search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ரஞ்சி டிராபி கோப்பை"

    • முதல் இன்னிங்சில் ரியான் பராக் 8 ரன்களில் ஆட்டமிழந்தார்.
    • 2-வது இன்னிங்சில் அவர் 155 ரன்கள் குவித்து அவுட் ஆனார்.

    இந்தியாவில் விறுவிறுப்பாக துவங்கியுள்ள 2024 ரஞ்சிக் கோப்பையில் ஜனவரி 5ஆம் தேதி துவங்கிய 5-வது லீக் போட்டியில் அசாம் மற்றும் சட்டீஸ்கர் கிரிக்கெட் அணிகள் மோதின. ராய்ப்பூர் நகரில் துவங்கிய இந்தப் போட்டியில் டாஸ் வென்ற அசாம் முதலில் பந்து வீசுவதாக அறிவித்ததை தொடர்ந்து களமிறங்கிய சட்டீஸ்கர் அணி முதல் இன்னிங்சில் போராடி 327 ரன்கள் எடுத்தது.

    அதிகபட்சமாக அமன்தீப் காரே சதமடித்து 116 ரன்களும் சாசங் சிங் 82 ரன்களும் எடுத்தனர். அசாம் தரப்பில் ஆகாஷ் செங்குப்த்தா மற்றும் முக்தர் ஹுசைன் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர். அதைத் தொடர்ந்து களமிறங்கிய அசாம் அணி சட்டீஸ்கர் பந்து வீச்சை தாக்குப் பிடிக்க முடியாமல் சீரான இடைவெளிகளில் விக்கெட்டுகளை இழந்து 159 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி ஃபாலோ ஆன் பெற்றது.

    அதைத்தொடர்ந்து 168 ரன்கள் பின் தங்கிய நிலைமையில் ஃபாலோ ஆன் பெற்று பேட்டிங் செய்த அசாம் அணிக்கு ரிசவ் தாஸ் 17, ராகுல் ஹசகிரா 39, கடிகோன்கர் 16 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தனர். அந்த நிலைமையில் 4-வது இடத்தில் களமிறங்கிய கேப்டன் ரியான் பராக் அதிரடியாக விளையாடி வெற்றிக்கு போராடினார். அதிரடியாக விளையாடிய அவர் 56 பந்துகளில் சதம் விளாசினார். இதன் மூலம் ரஞ்சிக் கோப்பை வரலாற்றில் அதிவேகமாக சதம் அடித்த 2-வது வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார்.

    இதற்கு முன்பாக கடந்த 2016 ரஞ்சிக்கோப்பையில் டெல்லி அணிக்காக ரிஷப் பண்ட் 48 பந்துகளில் சதம் விளாசி முதல் இடத்தில் உள்ளார். அதே வேகத்தில் அட்டகாசமாக விளையாடிய ரியான் பராக் 11 பவுண்டரி 12 சிக்சருடன் 155 (87) ரன்களை 178.16 என்ற அதிரடியான ஸ்ட்ரைக் ரேட்டில் விளாசி அசாம் அணிக்கு முன்னிலை பெற்றுக் கொடுத்து அவுட்டானார்.

    அடுத்து வந்த வீரர்கள் ஒற்றை இலக்க ரன்களில் ஆட்டமிழக்க அசாம் அணி 254 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. மீண்டும் சுருட்டிய சட்டீஸ்கர் சார்பில் ஜிவேஷ் புட்டே, வாசுதேவ் பாரேத் தலா 3 விக்கெட்டுகளை எடுத்தார்கள். இறுதியில் 87 ரன்களை துரத்திய சட்டீஸ்கர் அணிக்கு ஏக்நாத் கேர்கர் 31*, ரிசப் திவாரி 48* ரன்கள் அடித்து 10 விக்கெட் வித்தியாசத்தில் எளிதான வெற்றியை பெற்றுக் கொடுத்தனர். அந்த வகையில் கேப்டனாக விளையாடிய ரியான் பராக் தன்னுடைய ஐபிஎல் செயல்பாடுகள் மீதான விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்து மாநில அணியை குறைந்தபட்சம் தனி ஒருவனாக இன்னிங்ஸ் தோல்வியிலிருந்து காப்பாற்றினார்.

    ×