search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வீடு ஏலம்"

    • திருச்சூர் மாவட்டம் வரந்தரப்பள்ளி பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் அதே பகுதியை சேர்ந்த மாணவி ஒருவர் 6-ம் வகுப்பு படித்து வருகிறார்.
    • மாணவர்கள் ரூ.100 முதல் ரூ.7ஆயிரம் வரை தங்களின் பங்களிப்பை கொடுத்தனர்.

    திருவனந்தபுரம்:

    பள்ளி நட்பு என்பது அனைவரின் வாழ்விலும் மறக்க முடியாததாக இருக்கும். அந்த காலக்கட்டத்தில் ஒருவருக்கொருவர் சிறிய உதவிகளை செய்து கொள்வது சகஜமான ஒன்று. ஆனால் மாணவியின் பெற்றோர் வாங்கிய கடனை, அவருடன் படிக்கும் சக மாணவர்கள் அடைத்திருக்கிறார்கள்.

    இதன் மூலம் அவர்களது வீடு ஏலம் போவதை தடுத்துள்ளனர். கேரளாவில் நடந்த அந்த சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:-

    கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டம் வரந்தரப்பள்ளி பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் அதே பகுதியை சேர்ந்த மாணவி ஒருவர் 6-ம் வகுப்பு படித்து வருகிறார். அந்த மாணவியின் பெற்றோர் வங்கி ஒன்றில், வீட்டுக்கடன் வாங்கியிருக்கின்றனர். ஆனால் அவர்களால் கடன் தொகையை திருப்பி செலுத்த முடியவில்லை.

    இதனால் அவர்களது வீடு ஏலத்துக்கு வந்தது. கடன் தொகை கட்ட முடியாததால் மாணவியின் வீடு ஏலத்துக்கு வருவதை, மாணவியின் உடன்படிக்கும் மற்ற மாணவர்கள் அறிந்தனர். அவர்கள் அந்த மாணவிக்கு உதவ முடிவு செய்தனர்.

    மாணவியின் பெற்றோர் வங்கிக்கு மொத்தம் ரூ.2 லட்சத்து 59 ஆயிரத்து 728 செலுத்த வேண்டும். அதனை நன்கொடை மூலம் வசூலிக்க மாணவர்கள் முடிவு செய்தனர். அது பற்றி தங்களது பள்ளி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு தெரிவித்தனர். இதனால் அந்த மாணவியின் குடும்பத்துக்கு உதவ அனைவரும் முன் வந்தனர்.

    இதற்காக மாணவி படிக்கும் பள்ளியில் பொது இடத்தில் ஒரு பெட்டி வைக்கப்பட்டது. அதில் மாணவர்கள் தங்களின் பங்குக்கு பணம் செலுத்தினார்கள். மாணவர்கள் ரூ.100 முதல் ரூ.7ஆயிரம் வரை தங்களின் பங்களிப்பை கொடுத்தனர்.

    மாணவர்கள் மொத்தம் ரூ.1.70 லட்சம் கொடுத்தார்கள். அது மட்டுமின்றி ஆசிரியர்கள் ரூ.1.28 லட்சம் நிதி திரட்டினார்கள். மொத்தத்தில் ரூ.2 லட்சத்து 98 ஆயிரம் நிதி வசூலிக்கப்பட்டது. மாணவியின் பெற்றோர் வங்கிக்கு செலுத்த வேண்டிய 2 லட்சத்து 59 ஆயிரத்து 728 ரூபாயை, வீடு ஏலத்துக்கு வரும் 2 நாட்களுக்கு முன்னதாகவே கொடுக்கப்பட்டது.

    இதன்மூலம் மாணவியின் வீடு ஏலத்துக்கு வரவில்லை. மேலும் வங்கிக்கு செலுத்தியது போக மீதியிருந்த பணம், மாணவியின் பெயரில் வங்கியில் டெபாசிட் செய்யப்பட்டது. உடன் படிக்கும் மாணவர்களின் இந்த செயல், மாணவியின் பெற்றோரை நெகிழ்ச்சியடைய செய்தது. அவர்கள் மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் நன்றி தெரிவித்தனர்.

    மாணவர்களின் இந்த செயலுக்கு, அவர்கள் படித்த பள்ளியின் முதல்வர், ஆசிரியர்கள் என பலரும் உறுதுணையாக இருந்தனர் .

    ×