search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பதிவேற்றம் செய்யப்படும் வீடியோக்கள்"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • தங்கள் வலைதளத்தில் வீடியோக்களை பதிவேற்றம் செய்ய பணம் பெற்றது அய்லோ
    • பாதிப்புக்கு உள்ளானவர்கள் எத்தனை பேர் என்பது குறித்து தகவல்கள் எதுவும் இல்லை

    வயது முதிர்ந்தவர்கள் காணும் வீடியோக்களை பதிவேற்றம் மற்றும் பதிவிறக்கம் செய்ய இணையதளங்கள் நடத்தும் நிறுவனங்கள் பல அமெரிக்காவில் உள்ளன. அவற்றில் "அய்லோ ஹோல்டிங்க்ஸ்" (Aylo Holdings) எனும் நிறுவனமும் ஒன்று.

    அய்லோ, தங்களின் "போர்ன் ஹப்" (Pornhub) எனும் இணையதளத்தில் இத்தகைய உள்ளடக்கம் கொண்ட வீடியோக்களை பதிவேற்றம் செய்ய விரும்பும் நிறுவனங்களுடன் ஒப்பந்தம் அமைத்து அவர்களிடம் பணம் பெற்று, அந்த வீடியோக்களை தங்கள் இணையதளத்தில் வெளியிட்டு விளம்பர வருவாய் ஈட்டி வருகிறது.

    அத்தகைய நிறுவனங்களில் ஒன்றான "கேர்ள்ஸ் டூ போர்ன்" எனும் வீடியோ பதிவேற்றம் செய்யும் நிறுவனத்துடன் அய்லோ ஹோல்டிங்க்ஸ் ஒப்பந்தம் செய்து கொண்டது. அவர்கள் பதிவேற்றம் செய்த வீடியோக்களை பயனர்கள் காணும் விதமாக தங்களின் போர்ன் ஹப் வலைதளத்தில் பரப்பி வந்தது.

    ஆனால், "கேர்ள்ஸ் டூ போர்ன்" நிறுவனம், பெண்களை சட்டவிரோதமாக கடத்தி, மிரட்டி, அவர்கள் விருப்பத்திற்கு மாறாக தகாத வீடியோக்களை எடுத்து போர்ன் ஹப் உட்பட பல இணையதளங்களில் பதிவேற்றம் செய்தது கண்டுபிடிக்கப்பட்டது.

    அந்நிறுவனத்தின் சட்டவிரோத செயல் குறித்து சில பெண்கள் புகார் அளித்ததால், வழக்கு பதிவு செய்யப்பட்டு அந்நாட்டு நீதிமன்றத்தில் விசாரணை நடந்து வந்தது.

    விசாரணையில் சம்மதமில்லாமல் எடுக்கப்பட்ட வீடியோ படங்கள் என தெரிந்தும், 2017லிருந்து 2020 வரை கேர்ள்ஸ் டூ போர்ன் நிறுவனத்திடமிருந்து சுமார் ரூ. 83 லட்சம் ($1,00,000) வரை பணம் பெற்று போர்ன் ஹப் வீடியோக்களை பரப்பியதும், அதன் மூலம் விளம்பர வருவாயாக சுமார் ரூ. 6 கோடிகள் ($7,64,000) வரை ஈட்டி வந்ததும் தெரிய வந்துள்ளது.

    பாதிக்கப்பட்ட பல பெண்கள் போர்ன் ஹப் நிறுவனத்திற்கு புகார் அனுப்பியிருந்தும் அவற்றை அந்நிறுவனம் உதாசீனப்படுத்தியது.

    இவ்வழக்கு விசாரணையில் ப்ரூக்ளின் நீதிமன்றம், அமெரிக்க அரசாங்கத்திற்கு போர்ன் ஹப், சுமார் ரூ. 15 கோடி ($1.8 மில்லியன்) வரை அபராதம் செலுத்த வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.

    இதற்கு சம்மதித்துள்ள போர்ன் ஹப், பாதிக்கப்பட்ட பெண்களுக்கும் தனித்தனியே இழப்பீடு வழங்கவும், இது போன்ற சம்பவங்கள் இனியும் நடைபெறாமல் இருக்கவும், புகார்களை உடனுக்குடன் கவனித்து தீர்வளிக்க கண்காணிப்பாளர் ஒருவரை தங்கள் வலைதளம் சார்பாக நியமிக்கவும் ஒப்பு கொண்டுள்ளது. ஆனால் பாதிப்புக்கு உள்ளான பெண்கள் எத்தனை பேர் என்பதும் அவர்களுக்கு எவ்வளவு தொகை இழப்பீடாக வழங்கப்பட்டது என்பது குறித்தும் தகவல்கள் இல்லை.

    ஆனால், பெண்களுக்கு ஏற்பட்ட ஈடு செய்ய முடியாத இழப்பிற்கு காரணமான ஒரு நிறுவனத்திற்கு இது போதுமான தண்டனையே அல்ல என சமூக வலைதளங்களில் பயனர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

    ×