search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பரிதி இளம்வழுதி"

    சென்னையில் இன்று காலமான முன்னாள் அமைச்சர் பரிதி இளம்வழுதியின் உடலுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அஞ்சலி செலுத்தினார். #ParithiIlamvazhuthi #MKStalin
    சென்னை:

    முன்னாள் அமைச்சர் பரிதிஇளம்வழுதி மாரடைப்பால் இன்று அதிகாலை மரணம் அடைந்தார். அவருக்கு வயது 58.

    சில ஆண்டுகளுக்கு முன்பு நீரழிவு நோயால் அவரது கால் பாதிக்கப்பட்டது. இன்று அதிகாலை 4 மணியளவில் அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. உடனடியாக அவரை மலர் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே அவர் உயிர் பிரிந்தது.

    அவரது உடல் பெசன்ட் நகர் 35-வது தெருவில் உள்ள வீட்டில் பொதுமக்கள் அஞ்சலி செலுத்துவதற்காக வைக்கப்பட்டுள்ளது.

    மறைந்த பரிதிஇளம்வழுதி தி.மு.க.வில் பல்வேறு பொறுப்புகளை வகித்தவர். பள்ளி படிப்பை வெஸ்லி மேல்நிலைப்பள்ளியில் முடித்த அவர் தமிழக சட்ட மன்றத்திற்கு 6 முறை தேர்ந்தெடுக்கப்பட்டவர்.

    25 வயதில் முதன் முதலில் சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க.வின் சத்திய வாணிமுத்துவை எதிர்த்து போட்டியிட்டு பெரம்பூர் தொகுதியில் வெற்றி பெற்றார்.

    துணை சபாநாயகர், செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சராக தி.மு.க. அமைச்சரவையில் இடம் பெற்றார். எழும்பூர் தொகுதியில் 1989 முதல் 2011 வரை சட்டமன்ற உறுப்பினராக இருந்தார்.

    இவர் சட்டமன்ற உறுப்பினராக பணியாற்றிய 1991-1996 கால கட்டத்தில் சட்டமன்றத்தில் ஒரே ஒரு தி.மு.க. உறுப்பினராக செயல்பட்டார்.

    தி.மு.க.வில் துணைப் பொதுச்செயலாளராகவும் பதவி வகித்தவர். தி.மு.க.வில் ஏற்பட்ட கசப்பின் காரணமாக 2013-ம் ஆண்டு அ.தி.மு.க.வில் இணைந்தார்.



    அடுத்த நாளே தலைமை செயற்குழு உறுப்பினராக இவரை ஜெயலலிதா நியமித்தார். ஜெயலலிதா மறைவுக்கு பிறகு டி.டி.வி. தினகரன் அணியில் சேர்ந்தார். அக்கட்சியில் அமைப்பு செயலாளர் பொறுப்பு வகித்தார்.

    மறைந்த பரிதிஇளம் வழுதிக்கு 3 குடும்பங்கள் உள்ளன. முதல் மனைவி இறந்து விட்டார். அவருக்கு 2 மகன்களும், ஒரு மகளும் உள்ளனர். 2-வது மனைவிக்கு ஒரு மகனும் ஒரு மகளும் உள்ளனர்.

    3-வது மனைவிக்கு ஒரு மகள் உள்ளார். 3 குடும்பங்களும் தனித்தனியே வசித்து வருகின்றன.

    பெசன்ட் நகரில் பொதுமக்கள் அஞ்சலிக்கு வைக்கப்பட்டுள்ள பரிதிஇளம் வழுதியின் உடலுக்கு தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் அஞ்சலி செலுத்தினார். அரசியல் கட்சி பிரமுகர்கள் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

    அவரது உடல் அடக்கம் நாளை (ஞாயிற்றுக்கிழமை) காலை 10 மணிக்கு மைலாப்பூர் கிருஷ்ணன்பேட்டை மயானத்தில் நடைபெறுகிறது.

    பரிதிஇளம் வழுதி மறைவுக்கு அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணை பொதுச்செயலாளர் டி.டி. வி.தினகரன் இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் விடுத்துள்ள இரங்கல் செய்தியில் கூறி இருப்பதாவது:-

    தமிழக முன்னாள் சட்டப்பேரவை துணைத் தலைவரும், கழக அமைப்பு செயலாளருமான பரிதி இளம்வழுதி உடல் நலக்குறைவால் இன்று காலமானார் என்ற செய்தி கேட்டு மிகுந்த வேதனை அடைந்தேன். அன்னாரை இழந்துவாடும் அவரது குடும்பத்தாருக்கு கழக பொதுச்செயலாளரின் சார்பிலும், அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் சார்பிலும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.#ParithiIlamvazhuthi #MKStalin

    ×