search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "எடப்பாடிபழனிசாமி"

    • சிறப்பு புலனாய்வு விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்கிற கோரிக்கையை ஏற்று சி.பி.ஐ. விசாரணைக்கு ஐகோர்ட்டு உத்தரவிட்டிருந்தது.
    • வழக்கு விசாரணை 13-ந் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

    சென்னை:

    அ.தி.மு.க. ஆட்சியின் போது முதலமைச்சராக இருந்த எடப்பாடி பழனிசாமி நெடுஞ்சாலை துறையில் ரூ.4ஆயிரத்து 800 கோடி முறைகேடு செய்திருப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது.

    இது தொடர்பாக தி.மு.க. அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் நெடுஞ்சாலை துறை ஒப்பந்த பணிகளில் பெரிய அளவில் முறைகேடு நடத்திருப்பதாக தெரிவித்திருந்தார். எடப்பாடி பழனிசாமியின் மகனான மிதுன் குமாருக்கு நெருங்கிய உறவினரான சந்திரகாந்த் ராமலிங்கத்துக்கும், எடப்பாடி பழனிசாமியின் சம்மந்தியான சுப்பிரமணியத்துக்கும் நெடுஞ்சாலை ஒப்பந்த பணிகள் வழங்கப்பட்டதால் தான் முறைகேடு நடந்திருப்பதாக அவர் குற்றம் சாட்டியிருந்தார்.

    ரூ.200 கோடியில் முடிய வேண்டிய திட்டத்துக்கு ரூ.1500 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாக புகார் கூறப்பட்டிருந்தது. இதுபோன்று நெடுஞ்சாலை துறையில் நடைபெற்றுள்ள 4 ஆயிரத்து 800 கோடி முறைகேடு தொடர்பாக லஞ்ச ஒழிப்பு போலீசார் உரிய முறையில் விசாரணை நடத்தவில்லை என்றும் கூறப்பட்டிருந்தது.

    இதனால் சிறப்பு புலனாய்வு விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்கிற கோரிக்கையை ஏற்று சி.பி.ஐ. விசாரணைக்கு ஐகோர்ட்டு உத்தரவிட்டிருந்தது.

    கடந்த 2018-ம் ஆண்டு பிறப்பிக்கப்பட்ட இந்த உத்தரவை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி மேல்முறையீடு செய்ததை தொடர்ந்து சுப்ரீம் கோர்ட்டு பிறப்பித்த உத்தரவால் ஐகோர்ட்டு வழக்கை மீண்டும் விசாரிக்க வேண்டும் என்று உத்தரவிட்டது.

    இது தொடர்பான வழக்கு விசாரணை ஐகோர்ட்டில் நேற்று நடைபெற்ற போதுதான் அரசு தரப்பில் ஆஜரான குற்றவியல் வக்கீல் அசன் முகமது ஜின்னா நெடுஞ்சாலைத் துறை ஒப்பந்த முறைகேடு தொடர்பாக விசாரணை நடத்த விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டுவிட்டதால் புதிதாக விசாரணை நடத்த தமிழ்நாடு விஜிலென்ஸ் கமிஷனர் ஒப்புதல் அளித்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

    இதையடுத்து லஞ்ச ஒழிப்பு போலீசார் எடப்பாடி பழனிசாமி மீதான நெடுஞ்சாலைத்துறை முறைகேடு வழக்கு தொடர்பாக புதிய குழுவை அமைத்து விரைவில் விசாரணை நடத்துவார்கள் என்று தெரிகிறது. இந்த விசாரணை விரைவில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    அதே நேரத்தில் எடப்பாடி தரப்பில் ஆஜரான வக்கீல் முகமது ரியாஸ் ஏற்கனவே இந்த வழக்கில் லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரித்து அளித்துள்ள அறிக்கையை பரிசீலனைக்கு உட்படுத்த வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டிருப்பதை சுட்டிக் காட்டினார்.

    வழக்கு விசாரணை 13-ந் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ள நிலையில் புதிதாக லஞ்ச ஒழிப்பு போலீஸ் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதால் இந்த வழக்கின் மீது எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

    • கோவையில் எடப்பாடி பழனிசாமிக்கு பாராட்டு விழா நடக்கிறது.
    • பொதுச்செயலாளராக பொறுப்பேற்ற பிறகு முதல் முறையாக வருவதால் தொண்டர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.

    கோவை,

    அ.தி.மு.க பொதுச்செ யலாளராக பொறுப்பேற்ற பிறகு முதல் முறையாக முன்னாள் முதல் அமைச்சரும், எதிர்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி நாளை கோவைக்கு வருகை தருகிறார்.

    கோவை மாவட்ட அ.தி.மு.க சார்பில் கோவை காளப்பட்டியில் உள்ள தனியார் மண்டபத்தில், அ.தி.மு.க. பொதுச்செயலாளராக பொறுப்பேற்ற எடப்பாடி பழனிசாமிக்கு பாராட்டு விழா நடக்கிறது.

    இந்த விழாவில் கலந்து கொள்வதற்காக நாளை மாலை சேலத்தில் இருந்து கார் மூலமாக அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கோவைக்கு வருகிறார்.

    கோவை வரும் எடப்பாடி பழனிசாமிக்கு கோவை-அவினாசி சாலையில் விமான நிலைய பகுதியில் இருந்து காளப்பட்டியில் விழா நடைபெறும் மண்டபம் வரைக்கும் அ.தி.மு.க தொண்டர்கள், நிர்வாகிகள் திரண்டு வந்து உற்சாக வரவேற்பு அளிக்க உள்ளனர்.

