search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நாடு கடத்தல்"

    • கனடாவின் இந்த நடவடிக்கை பேரிடியாக வந்துள்ளதாக போராடும் மாணவர்கள் தெரிவித்தனர்.
    • வெளியுறவுத்துறை அமைச்சருக்கு பஞ்சாப் மாநில வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கான அமைச்சர் கடிதம் எழுதி உள்ளார்

    புதுடெல்லி:

    இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த நூற்றுக்கணக்கான மாணவர்கள், போலியான பல்கலைக்கழக நுழைவு கடிதங்கள் மூலம் கனடாவிற்குள் நுழைந்திருப்பதாகவும், அது சட்டவிரோதம் என்பதால், அவர்களை வெளியேற்றும் முயற்சியில் கனடாவின் எல்லை சேவை நிறுவனம் ஈடுபட்டு வருவதாகவும் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. இதனால் பாதிக்கப்பட்ட மாணவர்கள், போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

    கனடா எல்லை சேவை நிறுவனம் சமீபத்தில் 700 இந்திய மாணவர்களுக்கு நாடு கடத்தல் தொடர்பான கடிதங்களை வழங்கியுள்ளது. மாணவர்களின் சேர்க்கை தொடர்பான நுழைவு கடிதங்கள் போலியானவை என கண்டறிந்ததை அடுத்து இந்தக் கடிதங்கள் வழங்கப்பட்டன.

    2018ம் வருடம் கனடாவிற்குள் நுழைந்த தாங்கள் அனைவரும், படிப்பையும் முடித்து, நிரந்தர குடியுரிமைக்கு விண்ணப்பித்து காத்திருக்கும் நேரத்தில், கனடாவின் இந்த நடவடிக்கை பேரிடியாக வந்துள்ளதாக போராடும் மாணவர்கள் தெரிவித்தனர்.

    நாங்கள் முதலில் சேருவதற்காக வந்த கல்லூரியில் இடமில்லாததால், அதே பல்கலைக்கழகத்தின் வேறு கல்லூரிகளில் முகவர்கள் இடம் மாற்றி தந்ததாகவும், 3-4 வருடங்கள் கடந்த பின்னர், பட்டப்படிப்பும் முடிந்த நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் சமந்தீப் சிங் எனும் மாணவர் என்டிடிவி தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் தெரிவித்தார்.

    சேமிப்பு அனைத்தையும் செலவிட்டு கனடாவில் கல்வி பயில வந்ததாகவும், இந்த அறிவிப்பு பல மாணவ-மாணவியரின் மனநலத்தையும் பாதித்திருப்பதாகவும், ஒரு சிலர் தற்கொலை செய்துகொள்ளும் மனநிலையில் இருப்பதாகவும், இந்திய அரசாங்கம் இதில் தலையிட்டு கனடா அரசுடன் பேச வேண்டும் என்றும் லவ்ப்ரீத் சிங் எனும் மற்றொரு மாணவர் தெரிவித்தார்.

    மாணவர்கள் கனடா செல்வதற்காக வீடு, நிலங்களை விற்று, நிறைய பொருட்செலவு செய்துள்ளனர் என்றும் அவர்கள் மிகப் பெரிய அளவில் ஏமாற்றப்பட்டுள்ளனர் என்றும், இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரின் தலையீட்டை கோரியிருப்பதாகவும் பஞ்சாப் மாநில வெளிநாடு வாழ் இந்தியர்கள் விவகாரத்துறை அமைச்சர் குல்தீப் சிங் தாலிவால் தெரிவித்தார்.

    ஜெய்சங்கருக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், சுமார் 700 மாணவர்களின் வாழ்வாதார பிரச்சனை என்பதால் இதில் உடனடியாக தலையிட்டு, கனடா நாட்டின் தூதரக அதிகாரிகளுடன் இவ்விஷயத்தை எழுப்பி துரிதமாக தீர்வு காண வேண்டும் என தாலிவால் வலியுறுத்தியுள்ளார்.

    இதற்கிடையே இப்பிரச்சனையில் கனடாவிலுள்ள புதிய ஜனநாயக கட்சியின் தலைவர் ஜக்மீத் சிங், கனடா நாட்டு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவிடம் பேசியபோது, மாணவர்களின் நாடு கடத்தலை நிறுத்தி வைக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.

    இதற்கு பதிலளித்துள்ள பிரதமர் ட்ரூடோ, குற்றவாளிகளை அடையாளம் கண்டு தண்டிப்பதுதான் அரசின் நோக்கமே தவிர, பாதிக்கப்பட்ட அப்பாவி மாணவர்களை பழி வாங்குவதல்ல என கூறியுள்ளார்.

