search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மகாராஷ்டிர சிறுமி"

    • டியூசன் வகுப்புக்கு சென்ற அந்த சிறுமி வீட்டிற்கு ஆட்டோவில் வந்துள்ளார்.
    • பாலியல் தொந்தரவு கொடுக்க முயன்ற ஆட்டோ டிரைவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

    அவுரங்காபாத்:

    மகாராஷ்டிர மாநிலம் அவுரங்காபாத்தில் சாலையில் சென்றுகொண்டிருந்த ஆட்டோவில் இருந்து, 17 வயது சிறுமி, திடீரென வெளியே எகிறிக் குதித்துள்ளார். இதனால் அவரது தலையில் பலத்த அடிபட்டது. அவர் வந்த ஆட்டோ வேகமாக சென்றுவிட்டது. கீழே விழுந்து கிடந்த அவர் மீது, பின்னால் வந்த ஒரு கார் மோதும் அபாயம் இருந்தது. ஆனால் அந்த சிறுமி அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினார். அந்த வழியாக நடந்து சென்றவர்கள் சிலர் உதவி செய்து சிறுமியை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், ஆட்டோ டிரைவரின் பாலியல் தொந்தரவில் இருந்து தப்பிக்க அந்த பெண், ஆட்டோவில் இருந்து குதித்தது தெரியவந்தது. கடந்த ஞாயிற்றுக்கிழமை இந்த சம்பவம் நடந்துள்ளது.

    டியூசன் வகுப்புக்கு சென்ற அந்த சிறுமி வீட்டிற்கு ஆட்டோவில் வந்துள்ளார். அப்போது ஆட்டோ டிரைவர் சையத் அக்பர் ஹமீத், அந்த சிறுமியிடம் நைசாக பேச்சுகொடுத்து பொதுவான சில கேள்விகளை கேட்டுள்ளார். சிறுமியும் சாதாரணமாக பதில் அளித்துள்ளார். அதன்பின் ஆட்டோ டிரைவர் படிப்படியாக அந்த சிறுமியை அச்சம் கொள்ள செய்யும் வகையில் ஆபாசமாக பேசியிருக்கிறார். ஆட்டோவையும் மிக வேகமாக ஓட்டியிருக்கிறார். இதனால் பயந்துபோன சிறுமி, கீழே குதிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

    காயமடைந்த சிறுமி உள்ளூர் மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். அவருக்கு பாலியல் தொந்தரவு கொடுக்க முயன்ற ஆட்டோ டிரைவரை போலீசார் கைது செய்துள்ளனர். அந்த சாலையில் இருந்த சுமார் 40 சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்து ஆட்டோ டிரைவரின் இருப்பிடத்தை போலீசார் கண்டுபிடித்துள்ளனர். அவர் மீது போக்சோ சட்டத்தின்கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

    கைது செய்யப்பட்ட ஹமீத் மும்பையைச் சேர்ந்தவர். அவர் நான்கைந்து மாதங்களுக்கு முன்பு அவுரங்காபாத் வந்து ஆட்டோவை வாடகைக்கு எடுத்து ஓட்டி வந்ததாக போலீசார் தெரிவித்தனர்.

    ×