாநிலம்.

    சிறுத்தைகள் இருக்கும் ஊரில் ஆட்டுக்குட்டிகள் வந்து பார்த்தால் என்ன நிலை என்பது தெரியும்.

    தமிழகத்தை பாதுகாக்க படை வீரர்களாக விடுதலை சிறுத்தைகள் கட்சி படை வீரர்கள் இருக்கிறார்கள். உங்கள் கனவு தமிழகத்தில் பலிக்காது.

    இந்தியர்களின் கருப்பு பணத்தை மீட்டு வந்து ஒவ்வொருவரது வங்கி கணக்கிலும் ரூ. 15 லட்சம் செலுத்துவதாக மோடி கூறினார். ஆனால் அவர்கள் கருப்பு பணத்தைப் பற்றி இப்போது பேசுவதே கிடையாது. மோடியும் ,அமித் ஷாவும் அதானிக்கும் சேவை செய்வதையே வேலையாக கொண்டுள்ளார்கள்.

    நரேந்திர மோடி உலக மகா நடிகர்.

    பத்தாண்டு கால ஆட்சியில் இந்த திட்டத்தை நாங்கள் நிறைவேற்றி இருக்கிறோம் என்று அவர்களால் சொல்ல முடியுமா? விஜய் மல்லையா உள்பட வட இந்திய தொழிலதிபர்களின் பல லட்சம் கோடி கடனை தள்ளுபடி செய்திருக்கிறார்கள். நீங்களோ நானோ படிப்பதற்கு கல்வி கடன் கேட்டால் தருகிறார்களா?

    இது மோடியை ஆட்சி அதிகார பீடத்திலிருந்து துரத்தி அடிக்கும் மாநாடு.

    ஜெயலலிதா, கருணாநிதி இல்லை என தமிழகத்தில் பாஜக சடுகுடு விளையாட முயன்றால் அதை தடுத்து நிறுத்தும் சக்தி விடுதலை சிறுத்தைகளுக்கு உண்டு. தமிழகம் மட்டுமல்லாமல் நாடு முழுவதும் இந்தியா கூட்டணி அமோக வெற்றி பெறும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த மாநாட்டில் அமைச்சர்கள் கே.என். நேரு, அன்பில் மகேஷ் பொய்யா மொழி, ஏ.வ. வேலு, எஸ். எஸ்.சிவசங்கர், எம்பிக்கள் ஆ.ராசா, திருநாவுக்கரசர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தேசிய பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தேசிய செயலாளர் டி. ராஜா, சி பி.ஐ. (எம்.எல்.) விடுதலை தீபங்கர் பட்டாச்சாரியார், திராவிடர் கழக தலைவர் கி. வீரமணி, தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் பாலகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் முத்தரசன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் காதர் மொய்தீன், மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா, தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன், சிபிஐ (எம்.எல்.) மாநிலச் செயலாளர் ஆசைத்தம்பி, ஆம் ஆத்மி கட்சி தலைவர் வசீகரன் ஆகியோர் பேசினர். இதில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் சிதம்பரம் பாராளுமன்ற தொகுதி தேர்தல் மேலிட பொறுப்பாளரும் மாநாட்டு பொறுப்பாளருமான பெரம்பலூர் இரா.கிட்டு.

    தொழிலாளர் விடுதலை முன்னணி மாநில நிர்வாகி மாநகராட்சி கவுன்சிலர் பிரபாகரன், திருச்சி கரூர் மண்டல துணை செயலாளர் ராஜா மன்னன், புதுக்கோட்டை வடக்கு மாவட்டம் கந்தர்வகோட்டை சட்டமன்ற தொகுதி செயலாளர் மருத பார்வேந்தன்,

    கரூர் கிழக்கு மாவட்ட செயலாளர் சக்திவேல் என்கிற ஆற்றலரசு, அரியலூர் கிழக்கு மாவட்ட செயலாளர் கதிர்வளவன், மேற்கு மாவட்ட செயலாளர் அங்கனூர் சிவா, அரசு ஊழியர் அய்க்கிய பேரவை மாவட்ட செயலாளர் அண்ணாதுரை, சிதம்பரம் பாராளுமன்ற தொகுதி செயலாளர் வ.க. செல்லப்பன் மற்றும் திரளான கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

    மாநாட்டில் 33 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இந்த நிலையில் மாநாடு குறித்து வி.சி.க. தலைவர் தொல்.திருமாவளவன் தனது சமூக வலைதள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

    சட்டமேதை அம்பேத்கர் வழியில் அரசமைப்பு சட்டம் நடைமுறைக்கு வந்த நாளில் அதன் அடிப்படை விழுமியங்களை காக்க திருச்சியில் திரண்டனர் லட்சக்கணக்கான விடுதலை சிறுத்தைகள். வெல்லும் சனநாயகம் மாநாடு வென்றது.

    இவ்வாறு திருமாவளவன் அதில் தெரிவித்து உள்ளார்.

    ×