search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பிராந்திய மக்கள்"

    தேவையற்ற கருத்துக்களை கூறி பிராந்திய மக்கள் இடையே கவர்னர் மோதலை உருவாக்குகிறார் என்று அன்பழகன் எம்.எல்.ஏ. குற்றம் சாட்டியுள்ளார். #kiranbedi

    புதுச்சேரி:

    அன்பழகன் எம்.எல்.ஏ. நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:-

    புதுவை மாநிலத்துக்கு மாநில அந்தஸ்து பெறுதல் சம்பந்தமான பிரச்சினையில் கவர்னர் தேவையற்ற கருத்துக்களை எடுத்துக்கூறி பிராந்திய அளவில் மோதல் போக்கை உருவாக்க கூடிய சூழ்நிலையை உருவாக்கி உள்ளார்.

    புதுவை மாநிலம் யூனியன் பிரதேசமாக மாற்றப் பட்ட நிலையில இன்றைய அரசியல் நிலவரப்படி ஏதோ ஒரு காலணி ஆதிக்கத்தின் கீழ் செயல் படக்கூடிய இடமாக உள்ளது. மத்திய உள்துறை அமைச்சகத்தின் ஒரு பிரிவு போன்று புதுவை அரசியல் நிர்வாகம் இருந்து வருகிறது.

    நீண்டநாள் கோரிக்கையான மாநில அந்தஸ்து சம்பந்தமாக 1998-ம் ஆண்டிலேயே மறைந்த தமிழக முதல்-அமைச்சர் ஜெயலலிதா மத்திய அரசை வலியுறுத்தி மத்திய அமைச்சரவையில் மாநில அந்தஸ்து கிடைக்க கொள்கை முடிவினை அறிவிக்க செய்தார். அதன்பிறகு அ.தி.மு.க. சார்பில் கூட்டப்பட்ட பல்வேறு செயற்குழுவில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    மக்கள் பிரதிநிதிகள் சபையாக இருக்கின்ற புதுவை சட்டமன்றத்தில் 10-க்கும் மேற்பட்ட முறை மாநில அந்தஸ்துக்காக மத்திய அரசை வலி யுறுத்தி தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. நடந்து முடிந்த சட்டமன்ற கூட்டத்தில் புதுவை காரைக்கால், மாகி, ஏனாம் ஆகிய பிராந்தியங்களை சேர்ந்த 30 எம்.எல்.ஏ.க்களும் கட்சி வித்தியாசமின்றி மாநில அந்தஸ்துக்கான தீர்மானத்தை நிறைவேற்றினார்கள்.

    மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் மக்களின் எண்ணத்துக்கு ஏற்ப மாநில அந்தஸ்து தீர்மானத்தை நிறைவேற்றியுள்ளனர்.

    ஆனால், சட்டமன்றத்தை கேவலப்படுத்துகின்ற விதத்தில் முக்கிய பொறுப்பில் இருப்பவர்கள் தவறான தகவல்களை கூறி வருகின்றனர்.

    உயர்த்தப்பட்ட மின் கட்டணத்தை குறைக்க வலியுறுத்தியும் சைனா மின் மீட்டரை திரும்ப பெற கோரி நடந்து முடிந்த சட்டமன்ற கூட்டத்தில் தெரிவித்தோம்.

    புதுவையில் அரசானது இவற்றை கருத்தில் கொள்ள வில்லை. நாராயணசாமி வழக்கம் போல் மக்களின் மீது சிந்தனை இல்லாமல் உள்ளார்.

    தமிழகத்தைபோல் புதுவையிலும் உயர்த்தப்பட்ட வரிகளை குறைக்க வேண்டும். விரைவில் மின்கட்டண உயர்வை குறைக்க வலியுறுத்தியும் மின் மீட்டரை திரும்ப பெற கோரி அ.தி.மு.க. தலைமை கழகத்திடம் அனு மதி பெற்று புதுவையில் அ.தி.மு.க. சார்பில் மாநிலம் தழுவிய அளவில் மிகப்பெரிய போராட்டம் நடத்த உள்ளோம்.

    புதுவையில் 1 லட்சத்து 45 ஆயிரம் பேர் முதியோர் உதவித்தொகை பெற்று வந்தனர். காங்கிரஸ் ஆட்சிக்கு வந்த பிறகு 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் பெறப்பட்டன.

    ஆனால், ஒருவருக்கு கூட வழங்கப்படவில்லை. மாறாக ஏற்கனவே கடந்த 15 ஆண்டுகாலமாக உதவித் தொகை பெற்று வந்த வர்களில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு பல்வேறு சொற்ப காரணங்களை கூறி உதவித்தொகையை இந்த அரசு நிறுத்தி வைத்து உள்ளது.

    நிதி மசோதாவிற்கு ஒப்புதல் கொடுப்பதற்கு முன்பு நியமன எம்.எல்.ஏ.க் களை சட்டமன்றத்தில் அனுமதிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் எந்த உத்தரவும் கொடுக்க வில்லை. ஆனால் நியமன எம்.எல்.ஏ.க்களுக்கு கட்டணம் வாங்காத வக்கீலாக கவர்னர் செயல்பட்டு வருகிறார்.

    இவ்வாறு அன்பழகன் கூறினார். #kiranbedi

    ×