search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பாறாங்கற்கள்"

    • தண்டவாளத்தில் பாறாங் கற்கள் வைக்கப்பட்டிருந்த விவரம் குறித்து அந்த ரெயில் என்ஜின் டிரைவருக்கு தெரிவிக்கப்பட்டது.
    • சமீப காலமாக ரெயில்களை கவிழ்க்க நடந்து வரும் முயற்சிகள் முறியடிக்கப்பட்டு வருகின்றன.

    மும்பை:

    மராட்டிய மாநிலம் மும்பை- புனே ரெயில்வே வழித்தடத்தில் உள்ள அகுர்டி மற்றும் சின்ச்வாட் ரெயில் நிலையங்களுக்கு இடையே நேற்று மாலை சந்தீப் பரோவ் என்ற ஊழியர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டார்.

    அப்போது சின்ச்வாடி அருகே ரெயில்வே தண்ட வாளத்தில் பெரிய அளவிலான பாறாங்கற்கள் அடுக்கி வைக்கப்பட்டு இருந்ததை கண்டு அவர் அதிர்ச்சி அடைந்தார். இதே போல அருகருகே 5 இடங்களில் பாறாங்கற்கள் இருந்ததையும் அவர் கவனித்தார். இது பற்றி உடனடியாக அவர் சின்ச்வாட் ரெயில் நிலைய அதிகாரிக்கு தகவல் கொடுத்தார். இதையடுத்து ரெயில்வே அதிகாரிகள் உஷார் அடைந்தனர்.

    அந்த சமயம் நாகர்கோவிலில் இருந்து மும்பை சத்திரபதி சிவாஜி ரெயில் நிலையத்தை நோக்கி மும்பை எக்ஸ்பிரஸ் ரெயில் வந்து கொண்டிருந்தது. தண்டவாளத்தில் பாறாங் கற்கள் வைக்கப்பட்டிருந்த விவரம் குறித்து அந்த ரெயில் என்ஜின் டிரைவருக்கு தெரிவிக்கப்பட்டது. உடனே அவர் நடுவழியில் ரெயிலை நிறுத்தினார்.

    சம்பவ இடத்துக்கு ரெயில்வே பாதுகாப்பு படை வீரர்கள் விரைந்து சென்று தண்டவாளத்தில் இருந்த பாறாங்கற்களை அகற்றினார்கள். அதன் பிறகு நாகர்கோவில் ரெயில் அங்கிருந்து புறப்பட்டு சென்றது.

    ரெயில்வே ஊழியர் தக்க சமயத்தில் கற்கள் வைக்கப்பட்டு இருந்ததை பார்த்ததால் பெரும் விபத்து நடக்க இருந்தது தவிர்க்கபட்டது.

    இந்த செயலில் ஈடுபட்டது யார்? என்று தெரியவில்லை. மும்பை- புனே வழித் தடத்தில் தினமும் ஏராளமான எக்ஸ்பிரஸ் ரெயில்கள் செல்லும். இதை கருத்தில் கொண்டு ரெயில்களை கவிழ்த்து நாச வேலையில் ஈடுபட சமூக விரோத கும்பல் சதி திட்டம் தீட்டி இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. இது தொடர்பாக ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம கும்பலை தேடி வருகின்றனர்.

    சமீப காலமாக ரெயில்களை கவிழ்க்க நடந்து வரும் முயற்சிகள் முறியடிக்கப்பட்டு வருகின்றன.

    கடந்த சில நாட்களுக்கு முன்பு உதய்பூர்- ஜெய்ப்பூர் இடையே தண்டவாளத்தில் கற்கள் வைத்து அந்த வழியாக வந்த வந்தேபாரத் ரெயிலை கவிழ்க்க முயற்சி நடந்தது குறிப்பிடத்தக்கது.

    ×