search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நீதிபதி ரமணா"

    சிபிஐ இடைக்கால இயக்குனர் நாகேஸ்வரராவ் நியமனத்திற்கு எதிரான வழக்கை விசாரிக்கும் உச்ச நீதிமன்ற அமர்வில் இருந்து மேலும் ஒரு நீதிபதி விலகி உள்ளார். #CBIDirector #JusticeNVRamana
    புதுடெல்லி:

    சி.பி.ஐ. இயக்குனர் அலோக் வர்மாவுக்கும், சிறப்பு இயக்குனர் ராகேஷ் அஸ்தானாவுக்கும் இடையிலான பனிப்போர் உச்சகட்டத்தை எட்டிய நிலையில் இருவரும் கட்டாய விடுப்பில் அனுப்பப்பட்டனர். அத்துடன் இடைக்கால இயக்குனராக எம்.நாகேஸ்வரராவ் நியமிக்கப்பட்டார். இதுதொடர்பான வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், நாகேஸ்வர ராவின் நியமனத்தை ரத்து செய்து தீர்ப்பு அளித்தது.

    அதே நேரத்தில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான உயர் அதிகார குழு கூடி, அலோக் வர்மாவை சி.பி.ஐ. இயக்குனர் பதவியில் இருந்து நீக்க முடிவு எடுத்தது. அதைத் தொடர்ந்து புதிய இயக்குனர் நியமிக்கப்படும் வரையில் நாகேஸ்வரராவை இடைக்கால இயக்குனராக நியமித்து கடந்த 10-ந் தேதி மத்திய அரசு உத்தரவிட்டது.

    இதை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் ‘காமன் காஸ்’ என்ற தன்னார்வ தொண்டு அமைப்பு வழக்கு தொடுத்தது. இந்த வழக்கு விசாரணையில் இருந்து தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் கடந்த 21-ந் தேதி விலகினார். சி.பி.ஐ.யின் புதிய இயக்குனரை தேர்வு செய்யும் குழுவில் தான் இருப்பதால் இந்த வழக்கின் விசாரணையில் இருந்து விலகுவதாக அவர் அறிவித்தார்.



    மேலும், சுப்ரீம் கோர்ட்டில் 2-வது இடத்தில் உள்ள நீதிபதி ஏ.கே.சிக்ரி தலைமயிலான அமர்வு இந்த வழக்கை விசாரிக்கும் எனவும் அவர் அறிவித்தார். ஆனால், அவரும் இந்த வழக்கை விசாரிக்க முடியாது என்று கூறி, விசாரணையில் இருந்து சமீபத்தில் விலகினார்.

    எனவே, இந்த வழக்கு இனி வேறொரு நீதிபதியின் அமர்வு முன் இன்று விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், விசாரணை நடத்தும் அமர்வில் இடம்பெற்றிருந்த நீதிபதி என்.வி. ரமணா திடீரென வழக்கில் இருந்து விலகினார். அவர் இந்த வழக்கை விசாரிக்க மறுப்பு தெரிவித்துள்ளார். எனவே, இந்த வழக்கில், விசாரணையை தொடங்குவதில் இழுபறி நீடிக்கிறது.

    இந்த வழக்கு விசாரணையில் இருந்து விலகியது குறித்து நீதிபதி என்.வி.ரமணா கூறியதாவது:-

    நாகேஸ்வரராவ் எனது சொந்த மாநிலத்தை சேர்ந்தவர். அவரது மகள் திருமணத்தில் நான் பங்கேற்று உள்ளேன். இதனால் இந்த வழக்கு விசாரணையில் இருந்து நான் விலகி கொள்கிறேன். இந்த வழக்கை வேறு அமர்வு விசாரிக்கும். இது குறித்து தலைமை நீதிபதி முடிவு செய்வார்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.#CBIDirector #JusticeNVRamana
    ×