search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மியான்மர் ராணுவ புரட்சி"

    • தேர்தலை தள்ளி வைத்ததற்கு நாட்டில் நடைபெறும் வன்முறையை ராணுவம் காரணமாக தெரிவித்துள்ளது.
    • நாட்டின் சில மாநிலங்களில் தொடர்ந்து நடக்கும் சண்டைக்கு மத்தியில் தேர்தல் நடத்த முடியாது.

    மியான்மரில் கடந்த 2021-ம் ஆண்டு பிப்ரவரி 1-ந்தேதி ஆட்சி அதிகாரத்தை ராணுவம் கைப்பற்றியது. பொது தேர்தலில் முறைகேடு நடந்துள்ளதாக கூறி ராணுவ ஆட்சி அமல்படுத்தப்பட்டது. அந்நாட்டின் தலைவர் ஆங் சான் சூகி உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். அப்போது 2023-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் பொது தேர்தல் நடத்தப்படும் என்று ராணுவம் உறுதியளித்தது.

    இந்த நிலையில் மியான்மரில் அவசர நிலை நீட்டிக்கப்படுவதாக ராணுவம் அறிவித்துள்ளது. 4-வது முறையாக அவசர நிலை நீட்டிக்கப்பட்டுள்ளது. மேலும் தேர்தல் ஒத்தி வைக்கப்படுவதாகவும் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக ராணுவம் வெளியிட்ட அறிக்கையில், சுதந்திரமாகவும், நியாயமாகவும் தேர்தலை நடத்துவதற்கும், அச்சமின்றி வாக்களிக்கும் வகையிலும் போதுமான பாதுகாப்பு இன்னும் தேவைப்படுவதால் அவசர கால சட்டத்திற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளது.

    தேர்தலை தள்ளி வைத்ததற்கு நாட்டில் நடைபெறும் வன்முறையை ராணுவம் காரணமாக தெரிவித்துள்ளது. ராணுவ ஜெனரல் மின் ஆங் ஹவேயிங் கூறும்போது, நாட்டின் சில மாநிலங்களில் தொடர்ந்து நடக்கும் சண்டைக்கு மத்தியில் தேர்தல் நடத்த முடியாது. வரவிருக்கும் தேர்தல்களை அவசரமாக நடத்தக் கூடாது என்பதால் எங்களுக்கு சிறிது அவகாசம் தேவைப்படுகிறது என்றார்.

    மியான்மரில் ஆட்சியை ராணுவம் கைப்பற்றிய போது ஒரு வருடத்துக்கு பிறகு தேர்தல் நடத்தப்படும் என்று தெரிவித்தது. அதன்பின் 2023-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் தேர்தல் நடத்தப்படும் என்று அறிவித்திருந்த நிலையில் மீண்டும் தள்ளி வைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    ×