search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தேர்தல் கண்காணிப்பு குழு"

    • பணம் மற்றும் பொருட்கள் பிடிபட்டால், அந்தந்த பகுதி தலைமை அதிகாரிகளுக்கு உடனே தகவல் கொடுக்க வேண்டும்.
    • நட்சத்திர பேச்சாளர்கள் தங்களது சொந்த தேவைக்காக ரூ.1 லட்சம் வரை கொண்டு செல்லலாம்.

    கோவை:

    பாராளுமன்ற தேர்தல் விரைவில் நடக்க உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் செய்து வருகிறது.

    தேர்தல் சமயத்தில் வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்வது, பரிசு பொருட்கள் வழங்குவதை தடுத்து பறிமுதல் செய்வதற்கு பறக்கும் படை மற்றும் நிலையான கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

    தேர்தல் பணியில் ஈடுபட உள்ள இந்த தேர்தல் கண்காணிப்பு குழுவினருக்கு, தேர்தல் புகார்களை கையாள்வது எப்படி என்பது குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது.

    கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட கலெக்டர் கிராந்திகுமார் பாடி தலைமையில் நடந்தது.

    இதில் மாவட்ட கலெக்டர் தேர்தல் பணியாற்ற உள்ள அதிகாரிகளுக்கும், கண்காணிப்பு குழுவினருக்கும் தேர்தல் பணிகள் குறித்தும், தேர்தலின் போது எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பது குறித்தும் விரிவாக விளக்கினார்.

    கூட்டத்தில் கலெக்டர் கிராந்திகுமார் பாடி பேசியதாவது:-

    பாராளுமன்ற தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்ததும், பறக்கும் படையினர், நிலையான கண்காணிப்பு குழுவினர், வீடியோ கண்காணிப்பு குழுவினர் சரியான முறையில் செயல்பட வேண்டும்.

    பணம் மற்றும் பொருட்கள் பிடிபட்டால், அந்தந்த பகுதி தலைமை அதிகாரிகளுக்கு உடனே தகவல் கொடுக்க வேண்டும்.

    ஒவ்வொரு பகுதி பொறுப்பாளரும் அந்தந்த பகுதிகளுக்கு பொறுப்புடன் செயல்பட வேண்டும்.

    விதிகளை அமல்படுத்துகிறோம் என்ற பெயரில் பொதுமக்களுக்கு தொந்தரவு கொடுக்ககூடாது.

    கள்ளத்தனமாக பணம் எடுத்து செல்வது, மதுபானங்கள் வினியோகிக்க கொண்டு செல்வது உள்பட வாக்காளர்களுக்கு லஞ்சம் கொடுக்கும் விதமான அனைத்து நடவடிக்கைகளையும் இந்த குழுவினர் கண்காணிப்பார்கள்.

    தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது முதல், தேர்தல் முடியும் வரை இந்த குழுவானது செயல்பாட்டில் இருக்கும். லஞ்சம் கொடுப்பது, பெறுவது குறித்த புகார்கள், சமூக விரோதிகள் நடமாட்டம், சட்டத்துக்கு புறம்பான பொருட்கள் கைப்பற்றுவது குறித்து போலீசில் தகவல் தெரிவிக்க வேண்டும்.

    ஆதாரமின்றி எடுத்து செல்லப்படும் பணம் வாக்காளர்களுக்கு லஞ்சம் கொடுக்க எடுத்து சென்றதாக கணக்கில் கொண்டு பறிமுதல் செய்ய வேண்டும். அதனை வீடியோவிலும் பதிவு செய்ய வேண்டும்.

    ரூ.50 ஆயிரத்திற்கு மேல் உரிய ஆவணம் இன்றி கொண்டு செல்லப்படும் பணம், மதுபானங்களை கைப்பற்ற வேண்டும். ரூ.10 ஆயிரத்திற்கு மேல் மதிப்புள்ள பரிசுப்பொருட்களை எடுத்து சென்றால் பறிமுதல் செய்ய வேண்டும்.

    நட்சத்திர பேச்சாளர்கள் தங்களது சொந்த தேவைக்காக ரூ.1 லட்சம் வரை கொண்டு செல்லலாம். ரூ.10 லட்சத்துக்கு மேல் பணம் கண்டறியப்பட்டால் வருமான வரித்துறையினருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.

    பெண்களின் கைப்பைகளை பெண் போலீசாரே சோதனை செய்ய வேண்டும். அனைவரும் இணைந்து சிறப்பாக பணியாற்ற வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதனை தொடர்ந்து உதவி தேர்தல் நடத்தும் அதிகாரிகளுக்கு இன்று பயிற்சி அளிக்கப்பட்டது. நாளை மறுநாள்(சனிக்கிழமை) மண்டல குழு அலுவலர்களுக்கும் பயிற்சி அளிக்கப்படுகிறது.

    போலீஸ் அதிகாரிகள் மற்றும் டேட்டா என்ட்ரி ஆபரேட்டர்களுக்கு 11-ந் தேதியும், மைக்ரோ அப்சர்வர்கள் மற்றும் வீடியோ கிராபர்களுக்கு 15-ந் தேதியும் பயிற்சி அளிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

    ×