search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நுண்கதிர்"

    • 23 மாவட்டங்களுக்கு ரூ.10.85 கோடி மதிப்பில் எக்ஸ்ரே கருவி பொருத்திய 23 நடமாடும் வாகனங்களை கொடிஅசைத்து தொடங்கி வைத்தார்.
    • வாகனத்தின் உட்பகுதி குளிர்சாதன வசதியுடன் கூடிய எக்ஸ்ரே அறை மற்றும் எடுக்கப்படும் எக்ஸ்ரேக்களை உடனுக்குடன் சரிபார்க்கும் வகையில் கணினி பொருத்தப்பட்ட அறை என இரண்டு அறைகளாக பிரிக்கப்பட்டுள்ளது.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் தேசிய காசநோய் ஒழிப்புத் திட்டம் சார்பில் காசநோய் தொற்று கண்டறியும் நுண்கதிர் நடமாடும் வாகனம் தொடக்க விழா நடந்தது. மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தலைமை வகித்தார். அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வாகனத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

    பின்னர் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேசியதாவது:-

    முதல்-அமைச்சர் கடந்த 1-ம் தேதி சென்னை நொச்சிக்குப்பத்தில் காசநோய் இல்லாத தமிழ்நாடு 2025 என்ற இலக்கை அடைய அரசு எடுத்து வரும் பல்வேறுநடவடிக்கைகளின் ஒருபகுதியாக 23 மாவட்டங்களுக்கு ரூ.10.85 கோடி மதிப்பில் எக்ஸ்ரே கருவி பொருத்திய 23 நடமாடும் வாகனங்களை கொடிஅசைத்து தொடங்கி வைத்தார்.

    இந்த நடமாடும் நுண்கதிர் வாகனத்தில் பொருத்தப்பட்டுள்ள நவீன டிஜிட்டல் எக்ஸ்ரே கருவி மூலம் மின்வசதி இல்லாத இடங்களில்கூட ஜெனரேட்டர் உதலியுடன் இயங்க வசதி செய்யப்பட்டுள்ளது. வாகனத்தின் உட்பகுதி குளிர்சாதன வசதியுடன் கூடிய எக்ஸ்ரே அறை மற்றும் எடுக்கப்படும் எக்ஸ்ரேக்களை உடனுக்குடன் சரிபார்க்கும் வகையில் கணினி பொருத்தப்பட்ட அறை என இரண்டு அறைகளாக பிரிக்கப்பட்டுள்ளது.

    மக்களுக்கு விழிப்புணர்வு மற்றும் நோய்த் தடுப்புமுறைகளை தெரிவிப்பதற்கு வண்ணத் தொலைக்காட்சி திரையும், முகாம்களின் போது பொதுமக்கள் வசதிக்காக நிழற்குடையும் வாகனத்தில் பொருத்தப்பட்டுள்ளன. ஒரு மணிநேரத்தில் 10 எக்ஸ்ரே எடுக்கும் திறன் கொண்ட இவ்வாகனங்களின் மூலம் நடப்பாண்டில் சுமார் 5 லட்சம் நபர்களுக்கு மறைந்திருக்கும் காசநோயை கண்டறிய திட்டமிடப்பட்டுள்ளது.

    தஞ்சாவூர் மாவட்டத்தில் கடந்த ஆண்டு காசநோய் அறிகுறி உள்ள 21.354 பேருக்கு பரிசோதனை செய்ததில் 2860 பேருக்கு காசநோய் இருப்பது உறுதிப்படுத்தப்பட்டு அவர்கள் சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டனர். அனைந்து காசநோயாளிகளுக்கும் சிகிச்சை காலத்தில் ஊட்டச்சத்திற்காக மாதந்தோறும் ரூ. 500 வழங்கப்பட்டு வருகிறது. இந்த நடமாடும் நுண்கதிர் வாகனத்தை பயன்படுத்தி தஞ்சை மாவட்டத்தில் மறைந்திருக்கும் காசநோய் தொற்று உள்ளவர்களை கண்டறிய அதிதீவிரகாசநோய் பரிசோதனை முகாம்கள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த நிகழ்ச்சியில் துரைசந்திரசேகரன் எம்.எல்.ஏ, காசநோய் துணை இயக்குனர் மாதவி, உலக சுகாதார அமைப்பு ஆலோசகர் பிரபு, எய்ட்ஸ் கட்டுப்பாட்டு மருத்துவ அலுவலர் பசுபதீஸ்வரன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    ×