search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மதுரை ஐகோர்ட்டு உத்தரவு"

    இந்து மக்கள் கட்சி கோரிக்கையை ஏற்று விநாயகர் சிலை ஊர்வலத்தை பகலில் நடத்த ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

    கும்பகோணம்:

    இந்து மக்கள் கட்சியின் இளைஞர் அணி மாநில பொது செயலாளராக இருப்பவர் குருமூர்த்தி. இவர் மதுரை ஐகோர்ட் கிளையில் விநாயகர் சதுர்த்தி விழா சிலை ஊர்வலம் தொடர்பாக தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:-

    கும்பகோணத்தில் ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு விநாயகர் சிலை ஊர்வலம் மாலை நேரத்தில் நடைபெறுகிறது. இதனால் பல்வேறு இன்னல்கள் ஏற்படுகின்றன. குறிப்பாக மழைக்காலம் என்பதால் ஜெனரேட்டர் மின்சாரம் பயன்படுத்துவதால் எளிதில் தீப்பிடிக்க வாய்ப்பு உள்ளது. மாலை நேரம் ஊர்வலம் என்பதனால் பள்ளிவாசலில் தொழுகை நேரம் முடிந்து ஊர்வலத்தை நடத்துவதால் இரவு 11 மணிக்கு மேல் விசர்ஜனம் செய்யப்படுகிறது. இதனால் பல்வேறு சமூக விரோத கும்பல் ஊர்வலத்தில் ஊடுருவி கலவரம் ஏற்படுத்த வாய்ப்புகள் உள்ளன.

    இந்த ஆண்டுக்கான விநாயகர் சதுர்த்தி விழா வருகிற செப்டம்பர் 13-ம் தேதி நடைபெறுகிறது. இதையொட்டி கும்பகோணம் நகர பகுதியில் வைக்கப்பட்டுள்ள விநாயகர் சிலைகள் மறுநாள் 14-ம் தேதி ஊர்வலமாக மகாமகம் குளத்தில் இருந்து புறப்படுகிறது. முக்கிய வீதிகள் வழியாக பாலக்கரை காவிரி டபீர் படித்துறையில் விநாயகர் சிலைகள் கரைக்கப்படுகின்றன.

    எனவே பாதுகாப்பு நலன் கருதியும் இரவு நேர ஊர்வலத்தினால் ஏற்படுகிற இன்னல்களை போக்கிடும் வகையில் மாலை 6 மணிக்குள் விநாயகர் சிலைகள் ஊர்வலத்தை நடத்தி முடிக்க வேண்டுமென தஞ்சை மாவட்ட காவல் துறை, கும்பகோணம் நகர காவல் துறைக்கு உத்தரவிட வேண்டும்.

    கடந்த 3ஆண்டுகளாகவே இந்து மக்கள் கட்சி சார்பில் பகல் நேர ஊர்வலத்திற்கு மனு அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் இதனை காவல்துறை நடைமுறைப்படுத்தவில்லை.

    இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.

    மனுவை விசாரித்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ். மனுதாரர் குருமூர்த்தியின் வேண்டுகோளை ஏற்று கும்பகோணம் நகர காவல்துறை மாலை 6 மணிக்குள் விநாயகர் ஊர்வலத்தை எந்தவித சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படாத வகையில் நடத்த வேண்டும் என உத்தரவிட்டார்.

    எனவே இதுவரை பல ஆண்டுகளாக மாலை நேரத்தில் தொடங்கி இரவு 11 மணி வரை நடைபெற்ற விநாயகர் சிலை ஊர்வலம் இந்த ஆண்டு முதன் முறையாக கும்பகோணத்தில் காலை நேரத்தில் நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    ×