search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தொழிலார்கள் போராட்டம்"

    பட்டாசு தொழிற்சாலைகளை திறக்க வலியுறுத்தி சிவகாசி உள்பட 19 இடங்களில் சாலை மறியல் போராட்டம் நடந்தது.
    விருதுநகர்:

    பட்டாசு வெடிப்பதால் மாசு ஏற்படுவதாக தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் பட்டாசு உற்பத்திக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்தது. பசுமை பட்டாசுகளை தயாரிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தியது.

    உச்சநீதிமன்றம் விதித்துள்ள நிபந்தனைகளின்படி பட்டாசு தயாரிக்க முடியாது, பசுமை பட்டாசு என்றால் என்ன என்பதை தெளிவுப்படுத்த வேண்டும் என பட்டாசு ஆலை உரிமையாளர்கள் தெரிவித்தனர்.

    மேலும் நீதிமன்ற விதிகளை பின்பற்றி பட்டாசு தயாரிக்க வழியில்லை என்பதால் பட்டாசு ஆலைகளை காலவரையன்றி மூடுவதாக அறிவித்தனர். அதன்படி கடந்த 3 மாதங்களுக்கும் மேலாக பட்டாசு ஆலைகள் மூடப்பட்டுள்ளன.

    இதனால் விருதுநகர் மாவட்டம், சிவகாசி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இயங்கி வந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட பட்டாசு ஆலைகள் மூடப்பட்டன. அங்கு வேலை பார்த்து வந்த தொழிலாளர்கள் வேலை இழந்தனர். இதனால் அவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.

    இந்த நிலையை மாற்ற வேண்டியும், மூடப்பட்ட பட்டாசு ஆலைகளை திறக்க வலியுறுத்தியும் கடந்த சில நாட்களுக்கு முன்பு விருதுநகர் கலெக்டர் அலுவலகத்தில், பட்டாசு ஆலை தொழிலாளர்கள் முற்றுகை போராட்டம் நடத்தினர். அதன் பின்னரும் இதுவரை பட்டாசு ஆலைகள் திறக்க நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

    இதனைத் தொடர்ந்து மத்திய-மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டி மறியல் போராட்டம் நடத்தப்போவதாக தொழிற்சங்கங்கள் அறிவித்தன.

    அதன்படி விருதுநகர், சிவகாசி, அருப்புக்கோட்டை, காரியாபட்டி, ராஜபாளையம், சேத்தூர், கீழராஜகுலராமன், சாத்தூர், ஏழாயிரம்பண்ணை, வெம்பக்கோட்டை, ஆமத்தூர், ஸ்ரீவில்லிபுத்தூர், வச்சக்காரப்பட்டி உள்பட 19 இடங்களில் சாலை மறியல் போராட்டம் இன்று நடந்தது.

    இதில் சி.ஐ.டி.யூ., ஏ.ஐ.டி. யூ.சி., தொ.மு.ச. உள்ளிட்ட பல்வேறு சங்கத்தினர் பங்கேற்றனர். இவர்கள் 6 இடங்களில் கோரிக்கை விளக்க ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர்.

    பட்டாசு மற்றும் தீப்பெட்டி தொழிலாளர்கள் சார்பில் சிவகாசி, மாரநேரி, திருத்தங்கல், தாயில்பட்டி, கன்னிசேரி உள்பட பல்வேறு இடங்களில் மறியல் போராட்டம் நடந்தது. இதில் தொழிலாளர்கள் திரளாக பங்கேற்றனர்.

    இந்த மறியல் போராட்டம் காரணமாக பல இடங்களிலும் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டனர். #tamilnews
    ×