    அவர்களின் வரவேற்பை பெற்றுக்கொள்ளும் அவர், பின்னர் காளப்பட்டியில் பாராட்டு விழா நடக்கும் மண்டபத்திற்கு செல்கிறார். பாராட்டு விழாவுக்கு முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தலைமை தாங்குகிறார்.

    இந்த விழாவில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொள்கிறார். விழாவில் அ.தி.மு.க. பொதுச்செயலாளரை முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, எம்.எல்.ஏ.க்கள் வாழ்த்தி பேசுகிறார்கள்.

    இந்த விழாவில் கோவை மாவட்டம் முழுவதும் ஆயிரக்கணக்கான அ.தி.மு.க. நிர்வாகிகள், தொண்டர்கள் பங்கேற்க உள்ளனர்.இந்த விழா முடிந்த பின்னர், எடப்பாடி பழனிசாமி கார் மூலமாக விமான நிலையம் சென்று அங்கிருந்து விமானம் மூலம் சென்னைக்கு புறப்பட்டு செல்கிறார்.

    அ.தி.மு.க. பொதுச்செயலாளராக பொறுப்பேற்ற பிறகு முதல் முறையாக எடப்பாடி பழனிசாமி கோவைக்கு வருகை தர உள்ளதால் அ.தி.மு.கவினர் உற்சாகம் அடைந்துள்ளனர். கோவை வரும் அவருக்கு மிக பிரம்மாண்டமான அளவில் வரவேற்பு அளிக்கவும் தயாராகி வருகிறார்கள்.

    • இரவு 7 மணிக்கு தொடங்கிய ஆலோசனை நள்ளிரவு 12 மணி வரை சுமார் 5 மணி நேரம் இந்த ஆலோசனை கூட்டம் நடந்தது.
    • இரட்டை இலை சின்னம் தொடர்பாக 3 நாளில் தேர்தல் ஆணையம், ஓ.பன்னீர் செல்வம் ஆகியோர் பதில் அளிக்க சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

    ஈரோடு:

    ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் குறித்து அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கடந்த வாரம் ஈரோட்டில் 2 நாட்கள் கட்சியினருடன் ஆலோசனை நடத்தினார்.

    அப்போது முதல் நாள்கூட்டத்தில் ஈரோடு மாவட்டத்தில் உள்ள கட்சியின் முக்கிய நிர்வாகிளுடன் தேர்தல் பணிகள் குறித்து ஆலோசனையில் ஈடுபட்டார். சுமார் 8 மணி நேரம் ஆலோசனையில் ஈடுபட்டார்.

    தொடர்ந்து 2-வது நாள் தேர்தல் பணிக்குழு நிர்வாகிகள், தேர்தல் பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்ட முன்னாள் அமைச்சர்கள், கட்சியின் மூத்த நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

    அப்போது வீடு வீடாக சென்று தொடர்ந்து வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு பணியை மேற்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தினார்.

    இதையடுத்து அ.தி.மு.க.வினர் கடந்த 3 நாட்களாக வீடு வீடாக சென்று வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு பணியில் ஈடுபட்டனர். பகுதி வாரியாக இந்த பணிகளை தேர்தல் பொறுப்பாளர் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் ஆய்வு செய்தார்.

    3 நாட்கள் வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு பணி முடிவடைந்ததையடுத்து வார்டு வாரியாக ஆலோசனை செய்ய எடப்பாடி பழனிசாமி நேற்று ஈரோடு வில்லரசம்பட்டியில் உள்ள தனியார் மண்டபத்துக்கு வந்து களம் நிலவரம் குறித்து கேட்டறிந்தார்.

    தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி முன்னாள் அமைச்சர்கள் செங்கோட்டையன், கே.பி.முனுசாமி, நத்தம் விசுவநாதன், உதயகுமார், தங்கமணி, வேலுமணி, கே.பி.அன்பழகன், திண்டுக்கல் சீனிவாசன், கே.சி. கருப்பணன் மற்றும் கட்சியின் மூத்த நிர்வாகிகள் உள்ளிட்டோருடன் இரட்டை இலை சின்னம், வேட்பாளர் அறிவிப்பு குறித்து தீவிர ஆலோசனை நடத்தினார்.

    இரவு 7 மணிக்கு தொடங்கிய ஆலோசனை நள்ளிரவு 12 மணி வரை சுமார் 5 மணி நேரம் இந்த ஆலோசனை கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்துக்கு கட்சியின் முக்கிய நிர்வாகிகள் தவிர வேறு யாரையும் அனுமதிக்கவில்லை.

    இந்த ஆலோசனை கூட்டம் குறித்து கட்சியின் மூத்த நிர்வாகி ஒருவரிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:-

    இரட்டை இலை சின்னம் தொடர்பாக 3 நாளில் தேர்தல் ஆணையம், ஓ.பன்னீர் செல்வம் ஆகியோர் பதில் அளிக்க சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. எனவே அதன் அடிப்படையில் வருகிற 3-ந் தேதி (வெள்ளிக்கிழமை மாலையில் அ.தி.மு.க. வேட்பாளர் அறிவிக்கப்படலாம்.

    மேலும் இந்த கூட்டத்தில் தொகுதியின் களநிலவரம், மக்களின் மன நிலை குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது. மேலும் பூத் கமிட்டியினர் செயல்பாடு, பிரசார யுக்திகள் குறித்தும் விரிவாக பேசப்பட்டது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    அ.தி.மு.க. சார்பில் முன்னாள் எம்.எல்.ஏ., கே.எஸ்.தென்னரசு, மாணவர் அணி மாவட்ட இணை செயலாளர் நந்தகோபால் ஆகியோரில் ஒருவர் வேட்பாளராக அறிவிக்கப்படலாம் என்று தெரிகிறது.

    ×