search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நெடுஞ்சாலை ஒப்பந்த முறைகேடு"

    • சிறப்பு புலனாய்வு விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்கிற கோரிக்கையை ஏற்று சி.பி.ஐ. விசாரணைக்கு ஐகோர்ட்டு உத்தரவிட்டிருந்தது.
    • வழக்கு விசாரணை 13-ந் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

    சென்னை:

    அ.தி.மு.க. ஆட்சியின் போது முதலமைச்சராக இருந்த எடப்பாடி பழனிசாமி நெடுஞ்சாலை துறையில் ரூ.4ஆயிரத்து 800 கோடி முறைகேடு செய்திருப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது.

    இது தொடர்பாக தி.மு.க. அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் நெடுஞ்சாலை துறை ஒப்பந்த பணிகளில் பெரிய அளவில் முறைகேடு நடத்திருப்பதாக தெரிவித்திருந்தார். எடப்பாடி பழனிசாமியின் மகனான மிதுன் குமாருக்கு நெருங்கிய உறவினரான சந்திரகாந்த் ராமலிங்கத்துக்கும், எடப்பாடி பழனிசாமியின் சம்மந்தியான சுப்பிரமணியத்துக்கும் நெடுஞ்சாலை ஒப்பந்த பணிகள் வழங்கப்பட்டதால் தான் முறைகேடு நடந்திருப்பதாக அவர் குற்றம் சாட்டியிருந்தார்.

    ரூ.200 கோடியில் முடிய வேண்டிய திட்டத்துக்கு ரூ.1500 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாக புகார் கூறப்பட்டிருந்தது. இதுபோன்று நெடுஞ்சாலை துறையில் நடைபெற்றுள்ள 4 ஆயிரத்து 800 கோடி முறைகேடு தொடர்பாக லஞ்ச ஒழிப்பு போலீசார் உரிய முறையில் விசாரணை நடத்தவில்லை என்றும் கூறப்பட்டிருந்தது.

    இதனால் சிறப்பு புலனாய்வு விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்கிற கோரிக்கையை ஏற்று சி.பி.ஐ. விசாரணைக்கு ஐகோர்ட்டு உத்தரவிட்டிருந்தது.

    கடந்த 2018-ம் ஆண்டு பிறப்பிக்கப்பட்ட இந்த உத்தரவை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி மேல்முறையீடு செய்ததை தொடர்ந்து சுப்ரீம் கோர்ட்டு பிறப்பித்த உத்தரவால் ஐகோர்ட்டு வழக்கை மீண்டும் விசாரிக்க வேண்டும் என்று உத்தரவிட்டது.

    இது தொடர்பான வழக்கு விசாரணை ஐகோர்ட்டில் நேற்று நடைபெற்ற போதுதான் அரசு தரப்பில் ஆஜரான குற்றவியல் வக்கீல் அசன் முகமது ஜின்னா நெடுஞ்சாலைத் துறை ஒப்பந்த முறைகேடு தொடர்பாக விசாரணை நடத்த விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டுவிட்டதால் புதிதாக விசாரணை நடத்த தமிழ்நாடு விஜிலென்ஸ் கமிஷனர் ஒப்புதல் அளித்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

    இதையடுத்து லஞ்ச ஒழிப்பு போலீசார் எடப்பாடி பழனிசாமி மீதான நெடுஞ்சாலைத்துறை முறைகேடு வழக்கு தொடர்பாக புதிய குழுவை அமைத்து விரைவில் விசாரணை நடத்துவார்கள் என்று தெரிகிறது. இந்த விசாரணை விரைவில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    அதே நேரத்தில் எடப்பாடி தரப்பில் ஆஜரான வக்கீல் முகமது ரியாஸ் ஏற்கனவே இந்த வழக்கில் லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரித்து அளித்துள்ள அறிக்கையை பரிசீலனைக்கு உட்படுத்த வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டிருப்பதை சுட்டிக் காட்டினார்.

    வழக்கு விசாரணை 13-ந் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ள நிலையில் புதிதாக லஞ்ச ஒழிப்பு போலீஸ் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதால் இந்த வழக்கின் மீது எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

    ×