search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பாலின சமத்துவம்"

    • மார்ச் 8, பல நாடுகளில் விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது
    • ஐ.நா. பொதுச்சபை மார்ச் 8 தேதியை சர்வதேச மகளிர் தினமாக பிரகடனப்படுத்தியது

    1914 மார்ச் 8 அன்று முதல்முதலாக ஜெர்மனியில் சர்வதேச பெண்கள் தினம் என கொண்டாடப்பட்டது. அந்த சந்திப்பில், ஆண்களுக்கு நிகராக பெண்களுக்கும் வாக்குரிமை பெற பல வருடங்களாக நடைபெற்ற போராட்டங்கள் வெற்றி பெற்றதை தொடர்ந்து நடந்த கலந்துரையாடல்களில், மார்ச் 8 எனும் தேதியை சர்வதேச மகளிர் தினமாக கொண்டாட முடிவெடுக்கப்பட்டது.


    1975ல் ஐக்கிய நாடுகளின் (UN) சபை, மார்ச் 8 அன்று சர்வதேச பெண்கள் தினத்தை கொண்டாடியது.

    1977ல் ஐ.நா. பொதுச்சபை (UN General Assembly) தனது உறுப்பினர் நாடுகளுக்கு மார்ச் 8 தேதியை அதிகாரபூர்வமாக சர்வதேச மகளிர் தினமாக பிரகடனப்படுத்தியது.

    2024 சர்வதேச மகளிர் தின கருப்பொருளாக, "பெண் இனத்தில் முதலீடு செய்யுங்கள் – வளர்ச்சியை துரிதப்படுத்துங்கள்" (Invest In Women: Accelerate Progress) என்றும் பிரச்சார கருப்பொருள் (campaign theme) "இணைப்பதை ஊக்குவியுங்கள்" (Inspire Inclusion) என்றும் ஐ.நா. அறிவித்தது.

    பெண்கள் பொருளாதார ரீதியாக தன்னிறைவு பெறாமல் இருப்பதையும், தன்னிறைவு காண்பதில் உள்ள சிக்கல்களையும், சவால்களையும் களையும் விதமாக இந்த கருப்பொருள் உருவாக்கப்பட்டது.

    அனைத்து துறைகளிலும் ஆண்களுக்கு நிகராக பெண்கள் பங்கேற்பதையும், முடிவுகளை எடுப்பதில் சமமான வாய்ப்பளிப்பதை ஊக்குவிப்பதன் மூலமும், ஒரு வலுவான சமுதாய கட்டமைப்பை நாம் உருவாக்க முடியும்.

    சமூக, பொருளாதார, கலாச்சார மற்றும் அரசியல் சார்ந்த அனைத்து அம்சங்களிலும் பெண்களின் சாதனைகள் இந்நாளில் பிரசாரம் செய்யப்படும்.


    சர்வதேச அளவில் அரசியலில் சிரிமாவோ பண்டாரநாயகே (இலங்கை), இந்திரா காந்தி (இந்தியா), பெனாசிர் பூட்டோ (பாகிஸ்தான்), ஷேக் ஹசினா (வங்காளம் தேசம்), மார்கரெட் தாட்சர் (இங்கிலாந்து) போன்ற பெரும் தலைவர்கள் பல போராட்டங்களை கடந்து வெற்றி பெற்றனர்.

    முதல்முதலாக ரசாயன துறையில் மேரி கியூரி, உலக புகழ் பெற்ற நோபல் பரிசு (Nobel Prize) வென்றதற்கு பிறகு 60க்கும் மேற்பட்ட பெண்கள் நோபல் பரிசு வென்றுள்ளனர்.


    முழுக்க முழுக்க அறிவு சார்ந்த போட்டி என கருதப்படும் சதுரங்க (Chess) விளையாட்டில் நோனா கப்ரின்டாஷ்வில்லி எனும் ஜார்ஜியா நாட்டை சேர்ந்தவர் கிராண்ட்மாஸ்டர் பட்டம் வென்றதை தொடர்ந்து 41 பெண்கள் கிராண்ட்மாஸ்டர் பட்டம் வென்றுள்ளனர்.

