search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "விளாத்திகுளம் தபால்"

    • தபால் நிலையத்தில் உள்ள அறிவிப்பு பலகையில் முற்றிலும் இந்தி மொழியில் ஒரு அறிவிப்பு போஸ்டர் ஒட்டப்பட்டிருந்தது.
    • போஸ்டரை தமிழிலும், ஆங்கிலத்திலும் ஒட்ட வேண்டும் என்று பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    விளாத்திகுளம்:

    தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் மதுரை சாலையில் உள்ள தனியார் கட்டிடத்தில் முதல் தளத்தில் விளாத்திகுளம் கிளை தபால் அலுவலகம் செயல்பட்டு வருகிறது.

    விளாத்திகுளம் சுற்றுவட்டார பகுதியில் உள்ள சுமார் 50-க்கும் மேற்பட்ட கிராம பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் பெரும்பாலானோர் பதிவு தபால், விரைவு தபால் உள்ளிட்ட பல்வேறு சேவைகளை பெறுவதற்கு இந்த தபால் நிலையத்திற்கு வந்து செல்கின்றனர். தற்போது ஆதார் திருத்த பணிகளும் தபால் அலுவலகத்தில் நடை பெறுவதால் இங்கு தினமும் 200-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வந்து செல்கின்றனர்.

    இந்நிலையில் அந்த தபால் நிலையத்தில் உள்ள அறிவிப்பு பலகையில் முற்றிலும் இந்தி மொழியில் ஒரு அறிவிப்பு போஸ்டர் ஒட்டப்பட்டிருந்தது. இதனை அங்கு வந்த கிராம மக்கள் பலரும் பார்த்து விட்டு குழப்பம் அடைந்து வருகின்றனர்.

    அந்த அறிவிப்பு குறித்து தபால் அலுவலக ஊழியர்களிடம் கேட்ட போது, இணைய வழியில் மோசடி செய்பவர்களை புகார் செய்வதற்கான இணையதளம் பற்றிய தகவலும், அதற்கான இலவச தொலைபேசி எண்ணும் மற்றும் அதற்கான வழிமுறைகளும் குறித்து அதில் விளக்கபட்டுள்ளதாக தெரிவித்தனர்.

    விளாத்திகுளம் தபால் அலுவலகத்தை பயன்படுத்தி வரும் அப்பகுதி கிராம மக்களுக்கு இந்தி தெரியாததால் தபால் அலுவலகம் முன்பு ஒட்டப்பட்டுள்ள இந்தி வழிகாட்டு முறை போஸ்டரால் எந்த பயனும் இல்லை. எனவே சம்பந்தப்பட்ட தபால் துறையினர் இணைய வழி புகார், இணையதளம் மற்றும் தொலைபேசி எண், வழிகாட்டி முறைகள் அடங்கிய போஸ்டரை தமிழிலும், ஆங்கிலத்திலும் ஒட்ட வேண்டும் என்று பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ×