search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "முழக்க மாநாடு"

    • வணிகர் உரிமை முழக்க மாநாடு டெக்ஸ்வேலி மைதானத்தில் நாளை நடைபெறுகிறது.
    • மாநாட்டை முன்னிட்டு கடைகள் அனைத்திற்கும் நாளை விடுமுறை அளிக்கப்படுகிறது.

    ஈரோடு:

    தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் 40-வது வணிகர் தினத்தையொட்டி வணிகர் உரிமை முழக்க மாநாடு என்ற தலைப்பில் ஈரோடு டெக்ஸ்வேலி மைதானத்தில் நாளை (வெள்ளிக்கிழமை) மாநில தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா தலைமையில் நடைபெறுகிறது.

    மாநாட்டின் முதல் நிகழ்ச்சியாக காலை 8.30 மணி அளவில் வணிகக் கொடி ஏற்றும் விழா நடைபெற உள்ளது. கோவை மண்டல தலைவர் சூலூர் டி.ஆர்.சந்திரசேகரன் வணிகக்கொடியை ஏற்றுகிறார். அகில இந்திய வணிகர் சம்மேளனம் தேசிய தலைவர் பி.சி.பார்டியா, தேசிய பொதுச்செயலாளர் பிரவீண் கண்டேல்வால் ஆகியோர் மாநாட்டினை தொடங்கி வைத்து பேசுகின்றனர்.

    தமிழ்நாடு வீட்டு வசதி மற்றும் நகர்புற வளர்ச்சித்துறை அமைச்சர் முத்துசாமி, மின்சாரம் மற்றும் மதுவிலக்கு, ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி, வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆகியோர் மாநாட்டில் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்று பேசுகின்றனர்.

    மேலும் விருதுகளையும், மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை, நலிந்த வணிகர்களுக்கு நலத்திட்ட உதவிகளையும் அமைச்சர்கள் வழங்குகின்றனர்.

    முன்னதாக செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் மாநாட்டுத் திடலில் அமைந்துள்ள ஷாப்பிங் ஸ்டால்களை இன்று (வியாழக்கிழமை) மாலை திறந்து வைக்கிறார்.

    தமிழக அனைத்து சிறு, குறு நிறுவனங்கள் தங்களின் நிறுவனப் பொருட்களை காட்சிப்படுத்தும் வகையில் 200-க்கும் மேற்பட்ட ஷாப்பிங் ஸ்டால்களை அமைத்துள்ளன.

    மாநாட்டை முன்னிட்டு தமிழகத்தில் கடைகள், வணிக வளாகங்கள், மார்க்கெட்டுகள், உணவகங்கள், உள்ளிட்ட அனைத்திற்கும் நாளை விடுமுறை அளிக்கப்படுகிறது.

    மாநாடு குறித்து ஈரோடு மாவட்ட தலைவர் ஆர்.கே.சண்முகவேல் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் 40-வது மாநில மாநாடு வணிகர் உரிமை முழக்க மாநாடாக ஈரோட்டில் நாளை (வெள்ளிக்கிழமை) நடைபெறுகிறது.

    இதற்கான முன் ஏற்பாடு பணிகளை எனது தலைமையில் நிர்வாகிகள் பிரம்மாண்டமாக செய்து வருகிறார்கள்.

    இந்த மாநாட்டில் கலந்து கொள்வதற்காக தமிழகம் முழுவதும் இருந்து லட்சக்கணக்கான வணிகர்கள் தங்களது குடும்பங்களோடு ஈரோடு நோக்கி வந்து கொண்டிருக்கிறார்கள்.

    அனைவரையும் வரவேற்க மிக சிறப்பான ஏற்பாடுகளையும், பங்கேற்கும் அனைவருக்கும் இலவச உணவு வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    வணிகர்களின் கோரிக்கைகளுக்கு மத்திய, மாநில அரசு விரைந்து தீர்வு காணும் வகையில் வெற்றி மாநாடாக நடத்திட அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

    இவ்வாறு அவர் அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.

    நாளை காலை 8.30 மணி அளவில் பேரமைப்பு கொடி ஏற்றும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. அதைத்தொடர்ந்து 9.05 மணிக்கு பரதநாட்டிய நிகழ்ச்சியும், 9.30 மணிக்கு இன்னிசை நிகழ்ச்சியும் நடக்கிறது. காலை 10 மணிக்கு குத்து விளக்கு ஏற்றுதல், 10.15 மணிக்கு மாநாட்டு தலைமை உரை நிகழ்கிறது. 10.30 மணிக்கு மாநாட்டு தீர்மானங்கள் நிறைவேற்றப்படுகிறது.

    தொடர்ந்து காலை 11 மணிக்கு முதுபெரும் வணிகர்களுக்கு விருது வழங்கி கவுரவிக்கப்படுகிறார்கள். மதியம் 2 மணிக்கு இன்னிசை நிகழ்ச்சி, 3 மணிக்கு மாநாட்டு தலைவர்கள் சிறப்பு அழைப்பாளர்கள் வாழ்த்துரை வழங்குகிறார்கள்.

    அதனைத்தொடர்ந்து 39-வது வணிகர் தினம் மாநில மாநாட்டை சிறப்பாக திருச்சியில் நடத்திய நிர்வாகிகள் கவுரவிக்கப்படுகிறார்கள்.

    மாநாட்டுக்கான ஏற்பாடுகளை ஈரோடு மாவட்ட செயலாளர் பொ.ராமச்சந்திரன், ஈரோடு மாவட்ட பொருளாளர் உதயம் பி.செல்வம் மற்றும் விழாக்குழுவினர் செய்து வருகின்றனர்.

    ×