    இந்த விஷயத்தில் மத்திய அரசு தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பஞ்சாப் அரசும் கேட்டுக்கொண்டுள்ளது

    • டேவிட் ஹெட்லிக்கு லஷ்கர்-இ-தொய்பாவுடன் தொடர்பு இருப்பது ராணாவுக்கு தெரியும்.
    • ராணாவை நாடு கடத்துவதற்கு அவரது வழக்கறிஞர் எதிர்ப்பு தெரிவித்தார்.

    வாஷிங்டன்:

    மும்பையின் பல்வேறு இடங்களில் 2008ம் ஆண்டு பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் ஆறு அமெரிக்கர்கள் உள்பட 166 பேர் கொல்லப்பட்டனர். தாக்குதலில் முக்கிய குற்றவாளியான டேவிட் ஹெட்லி அமெரிக்காவில் கைது செய்யப்பட்டு 35 ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவித்து வருகிறார். இவரது நண்பரும், தாக்குதல் திட்டத்திற்கு உதவியவருமான கனடாவில் வசித்த பாகிஸ்தான் வம்சாவளியைச் சேர்ந்த தொழிலதிபர் தஹவூர் ராணா (வயது 62) 2020ம் ஆண்டில் அமெரிக்காவில் கைது செய்யப்பட்டார்.

    தாக்குதல் வழக்கில், இவரது பங்கு குறித்து தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) விசாரித்து வருகிறது. அவரை தேடப்படும் குற்றவாளியாக அறிவித்து, நாடு கடத்தக் கோரி அமெரிக்காவின் சிகாகோ நீதிமன்றத்தில் இந்திய அரசு சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

    வழக்கு விசாரணையின் போது, ராணாவின் நண்பரான டேவிட் ஹெட்லிக்கு லஷ்கர்-இ-தொய்பாவுடன் தொடர்பு இருப்பதும், ஹெட்லிக்கு உதவுவதன் மூலமும், அவனது நடவடிக்கைகளுக்கு பாதுகாப்பு அளித்து, பயங்கரவாத அமைப்புக்கு ஆதரவளிப்பதும் ராணாவுக்குத் தெரியும் என்று அரசு தரப்பு வழக்கறிஞர்கள் வாதிட்டனர். ஹெட்லி யார் யாரையெல்லாம் சந்தித்தார்? என்ன பேசப்பட்டது? தாக்குதலுக்கு திடட்மிடப்பட்ட சில இலக்குகள் உட்பட தாக்குதல்களின் திட்டமிடல் ஆகியவற்றை ராணா அறிந்திருந்தார் என்றும் தெரிவித்தனர். ராணாவை நாடு கடத்துவதற்கு அவரது வழக்கறிஞர் எதிர்ப்பு தெரிவித்தார்.

    அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில், லாஸ் ஏஞ்சல்சின் மத்திய மாவட்ட நீதிபதி ஜாக்குலின் சூல்ஜியன் மே 16ல் உத்தரவு பிறப்பித்தார். அதில், 2008 மும்பை பயங்கரவாத தாக்குதலில் தொடர்புடைய தஹவூர் ராணாவை இந்தியாவிற்கு நாடு கடத்தலாம் என்றார்.

    ரோஹிங்கியா அகதிகள் 7 பேரை மியான்மருக்கு இந்தியா நாடு கடத்தியதற்கு ஐநா மனித உரிமைகள் ஆணையம் தனது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளது. #UN #Rohingya
    ஜெனீவா:

    இந்தியாவில் சட்டவிரோதமாக சுமார் 40 ஆயிரம் ரோஹிங்கியா முஸ்லிம்கள் அகதிகளாக தங்கியுள்ளதாக கூறப்படுகிறது. இதற்காக அவர்களின் பயோமெட்ரிக் தகவல்களை சேகரிக்க மாநில அரசுக்களிடம் கேட்டுகொண்டிருந்தது. சமீபத்தில், முதல் கட்டமாக 7 பேர் மியான்மருக்கு நாடு கடத்தப்பட்டனர்.

    மணிப்பூரில் உள்ள மொரே எல்லையில், மியான்மர் நாட்டு அதிகாரிகளிடம் இந்திய அதிகாரிகள் 7 பேரையும் ஒப்படைத்தனர். இந்தியா வந்த ரோஹிங்யாக்கள் நாடு கடத்தப்படுவது, இதுவே முதல் முறையாகும். முன்னதாக, தாங்கள் மியான்மருக்கு சென்றால் இனப்படுகொலைக்கு ஆளாவோம் என்பதால் தங்களை நாடு கடத்தக்கூடாது என 7 பேர் சார்பிலும் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.

