search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நுண்ணூட்ட"

    • பயிருக்கு குறைந்த அளவில் தேவைப்படும் சத்துக்களான இரும்பு, துத்தநாகம், போரான், தாமிரம், மாங்கனீசு போன்ற சத்துக்கள் பயிரின் வளர்ச்சி மற்றும் மகசூலை அதிகரிக்கும்.
    • விவசாயிகள் குறைந்த செலவில் கூடுதல் மகசூல் பெற உதவிடும் வகையில் அவற்றை மானிய விலையில் வழங்கி வருகிறது.

    பரமத்தி வேலூர்:

    பரமத்திவேலூர் வேளாண்மை உதவி அலுவலர் கோவிந்தசாமி விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    உணவில் உப்பின் பயன்பாட்டை போன்றே நுண்ணூட்ட உரங்கள் தேவை. அதை சிறிதளவில் இட்டாலும் இதன் தேவை இன்றியமையாதது. பயிருக்கு குறைந்த அளவில் தேவைப்படும் சத்துக்களான இரும்பு, துத்தநாகம், போரான், தாமிரம், மாங்கனீசு போன்ற சத்துக்கள் பயிரின் வளர்ச்சி மற்றும் மகசூலை அதிகரிக்கும்.

    இரும்புச்சத்து பயிரின் பச்சை தன்மையை சீராக வைக்க உதவுகிறது. இதன் குறைப்பாட்டால் பயிர்கள் வெளிறி மஞ்சள் நிறம் அல்லது வெண்மை நிறத்துடன் காணப்படும். துத்தநாகச்சத்து கணு இடைப்பகுதி வளர்ச்சி, புரதங்களின் சேர்க்கையில் பங்காற்றி மொத்த மகசூலில் 20 சதவீதம் வரை அதிகரிக்க உதவுகிறது. இந்த சத்து குறைப்பாட்டால் பயிர்கள் வளர்ச்சி குன்றி குட்டையாகி மகசூல் பாதிக்கும். போரான் சத்து குறைப்பாட்டால் பூ உதிர்தல், காய், கனிகளின் அளவு சிறுத்து, ஒல்லியாகவும் ஒழுங்கற்ற அமைப்புடன் காணப்படும்.தாமிர சத்து பயிரின் இனப்பெருக்கத்தினை அதிகரித்து, அதிக மகசூல் பெற உதவுகின்றது. இந்த சத்து குறைப்பாட்டினால் பயிரில் மலட்டுத்தன்மை ஏற்பட வாய்ப்புள்ளது. மாங்கனீசு சத்து பச்சையம் உருவாதல், ஒளிர்சேர்க்கை, நோய் எதிர்ப்பு திறனை அதிகரிக்கும்.

    இதன் குறைபாட்டால் இலை நரம்பிடை பகுதிகள் வெளிறி காணப்படும். பயிர்களில் எளிதில் நோய் ஏற்படும். இவ்வாறு பல்வேறு முக்கிய பணி களை செய்யும் இந்த நுண்ணூட்டச் சத்துக்கள் இடுவதன் மூலம் நமது பயிரின் மொத்த மகசூலில் 15-20 சதவீம் கூடுதலாக பெறலாம். குறைந்த அளவே தேவைப்படும் இந்த நுண்ணூட்ட உரங்கள் ஒவ்வொரு பயிருக்கும் தேவைப்படும் அளவு மாறும்.வேளாண்மை துறை நுண்ணூட்ட சத்து கலவை களாக, சிறு தானிய பயிர்களுக்கான கலவை, எண்ணை வித்து கலவை, தென்னை நுண்ணூட்ட கலவை என ஒவ்வொரு பயிருக்கும் தேவையான அளவு சத்துக்களை தேவையான விகிதத்தில் கலந்து விவசாயிகள் வழங்கி வருகிறது. இதை பயிருக்கு ஏற்ப இடுவதற்கு எளிதாக ஒரு ஏக்கருக்கு 2.5 கிலோ நுண்ணூட்ட கலவை பொட்டலங்களாக விநியோகம் செய்து வருகிறது.

    விவசாயிகள் குறைந்த செலவில் கூடுதல் மகசூல் பெற உதவிடும் வகையில் அவற்றை மானிய விலையில் வழங்கி வருகிறது. நடப்பு பருவத்தில் பரமத்தி வட்டார விவசாயிகள் கூடுதல் மகசூல் பெற ஜி.எஸ்.டி நீங்கலாக 50 சதவீத மானிய விலையில் நுண்ணூட்ட உரங்களை பெற்று பயிருக்கு இடலாம். விவசாயிகள் சிட்டா நகல், ஆதார் எண்ணுடன் வட்டார வேளாண்மை விரிவாக்க மையத்தை அணுகி பயன்பெறலாம்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.  

    ×