    மருத்துவ துறையில் 1960ல் டாக்டர் நினா ப்ரான்வால்ட் முதல் முதலாக இருதய அறுவை சிகிச்சை செய்து புகழ் பெற்றார். அவரை தொடர்ந்து தற்போது வரை பல பெண்கள் மருத்துவ துறையின் பல பிரிவுகளிலும் வியத்தகு சாதனை புரிந்து வருகின்றனர்.

    ஆண்களுக்கு எந்த வகையிலும் பெண்கள் சளைத்தவர்கள் அல்ல என நாளுக்கு நாள் பெண்கள் நிரூபித்து வரும் நிலையில், சர்வதேச மகளிர் தினமான இன்று, பெண்களின் ஆற்றலை மதிக்கும் சமுதாயத்தை உருவாக்க நாம் அனைவரும் உறுதி ஏற்போம்.

    • நாடு முழுவதும் பாலின பேதங்கள் இன்றி பெண் குழந்தைகள் வளர்க்கப்படுகின்றனர்
    • பெண் குழந்தைகள்தான் மாற்றத்தை உருவாக்குபவர்கள் என்றார் பிரதமர் மோடி

    நாடு முழுவதும் சில தசாப்தங்களுக்கு முன் வரை குழந்தை பிறந்ததும், ஆணா அல்லது பெண்ணா என கேட்பதும், ஆண் குழந்தை என்றால் உயர்வாக கருதுவதும் ஒரு வழக்கமாக இருந்து வந்தது.

    இன்றைய காலகட்டத்தில் அந்த நிலைமை பெருமளவு மாறி விட்டது.

    இன்று பெண் குழந்தைகள் ஆண் குழந்தைகளுக்கு நிகராக, கல்வி, விளையாட்டு, கலைகள், கணிதம், விஞ்ஞானம், நிர்வாகம் உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் சிறு வயதிலிருந்தே தங்கள் திறமையை நிரூபித்து வருகின்றனர்.

    மூட நம்பிக்கைகளால் பெண் குழந்தைகளுக்கு பல வாய்ப்புகள் மறுக்கப்பட்டு வந்த நிலைமை தற்காலத்தில் அறவே மாறி, பாலின பேதம் இல்லாமல் கிராமங்களிலும், நகரங்களிலும் பெண் குழந்தைகள் வளர்க்கப்படுகின்றனர்.

    2008ல் பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு துறை எடுத்த முயற்சியால், ஆண்டுதோறும் ஜனவரி 24 அன்று, "தேசிய பெண் குழந்தைகள் தினம்" (National Girl Child Day) கொண்டாடப்படுகிறது.


    பாலின சமத்துவம், கல்வி, உடலாரோக்கியம், பணி மற்றும் ஊதியம் உள்ளிட்ட அம்சங்களில் சமநிலையை ஊக்குவிக்கவும், பெண் குழந்தைகள் எதிர்கொள்ள வேண்டிய சவால்கள் மற்றும் பெண்கள் மேம்பாட்டிற்காக அரசாங்கம் முன்னெடுத்து வரும் திட்டங்கள் குறித்தும் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாகவும் "பெண் குழந்தைகள் தினம்" கொண்டாடப்படுகிறது.


    குழந்தைகள் திருமணம், பாலின பாகுபாடு மற்றும் பெண்களுக்கான வன்முறை ஆகியவற்றை சமூகத்திலிருந்து களைய வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தும் விதமாக இந்த நாளை நாடு முழுவதும் கொண்டாடுகின்றனர்.


    இதையொட்டி பிரதமர் நரேந்திர மோடி, "பெண் குழந்தைகள்தான் மாற்றத்தை உருவாக்குபவர்கள்.பெண் குழந்தைகள் கல்வி கற்று, வளர்ந்து சமூகத்தில் கண்ணியத்துடன் வாழ தேவையான அனைத்து முயற்சிகளையும் தனது அரசு செய்து வருகிறது" என குறிப்பிட்டார்.

    2015ல் பிரதமர் நரேந்திர மோடி இதே தினத்தன்று, "பெண் குழந்தைகளை காப்பாற்றுங்கள்; பெண் குழந்தைகளை படிக்க வையுங்கள்" ("பேட்டி பச்சாவோ, பேட்டி படாவோ") என முன்னெடுத்த பிரசார திட்டங்கள் குறித்தும் இன்று விழிப்புணர்ச்சி ஏற்படுத்தப்படுகிறது.

    ×