search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தேர்தல் நடத்தை விதிமுறை"

    • தேர்தல் சமயத்தில் சென்னையில் 53 டீம் 3 ஷிப்டுகளாக ஆங்காங்கே வாகன சோதனை நடத்தி வந்தனர். இது இப்போது கலைக்கப்பட்டு விட்டது.
    • ஒரு சட்டசபை தொகுதிக்கு ஒரு பறக்கும் படை மட்டுமே உள்ளது. அவர்களும் முன்பு போல் பணத்தை பறிமுதல் செய்வதில்லை.

    சென்னை:

    தமிழ்நாடு-புதுச்சேரி உள்ளிட்ட மாநிலங்களில் உள்ள 102 தொகுதிகளுக்கு பாராளுமன்ற தேர்தல் நடந்து முடிந்துள்ளது.

    இன்னும் மற்ற மாநிலங்களில் ஜூன் 1-ந்தேதி வரை 6 கட்டங்களாக தேர்தல் நடத்தப்பட உள்ளன. இதன் காரணமாக தேர்தல் நடத்தை விதிகள் தொடர்ந்து அமலில் உள்ளது.

    தமிழ்நாட்டில் தேர்தல் முடிந்து விட்டதால் பறக்கும் படை சோதனைகளும் குறைந்து விட்டது. சென்னையில் மொத்தம் 53 குழுக்கள் வாகன சோதனை நடத்தி வந்த நிலையில் இப்போது ஒரு சட்டசபை தொகுதிக்கு 1 வாகனம் வீதம் 18 வாகனங்கள் சோதனைக்காக உள்ளது. அவர்களும் முன்பு போல் பணம் பறிமுதல் செய்வதில்லை.

    இது குறித்து தேர்தல் அதிகாரிகளிடம் கேட்டபோது அவர்கள் கூறியதாவது:-

    தமிழ்நாட்டில் வாக்குப்பதிவு முடிந்து விட்டதால் வாகன சோதனையில் பணத்தை பறிகொடுத்தவர்கள் சம்பந்தப்பட்ட தேர்தல் அலுவலர்களை அணுகி விண்ணப்பத்தை பூர்த்தி செய்து கொடுத்து அதற்குரிய ஆவணங்களை சமர்ப்பித்து பணத்தை பெற்றுக்கொள்ளலாம்.

    சென்னையில் மாநகராட்சி உதவி ஆணையர் உமா மகேஸ்வரி இதற்காக நியமிக்கப்பட்டுள்ளார். அவரை அணுகி பணத்தை பெற்றுக் கொள்ளலாம்.

    தேர்தல் சமயத்தில் சென்னையில் 53 டீம் 3 ஷிப்டுகளாக ஆங்காங்கே வாகன சோதனை நடத்தி வந்தனர். இது இப்போது கலைக்கப்பட்டு விட்டது. ஒரு சட்டசபை தொகுதிக்கு ஒரு பறக்கும் படை மட்டுமே உள்ளது. அவர்களும் முன்பு போல் பணத்தை பறிமுதல் செய்வதில்லை. இதேபோல் தமிழகத்தின் உள் மாவட்டங்களில் பறக்கும் படைகளை கலைக்க தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

    தமிழகம், புதுச்சேரி உள்பட 102 தொகுதிகளில் கடந்த வெள்ளிக்கிழமை பாராளுமன்ற தேர்தல் நடைபெற்று முடிந்துள்ளது.

    மற்ற மாநிலங்களில் இன்னும் 6 கட்டமாக ஜூன் 1-ந்தேதி வரை தேர்தல் நடைபெற உள்ளன. இதன் காரணமாக தேர்தல் நடத்தை விதிகள் இங்கு அமலில் இருக்காது.

    வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசு பொருட்கள் வழங்குவதை தடுக்கும் வகையில், தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டு பணம் மற்றும் பரிசு பொருட்களை பறிமுதல் செய்தனர்.

    இந்த நிலையில் தமிழகத்தில் வாக்குப்பதிவு முடிந்த நிலையில் வாகன சோதனையில் ஈடுபட்டு வந்த பறக்கும் படை, நிலையான கண்காணிப்பு குழுக்களை தமிழகத்தின் உள் மாவட்டங்களில் கலைக்க தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

    கேரளா, கர்நாடகம், ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் தேர்தல் நடக்க உள்ளதால் அந்த மாநிலங்களையொட்டிய தமிழக மாவட்டங்களில் மட்டும் தேவைக்கு ஏற்ப பறக்கும் படை, நிலையான கண்காணிப்புக்குழு செயல்பாட்டில் உள்ளது.

    கேரளாவில் வருகிற 26-ந் தேதி பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதனால் கேரள மாநில எல்லையையொட்டி உள்ள கோவை மாவட்ட எல்லைப் பகுதிகளான வாளையார், கோபாலபுரம் ஆகிய 2 சோதனை சாவடிகளில் தலா ஒரு நிலையான கண்காணிப்புக்குழுவினர் வாகன சோதனையில் ஈடுபடுகின்றனர்.

    தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருந்தாலும் வியாபாரிகள், பொதுமக்கள் பாதிக்கப்பட கூடாது என்பதால் தேர்தல் ஆணையம் பல்வேறு தளர்வுகளை செய்துள்ளது. அதன்படி இப்போது ரூ.50 ஆயிரத்துக்கு மேல் பணம் கொண்டு செல்ல முடியும்.

    இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

    இது குறித்து தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதசாகுவுக்கு நன்றி தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.

    பாராளுமன்ற தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலாக்கம் காரணமாக வணிகர்கள், பொதுமக்கள், விவசாயிகள் மிகப்பெரும் பாதிப்புக்கு உள்ளாவதை தேர்தல் ஆணையரிடம் நேரில் விளக்கி கூறி, வாக்களிப்பு நடந்து முடிந்தவுடன், ஏப்ரல் 20-ந்தேதி முதல் ஜூன் 4-ந்தேதி வரை தேர்தல் விதிமுறைகள் பின்பற்றப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்திருந்ததை, மறுபரிசீலனை செய்யக்கோரியும், தமிழகத்தைப் பொறுத்தவரை தேர்தல் நடந்து முடிந்தவுடன், நடத்தை விதிமுறைகளை தேர்தல் நடைபெறும் இதர மாநில எல்லைகளில் மட்டுமே பின்பற்றிட அறிவுறுத்திட வேண்டும் எனும் பேரமைப்பின் கோரிக்கையை ஏற்று, பறக்கும் படைகள் திரும்பப் பெறப்படுவதாக அறிவித்து, மாநில எல்லைகளில் மட்டுமே, நடத்தை விதிமுறைகள் பின்பற்றப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்திருப்பது மகிழ்ச்சிக்குரிய செய்தியாக உள்ளது.

    இதனால், வணிகர்கள் இயல்பாக வணிகத்தை மேற்கொள்ளவும், அரசுக்கான வரி வருவாயையை உறுதி செய்திடவும் வழிவகுக்கும் என்பதனை மனதார வரவேற்று தேர்தல் ஆணையத்திற்கும் தேர்தல் பணிகளில் துணையிருந்து பாதுகாப்பு அளித்த போலீசாருக்கும், தேர்தல் பணியாளர்களுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

    இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

    ×