    இதை விசாரித்த தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு, இந்த விவகாரத்தில் தலையிட மறுத்து விட்டது.
    இவர்கள் கடந்த 2012-ம் ஆண்டு அசாமில் சட்ட விரோதமாக குடியேறினர். இவர்களை இந்திய அதிகாரிகள் கைது செய்து சிலிசார் சிறையில் அடைத்து இருந்தனர். இவர்களை நாடு கடத்த உள்ளூர் கோர்ட்டு உத்தரவிட்டது. அதன்படி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

    இந்நிலையில், இந்தியா 7 ரோஹிங்யாக்களை மியான்மருக்கு நாடு கடத்தியதற்கு ஐ.நா. சபை கண்டனம் தெரிவித்துள்ளது. மியான்மரில் முஸ்லிம் சிறுபான்மையினருக்கு எதிராக ராணுவம் ஏற்கனவே கொடூரமான நிலைப்பாட்டை கொண்டுள்ள நிலையில் இப்போது அங்கு செல்பவர்களும் அதே நிலைதான் நேரிடும் என ஐ.நா. எச்சரிக்கை விடுத்த நிலையிலும் இந்தியா நடவடிக்கையை எடுத்துள்ளது என குற்றம் சாட்டியுள்ளது. 

    மியான்மருக்கு நாடு கடத்தப்பட்ட 7 பேரின் பாதுகாப்பு குறித்து அதீத கவலைக்கொள்வதாக ஐ.நா. சபை தெரிவித்துள்ளது. இந்திய அதிகாரிகள் தங்களுடைய எச்சரிக்கைக்கு மதிப்பளிக்கவில்லை எனவும் ஐ.நா. சபை கவலையை தெரிவித்துள்ளது.
    11 நாடுகள் வழியே பயணித்து அமெரிக்காவுக்குள் சட்டவிரோதமாக நுழைந்து பின்னர் அங்கு 15 மாதங்கள் கடை ஒன்றில் வேலை செய்த இந்தியர் தற்போது போலீசில் சிக்கியுள்ளார்.
    புதுடெல்லி:

    வெளிநாட்டு மோகம் என்பது இந்தியர்கள் அனைவருக்கும் அடிப்படை உணர்வுகளில் ஒன்றாக மாறிவிட்டது. குறிப்பாக அமெரிக்கா மோகம் என்பது நவீன காலம் முதலே இந்தியர்களிடையே இருந்துவருகிறது.

    அதன்படி அமெரிக்கா குடியுரிமை பெற விரும்பிய பஞ்சாபை சேர்ந்த ஹர்பிரீத் சிங் என்பவர், ஒன்றரை வருடங்களாக அமெரிக்காவில் சட்டவிரோதமாக தங்கியிருந்ததற்காக கைது செய்யப்பட்டு டெல்லி போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

    அமெரிக்காவை இலக்காக கொண்டு 2016-ம் ஆண்டு பிரேசில் சென்ற ஹர்பிரீத் சிங், அங்கிருந்து பொலீவியா சென்று அங்கிருந்து சாலை மார்க்கமாக பெரு நாட்டை அடைந்துள்ளார். பின் கொலம்பியா, பனாமா, கவுதமமாலா உள்ளிட்ட 11 நாடுகளை கடந்து இறுதியாக அமெரிக்க அண்டை நாடான மெக்ஸிகோவை எட்டியுள்ளார்.

    பின்னர், அங்கிருந்து படகு மூலம் சட்டவிரோதமாக அமெரிக்காவுக்குள் ஹர்பிரீத் சிங் நுழைந்துள்ளார். அங்கு 15 மாதங்கள் கடை ஒன்றில் வேலை பார்த்த அவர் போலீசாரிடம் சிக்கி மீண்டும் இந்தியாவுக்கு திரும்ப அனுப்பி வைக்கப்பட்டார். டெல்லி விமான நிலையத்தில் வந்திறங்கிய அவரை டெல்லி போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

    அமெரிக்காவை நோக்கிய ஹர்பிரீத் சிங்கின் பயணத்தின் போது அவரது பாஸ்போர்ட் திருடு போயுள்ளது. இதனை அடுத்து, இந்தியாவில் உள்ள ஒரு ஏஜென்சி மூலமாக போலி பாஸ்போர்ட் பெற முயன்றுள்ளார். இது தெரிய வந்த பின்னர் அந்த ஏஜெண்ட் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
    ×