search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மக்காச்சோளம்"

    • கடந்த செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதத்தில் பெய்த பருவமழையை பயன்படுத்தி ஏராளமான விவசாயிகள், 4 மாதங்களில் மகசூல் கொடுக்கும் குறுகிய கால தானியப் பயிரான மக்காச்சோளத்தை, ஏறக்குறைய 2,000 ஹெக்டேர் பரப்பளவில் பயிரிட்டுள்ளனர்.
    • தற்போது 100 கிலோ எடை கொண்ட ஒரு மூட்டை மக்காச்சோளம் ரூ.2,100 முதல் ரூ.2,200 வரை விலை போகிறது.

    வாழப்பாடி:

    சேலம் மாவட்டம் வாழப்பாடி மற்றும் சுற்றுப்புற கிராமங்களில் பெரும்பாலான விவசாயிகள், வானம் பார்த்த மானாவரி புஞ்செய் நிலங்களில் பருவமழையை பயன்படுத்தி, வறட்சியை தாங்கி வளர்ந்து மகசூல் கொடுக்கும் குறுகிய கால மானாவரி பயிரான மக்காச்சோளம் மற்றும் பருத்தி ஆகியவற்றை, ஆண்டு தோறும் விரும்பி பயிரிட்டு வருகின்றனர்.

    வாழப்பாடி, பேளூர், அயோத்தியாப்பட்டணம், வேப்பிலைப்பட்டி, பெத்தநாயக்கன்பாளையம், ஏத்தாப்பூர், தும்பல் பகுதியில் கடந்த செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதத்தில் பெய்த பருவமழையை பயன்படுத்தி ஏராளமான விவசாயிகள், 4 மாதங்களில் மகசூல் கொடுக்கும் குறுகிய கால தானியப் பயிரான மக்காச்சோளத்தை, ஏறக்குறைய 2,000 ஹெக்டேர் பரப்பளவில் பயிரிட்டுள்ளனர்.

    தற்போது மக்காச்சோள கதிர்கள் முதிர்ந்து அறுவடைக்கு தயாரானதால், கதிர்களை அறுவடை செய்து உதிர்த்து, உலர்த்தி பதப்படுத்தி சந்தைப்படுத்தும் பணியில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர்.

    பெரும்பாலான விவசாயிகள் ஒரே நேரத்தில் அறுவடை செய்வதால், கொள்முதல் செய்யும் வியாபாரிகளும், தனியார் நிறுவனங்களின் முகவர்களும் விலையை கட்டுக்குள் வைத்துள்ளனர்.

    தற்போது 100 கிலோ எடை கொண்ட ஒரு மூட்டை மக்காச்சோளம் ரூ.2,100 முதல் ரூ.2,200 வரை விலை போகிறது. ஓரிரு வாரங்களில் மக்காச்சோள அறுவடை முடிவுக்கு வரும் என்பதால், தற்போது மக்காச்சோளத்தை அறுவடை செய்யும் விவசாயிகள் உடனே விற்பனை செய்யாமல், வெய்யிலில் உலர வைத்து பதப்படுத்தி, மார்ச் மாத இறுதிக்குள் மக்காச்சோளம் விலை ரூ.2,500 வரை உயரும் என்ற நம்பிக்கையில் இருப்பு வைத்து வருகின்றனர்.

    இதுகுறித்து பொன்னாரம்பட்டியை சேர்ந்த விவசாயிகள் சிலர் கூறியதாவது:-

    ஒரு ஏக்கர் பரப்பளவில் மக்காச்சோளம் பயிரிடுவதற்கு, விதை கொள்முதல், ஏர் உழுதல், விதைத்தல், களைப்பறித்தல், உரமிடுதல், புழுக்களை கட்டுப்படுத்த பூச்சிக்கொல்லி மருந்து தெளித்தல், அறுவடை செய்தல், கதிரடித்து உலர்த்தி பதப்படுத்தல் ஆகியவவற்றுக்கு ஏறக்குறைய ரூ. 30 ஆயிரம் வரை செலவாகிறது. 25 மூட்டையே மகசூல் கிடைக்கிறது.

    வாழப்பாடி பகுதி விவசாயிகள் ஒரே நேரத்தில் மக்காச்சோளத்தை அறுவடை செய்து விற்பனை செய்வதால், வியாபாரிகளும், முகவர்களும் விலையை குறைத்து கொள்முதல் செய்கின்றனர். இதனால், 4 மாத உழைப்பிற்கு ரூ.20 ஆயிரம் கூட வருவாய் கிடைப்பதில்லை.

    எனவே, அறுவடை செய்யும் மக்காச்சோளத்தை உடனே விற்பனை செய்யாமல் விலை உயர்வை எதிர்பார்த்து இருப்பு வைத்துள்ளோம். இந்த மாத இறுதிக்குள் விலை உயர்வு கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

    ×