search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நவக்கிரக சிறப்பு பஸ்"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • சிறப்பு பஸ்சானது வாரந்தோறும் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் கும்பகோணம் கோட்டத்தின் மூலம் இயக்கப்படும்.
    • பஸ்சில் பயணிக்க tnstc செயலி அல்லது www.tnstc.in என்ற இணையதளத்தில் பக்தர்கள் முன்பதிவு செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    கும்பகோணம்:

    தஞ்சை மாவட்டம் கும்பகோணம் மற்றும் அதனை சுற்றியுள்ள நவகிரக தலங்களுக்கு ஒரே நாளில் ஒரே பஸ்சில் பயணம் செய்யும் வகையில் சிறப்பு பஸ் இயக்க வேண்டும் என்று பக்தர்கள் நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வந்தனர்.

    அதனை ஏற்று, நவக்கிரக சிறப்பு பஸ் இயக்கப்படும் என்று போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் அறிவித்தார்.

    அதன்படி, இன்று (சனிக்கிழமை) நவக்கிரக சிறப்பு பஸ் தொடக்க விழா கும்பகோணத்தில் நடந்தது. விழாவில் எம்.பி.க்கள் கல்யாணசுந்தரம், ராமலிங்கம், அன்பழகன் எம்.எல்.ஏ., அரசு போக்குவரத்து கழக மேலான் இயக்குனர் மோகன், துணை மேயர் சு.ப. தமிழழகன் ஆகியோர் முன்னிலையில் அமைச்சர் சிவசங்கர் கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.

    தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து முன்பதிவு செய்த 52 பக்தர்கள் இந்த சிறப்பு பஸ்சில் பயபக்தியுடன் பயணித்தனர். இன்று ஒரு பஸ் மட்டுமே இயக்கப்பட்டது. இனி வரும் காலங்களில் பொதுமக்கள் வரவேற்பு மற்றும் பயணிகள் எண்ணிக்கை அதிகரித்தால் கூடுதலாக பஸ்கள் இயக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் சிவசங்கர் தெரிவித்தார்.

    இந்த சிறப்பு பஸ்சானது வாரந்தோறும் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் கும்பகோணம் கோட்டத்தின் மூலம் இயக்கப்படும். இதற்கு பயண கட்டணமாக நபர் ஒருவருக்கு ரூ.750 நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

    அதன்படி, இந்த சிறப்பு பஸ்சானது முன்பதிவு செய்த பயணிகளை அழைத்துக் கொண்டு காலை 6 மணிக்கு கும்பகோணம் பஸ் நிலையத்தில் இருந்து புறப்பட்டு திங்களூர் சந்திரன் கோவிலுக்கு சென்றது. பின்னர் அங்கு பக்தர்கள் தரிசனம் செய்து முடித்தனர். அதனை தொடர்ந்து 2-வதாக திருவாரூர் மாவட்டம் ஆலங்குடிக்கு காலை 7.15 மணிக்கு சென்று அங்கு குரு பகவான் தரிசனம் செய்ய பக்தர்கள் இறக்கி விடப்பட்டனர். தரிசனம் முடிந்த பின்னர் காலை உணவு இடைவேளை விடப்பட்டது.

    தொடர்ந்து, ஆலங்குடியில் இருந்து புறப்பட்டு 9 மணிக்கு தஞ்சை மாவட்டம் திருநாகேஸ்வரம் ராகு பகவான் கோவில், 10 மணிக்கு சூரியனார் கோவில் சூரிய பகவான் கோவிலில் தரிசனம் செய்தனர்.

    தொடர்ந்து அங்கிருந்து புறப்பட்டு கஞ்சனூர் சுக்கிரன் கோவில் தரிசனம், மயிலாடுதுறை மாவட்டம் வைத்தீஸ்வரன் கோவிலில் செவ்வாய் தரிசனம், பிற்பகலில் மதிய உணவுக்கான இடைவேளை விடப்படும்.

    பின்னர், 2.30 மணிக்கு திருவெண்காடு புதன் கோவில் தரிசனம், மாலை 4 மணிக்கு கீழப்பெரும்பள்ளம் கேது பகவான் தரிசனம், இறுதியாக 4.45 மணிக்கு திருநள்ளாறு சனிபகவான் கோவில் தரிசனத்திற்காக பக்தர்கள் இறக்கி விடப்படுவார்கள். அத்துடன் தரிசனம் நிறைவடையும்.

    இதையடுத்து திருநள்ளாறில் இருந்து மாலை 6 மணிக்கு புறப்படும் பஸ் இரவு 8 மணிக்கு கும்பகோணத்தை வந்தடையும்.

    மொத்தம் 9 நவக்கிரக கோவில்களை ஒரே நாளில் பக்தர்கள் தரிசனம் செய்வர் என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்த பஸ்சில் பயணிக்க tnstc செயலி அல்லது www.tnstc.in என்ற இணையதளத்தில் பக்தர்கள் முன்பதிவு செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    ×