search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நகை பணம் மோசடி"

    • தன்னுடைய வீட்டின் பீரோவில் இருந்து தனது தந்தைக்கு தெரியாமலேயே ரூ.2 லட்சம் பணம், 8 பவுன் நகையை மாணவி தன்னுடைய காதலனிடம் கொடுத்தார்.
    • பீரோவில் வைத்திருந்த நகை, பணம் காணாமல் போனதை கண்டு திடுக்கிட்ட மாணவியின் தந்தை அவரிடம் விசாரணை நடத்தினார்.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம், விசாகப்பட்டினம் மாவட்டம், அக்காய பாலம், சங்கரமடம் பகுதியை சேர்ந்தவருக்கு ஒரு மகனும், 17 வயதில் மகளும் உள்ளனர். மகள் விசாகப்பட்டினத்தில் உள்ள கல்லூரியில் இன்டர்மீடியட் படித்து வருகிறார்.

    கல்லூரி அருகே உள்ள ஐ.டி.ஐ-யில் 17 வயது மாணவர் ஒருவர் படித்து வருகிறார். மாணவனும், மாணவியும் அடிக்கடி சந்தித்துக் கொண்டதால் அவர்களிடையே காதல் மலர்ந்தது. இருவரும் சினிமா, பூங்கா என சுற்றி வந்தனர்.

    இந்த நிலையில் மாணவர் காதலியிடம் ஐடிஐ படித்து முடித்தவுடன் வேலைக்குச் சென்று உன்னை திருமணம் செய்து கொள்கிறேன். தற்போது கடன் பிரச்சினை உள்ளதால் உன்னுடைய வீட்டில் இருந்து பணத்தை எடுத்து வந்து கொடு என கேட்டுள்ளார்.

    இதையடுத்து தன்னுடைய வீட்டின் பீரோவில் இருந்து தனது தந்தைக்கு தெரியாமலேயே ரூ.2 லட்சம் பணம், 8 பவுன் நகையை தன்னுடைய காதலனிடம் கொடுத்தார். பீரோவில் வைத்திருந்த நகை, பணம் காணாமல் போனதை கண்டு திடுக்கிட்ட மாணவியின் தந்தை அவரிடம் விசாரணை நடத்தினார்.

    விசாரணையில் நகை, பணத்தை தன்னுடைய காதலனுக்கு கொடுத்ததை ஒப்புக்கொண்டார். இதையடுத்து மாணவிக்கும், அவரது தந்தைக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதனால் ஆத்திரம் அடைந்த மாணவி சமையல் அறையில் இருந்த கத்தியை எடுத்து வந்து தந்தையின் கழுத்து மார்பு பகுதியில் குத்தினார். இதில் படுகாயம் அடைந்த மாணவியின் தந்தை ரத்த வெள்ளத்தில் சரிந்து கீழே விழுந்தார். இதனைக் கண்ட அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

    இதுகுறித்து விசாகப்பட்டினம் போலீசார் வழக்கு பதிவு செய்து மாணவியிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் காதலனிடம் நகை, பணத்தை கொடுத்ததை போலீசாரிடம் தெரிவித்தார்.

    போலீசார் மாணவியின் காதலனை அழைத்து வந்து விசாரணை நடத்தியதில் மாணவியிடம் வாங்கிய நகை, பணத்தை வேறு ஒரு காதலிக்கு செலவு செய்ததாக தெரியவந்தது.

    இதனைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த மாணவி காதலன் மீது போலீசில் புகார் செய்தார். இருவரையும் கைது செய்த போலீசார் அவர்களை நீதிபதி முன்பு ஆஜர்படுத்தி சிறார் சீர்திருத்த பள்ளியில் ஒப்படைத்தனர்.

    • விஸ்வாம்பரனின் வீட்டுக்கு வந்த வித்யா, கடுமையான சாப தோஷம் இருப்பதால் வீட்டில் வைத்து தொடர்ந்து பரிகார பூஜை நடத்த வேண்டும் என்று கூறியுள்ளார்.
    • விஸ்வாம்பரனின் குடும்பத்தினர் வீட்டில் இருந்த 55 பவுன் நகை மற்றும் ரூ.1½ லட்சத்தை கொடுத்துள்ளனர்.

