search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வீட்டுக்கொரு நூலகம் அமைப்போம்"

    • புத்தகம் வாசிக்கும் பழக்கம் இளம் தலைமுறையினரிடையே குறைந்து வருகிறது.
    • புத்தகம் படிக்கும் வகையில் வாசிப்பு நேரத்தை ஏற்படுத்த வேண்டும்.

    வீட்டிற்கு ஒரு நூலகம் புத்தகம் வாசிக்கும் பழக்கம் இளம் தலைமுறையினரிடையே குறைந்து வரும் இந்த சூழலில் வீட்டில் ஒரு சிறிய நூலகம் அமைக்க முயற்சிக்கலாம். அதில் வீட்டில் உள்ள ஒவ்வொருவருக்கும் ஒரு இடத்தையும் ஒதுக்கலாம். அவ்வாறு செய்யும் போது அந்த இடத்தை நிரப்ப அவர்களாகவே ஆர்வத்துடன் புத்தகங்களை வாங்குவார்கள்.

    அங்கு குடும்பமாய் அனைவரும் அமர்ந்து புத்தகம் படிக்கும் வகையில் வாசிப்பு நேரத்தை ஏற்படுத்த வேண்டும். ஆரம்ப காலகட்டத்தில் அனைவரும் தினமும் பத்து நிமிடமாவது புத்தகம் வாசிக்கும் முயற்சியை முன்னெடுக்க வேண்டும். வார விடுமுறை நாளில் அனைவரும் ஒன்றாய் அமர்ந்து, வாரம் முழுமையும் வாசித்ததையும், வாசிக்கும் போது தங்களுக்குள் எழுந்த உணர்வுகளையும், வாசித்து முடித்த பின்பு தங்களுக்குள் எழுந்த மாற்றங்களையும் பகிர்ந்து கொள்ளலாம்.

    இந்த முயற்சியை பெற்றோர் முன்னெடுக்கும்போது குழந்தைகளும் தானாகவே முன் வந்து பின்பற்ற தொடங்குவார்கள். இந்த பழக்கத்தை குடும்பத்தின் அன்றாட வழக்கமாக்கி விட்டால் இது குடும்பத்திற்கு மட்டுமின்றி வருங்கால தலைமுறைகளும் பின்பற்றும் குடும்ப பாரம்பரியமாகவே மாறிவிடும்.

    குடும்பமாக பல இடங்களுக்கு சென்று பொருட்களையும், உடைகளையும் பார்த்து பார்த்து வாங்கும் நாம், குடும்பமாய் இணைந்து புத்தகக்கண்காட்சிக்கு சென்று புத்தகங்களை பார்த்து பார்த்து வாங்கலாம். இந்த ஆண்டில் வாங்க வேண்டிய பொருட்களுக்கு பட்ஜெட் போடும்போது புத்தகங்கள் வாங்கவும் பட்ஜெட் போடலாம்.

     புதிய வீடு கட்டும் போது குடும்பத்தினர் அனைவருக்கும் தேவையான எல்லா அறைகளையும் கட்டும்போது புத்தகங்களுக்கு என்று தனி அறை கட்டி அதை மினி நூலகமாக மாற்றலாம். இட வசதி இல்லாதவர்கள் அறையாக கட்ட முடியாவிட்டாலும், தங்கள் வீட்டில் இருக்கும் இடத்தில் புத்தகங்களை வைப்பதற்கு ஒரு சிறிய இடத்தை ஒதுக்கலாம். அந்த இடம் அனைவரின் கண்ணில் படும் இடமாக இருக்கட்டும்.

    அடிக்கடி புத்தகங்களைப் பார்க்கும் போது அதனை வாசிக்க வேண்டும் என்ற உள்ளுணர்வு சுயமாகவே ஏற்பட்டு விடும். அது மட்டுமின்றி வீட்டிற்கு வருகிற விருந்தினர்கள் பார்க்கும் இடத்திலும் புத்தகங்கள் இருந்தால் அது அவர்களையும் வாசிக்க தூண்டும்.

    அவர்களுக்கு உணவு விருந்து கொடுப்பதோடு சேர்த்து புத்தக விருந்தும் அளிக்கலாம். அதாவது புத்தகங்களை பரிசாக கொடுக்கலாம். வாசிப்பு ஒரு மகத்தான செயல்பாடு. பாடப்புத்தகத்தையும், துறை சார் புத்தகத்தையும் கடந்து பிற புத்தகங்களை வாசிக்கும்போது பரந்துபட்ட அறிவும் எல்லாவற்றையும் புரிந்து கொள்ள முயற்சிக்கும் மன நிலையும் ஏற்படும். உட்கார்ந்து வாசிக்கும் போது நேரத்தை நாம் பயனுள்ளதாய் மாற்றுகிறோம்.

    ஒரு புத்தகத்தை வாசிக்கும் போது நாம் நம் நிலையில் இருந்து கடந்து மற்றவர் நிலையை, அவர்களது இன்ப துன்பங்களை புரிந்து கொள்கிறோம். வாசிப்பு, அறிவை பெருக்குவதையும் கடந்து நம்மை பக்குவப்பட்ட மனிதர்களாகவும் மாற்றுகிறது.

    எது சரி, எது தவறு என முடிவு எடுக்கும் புரிதலை தருகிறது. ஒரு தளத்தில் மட்டும் சாயாது நடுநிலையோடு பயணிக்க வாசிப்பு உதவுகிறது. இத்தகைய மகத்தான மாற்றத்தை நம்மில் விதைக்கும் வாசிப்பை நேசிப்போம். நாமும் வாசிக்க, பிறரையும் வாசிக்க வைக்க வீட்டுக்கொரு நூலகம் அமைப்போம்!

    ×