search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மக்காத குப்பைகள்"

    • மக்கும் குப்பைகள், மக்காத குப்பைகள், தீங்கு விளைவிக்கக்கூடிய வீட்டு உபயோக குப்பைகள் என 3 வகையாக பிரித்து பெறப்படுகிறது.
    • குப்பைகளை பிரித்து வழங்காவிட்டால் அபராதம் விதிக்கப்படும் என்று எச்சரிக்கை செய்யப்பட்டுள்ளது.

    சென்னை:

    சென்னை பெருநகரை தூய்மையான நகரமாக மாற்ற மாநகராட்சி பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. குப்பை இல்லா தெருக்கள், சாலைகளை மாற்றி அழகுப்படுத்தப்படுகிறது.

    சென்னையில் 35 ஆயிரம் தெருக்கள் உள்ளன. இந்த தெருக்கள் மற்றும் வீடுகளில் சேகரிக்கப்படும் குப்பைகளை தரம் பிரித்து மறுசுழற்சிக்கு பயன்படுத்தவும், இயற்கை உரம், பயோகியாஸ் தயாரிக்கும் பணியும் நடந்து வருகிறது. இதற்காக சென்னையில் தனியார் நிறுவனங்கள் பிளாண்ட் அமைக்கப்பட்டு உள்ளது.

    மக்கும் குப்பைகள், மக்காத குப்பைகள், தீங்கு விளைவிக்கக்கூடிய வீட்டு உபயோக குப்பைகள் என 3 வகையாக பிரித்து பெறப்படுகிறது. வீடுகள், ஓட்டல்கள், கடைகள், தொழில் நிறுவனங்கள் என தனித்தனியாக பிரித்து குப்பைகளை பெற வழிவகை செய்யப்பட்டுள்ளது.

    சென்னையில் நாள் ஒன்றுக்கு 6 ஆயிரம் மெட்ரிக் டன் குப்பைகள் சேகரிக்கப்படுகின்றன. சேகரிக்கின்ற குப்பைகள் இயற்கை உரம், இயற்கை எரிவாயு மற்றும் மறுசுழற்சி செய்யவும், பதப்படுத்தவும் அனுப்பி வைக்கப்படுகிறது. இதன் மூலம் குப்பை கிடங்குகளில் குவியும் குப்பை குறைக்கப்பட்டு சுற்றுப்புற சூழல் பாதுகாக்கப்படும்.

    அந்த வகையில் வீடு வீடாக குப்பைகளை தரம் பிரித்து தூய்மை பணியாளர்கள் வாங்குகிறார்கள். மக்கும் குப்பைகள் தனியாகவும், மக்காத குப்பை தனியாகவும் பெறப்படுகிறது.

    மக்கும் குப்பைகள், மக்காத குப்பைகள் என வகையாக பிரித்து பொதுமக்கள் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. தனித்தனி பைகளில் குப்பைகளை சேகரித்து வருகின்றனர்.

    இதன்மூலம் எளிதாக தரம் பிரித்து மறுசுழற்சிக்கு பயன்படுத்தவும், பிளாஸ்டிக் கழிவுகள் எரிக்கப்படுகிறது. தினசரி சேகரிக்கப்படும் குப்பைகள் கொடுங்கையூர், பெருங்குடியில் உள்ள பிரதான குப்பை கிடங்கில் மொத்தமாக கொட்டப்பட்டு வந்த நிலையில் அதனை மாற்றி மக்கும் குப்பையில் இருந்து இயற்கை எரிவாயு, பயோகியாஸ் தயாரிக்கப்படுவதால் குப்பைகள் தேக்கம் ஆவது இல்லை.

    இந்த நிலையில் மழை வெள்ள பாதிப்பில் இருந்து குப்பைகளை பிரித்து வாங்குவதில் சுணக்கம் ஏற்பட்டது. வீடுகளில் தேங்கிய தேவையற்ற கழிவுகளை மக்கள் கொட்டினார்கள். குப்பைகளை பிரித்து வழங்காமல் மொத்தமாக கொட்டி வருகின்றனர்.

    இதனை தவிர்க்க மாநகராட்சி சுகாதாரத்துறை மீண்டும் வீடு வீடாக நோட்டீஸ் வினியோகித்து வருகிறது. "என் குப்பை என் பொறுப்பு" என நகரை தூய்மையாக வைத்திருக்க பொதுமக்களின் ஒத்துழைப்பு தர வேண்டும் என வலியுறுத்தி விழிப்புணர்வு நோட்டீஸ் கொடுக்கப்படுகிறது.

    அதில் குப்பைகளை பிரித்து வழங்காவிட்டால் அபராதம் விதிக்கப்படும் என்று எச்சரிக்கை செய்யப்பட்டுள்ளது. தனிநபர் வீடுகளுக்கு ரூ.100, அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு ரூ.1000, பெருமளவு குப்பை உருவாக்குபவர்களுக்கு ரூ.5000 அபராதம் விதிக்கப்படும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. விதியை மீறுபவர்களுக்கு கட்டாயம் அபராதம் விதிக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

    ×