    திருவனந்தபுரம்:

    திருவனந்தபுரம் வெள்ளயாணி பகுதியை சேர்ந்தவர் விஸ்வாம்பரன் (வயது 65). இவருடைய குடும்பத்தில் சிலர் அடுத்தடுத்து மரணமடைந்தனர். இதனால் விஸ்வாம்பரன் மனமுடைந்த நிலையில் இருந்தார்.

    இதனால் அவர் அந்த பகுதியில் உள்ள ஒரு ஜோதிடரை நேரில் சென்று பார்த்துள்ளார். அப்போது சில பரிகார பூஜைகள் நடத்த வேண்டும் என அந்த ஜோதிடர் கூறியுள்ளார். மேலும் குமரி மாவட்டம் களியக்காவிளை அருகே உள்ள தெற்றியோடு தேவி என அழைக்கப்படும் வித்யா என்ற பெண் மந்திரவாதி இருக்கிறார். அவர் பரிகார பூஜை நடத்துவார் என்று கூறியுள்ளார்.

    இதனை தொடர்ந்து கடந்த ஆண்டு விஸ்வாம்பரன் களியக்காவிளை சென்று பெண் மந்திரவாதி வித்யாவை சந்தித்தார். அப்போது நான் நேரடியாக வீட்டுக்கு வந்து பரிகார பூஜை நடத்துகிறேன் என்று வித்யா கூறியுள்ளார். அதன்படி சில நாட்கள் கழித்து விஸ்வாம்பரனின் வீட்டுக்கு வந்த வித்யா, கடுமையான சாப தோஷம் இருப்பதால் வீட்டில் வைத்து தொடர்ந்து பரிகார பூஜை நடத்த வேண்டும் என்று கூறியுள்ளார்.

    பின்னர் வீட்டிலேயே ஒரு அறை பூஜை அறையாக மாற்றப்பட்டது. ஒரு வாரத்திற்கு மேல் வித்யாவும், அவருடன் வந்தவர்களும் சேர்ந்து பூஜை நடத்தினர். ஒரு கட்டத்தில் தேவியின் சாபம் குறையவில்லை என கூறிய வித்யா, வீட்டில் உள்ள நகை மற்றும் பணத்தை வைத்து பூஜை நடத்த வேண்டும் என்றார்.

    அதை நம்பிய விஸ்வாம்பரனின் குடும்பத்தினர் வீட்டில் இருந்த 55 பவுன் நகை மற்றும் ரூ.1½ லட்சத்தை கொடுத்துள்ளனர். அவற்றை பூஜை அறையில் உள்ள பீரோவில் வைத்து விட்டு செல்லும்படி வித்யா கூறியுள்ளார். பூஜையை முடித்ததும் 2 வாரம் கழித்து தன்னிடம் தெரிவித்து விட்டு பீரோவை திறந்து நகை மற்றும் பணத்தை எடுத்துக் கொள்ளும்படி கூறிவிட்டு வித்யா அங்கிருந்து சென்றார்.

    2 வாரங்கள் கழிந்ததும் வித்யாவை விஸ்வாம்பரன் தொடர்புகொண்டு பீரோவை திறக்கலாமா? எனறு கேட்டுள்ளார். தேவியின் சாபம் இன்னும் குறைவில்லை என்றும், 3 மாதம் கழித்து தான் பீரோவை திறக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார். அதன்படி 3 மாதமும் கழிந்தது. பின்னர் கேட்டபோது ஒரு வருடம் கழித்து திறக்க வேண்டும் என கூறியுள்ளார். இதனால் விஸ்வாம்பரனுக்கு சந்தேகம் உருவானது.

    உடனே அவர் பூஜை அறைக்கு சென்று பீரோவை திறந்து பார்த்தார். அப்போது அதில் வைத்திருந்த நகை மற்றும் பணத்தை காணவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த விஸ்வாம்பரன் உடனடியாக வித்யாவை தொடர்பு கொண்டு விவரத்தை கூறியுள்ளார். அப்போது போலீசில் புகார் செய்தால் குடும்பத்தையே கொலை செய்து விடுவேன் என்று வித்யா மிரட்டியுள்ளார். எனினும் மிரட்டலுக்கு பயப்படாத விஸ்வாம்பரன் இது குறித்து திருவனந்தபுரம் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து பெண் மந்திரவாதி வித்யா மற்றும் அவருடன் வந்தவர்களை தேடி வருகின்றனர்.

    ×