என் மலர்
இந்தியா

ஷேக் ஹசீனாவை நாடுகடத்த வங்கதேசம் தீவிரம்.. இந்தியாவுக்கு கடிதம்
- "என் மீது 227 வழக்குகள் உள்ளன, எனவே எனக்கு 227 பேரைக் கொல்ல உரிமம் உள்ளது" என்று கூறிய ஆடியோ வெளியானது.
- மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்கள் மற்றும் கொலைகள் ஆகியவற்றை அரங்கேற்றியதாகவும் குற்றம் சாட்டியுள்ளது.
மாணவர் எழுச்சியை அடுத்து கடந்த ஆகஸ்ட் 5, 2024 வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா இந்தியா தப்பிவந்தார். இந்நிலையில் அவரை நாடு கடத்த வங்கதேச இடைக்கால அரசு இந்தியாவிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
இடைக்கால நிர்வாகத்தின் வெளியுறவு விவகார ஆலோசகர் முகமது தௌஹித் ஹொசைன், இந்திய அதிகாரிகளுக்கு அதிகாரப்பூர்வமாகக் கோரிக்கை அனுப்பப்பட்டுள்ளதை உறுதிப்படுத்தினார்.
அண்மையில் சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயம் (ICT), நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் அவருக்கு ஆறு மாத சிறைத் தண்டனை விதித்த நிலையில் இந்த நாடுகடத்தல் முயற்சியில் வங்கதேசம் முனைப்பு காட்டி வருகிறது.
கடந்த 2024 மாணவர் போராட்டத்துடன் தொடர்புடைய விசாரணை குறித்து ஷேக் ஹசீனா மற்றும் அவாமி லீக் தலைவர் ஷகில் ஆலம் புலபுல் ஆகியோர் பேசிய ஆடியோ கிளிப் பின்னணியில் இந்த வழக்கு நடந்து வந்தது.
அந்த ஆடியோவில் பேசும் ஷேக் ஹசீனா "என் மீது 227 வழக்குகள் உள்ளன, எனவே எனக்கு 227 பேரைக் கொல்ல உரிமம் உள்ளது" என்று கூறியதாகக் கூறப்படுகிறது.
மேலும், சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயம், ஷேக் ஹசீனா மீது அரசுக்கு எதிரான இயக்கத்தின் போது வன்முறையைத் தூண்டியது, மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்கள் மற்றும் திட்டமிட்ட கொலைகள் ஆகியவற்றை அரங்கேற்றியதாகவும் குற்றம் சாட்டியுள்ளது. இந்தச் செயல்கள் அனைத்தும் நேரடியாக அவரது உத்தரவின் பேரில் நடந்ததாக முறையான குற்றச்சாட்டுகள் தெரிவிக்கின்றன.
ஆனால், இந்தத் தீர்ப்பாயத்தின் முடிவை அவாமி லீக் கட்சி வன்மையாகக் கண்டித்துள்ளது. இது அரசியல் நோக்கங்களுக்காக தேச விரோத மற்றும் சுதந்திரத்திற்கு எதிரான சக்திகளால் நடத்தப்படும் போலி விசாரணை என்று விமர்சித்துள்ளது.