search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தென்னைகளை சேதப்படுத்திய யானைகள்"

    • கடந்த இரண்டு நாட்களாக 2 பெண் யானைகள் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதியில் உள்ள ஆத்தூர் காமராஜர் அணை அருகே அடர்ந்த காட்டுப்பகுதியில் பதுங்கியுள்ளது.
    • இந்த யானைகள் இரவு நேரங்களில் மட்டும் அங்குள்ள தோட்டத்து பகுதிகளுக்குச் சென்று, வாழை மற்றும் தென்னை மரங்களை சேதப்படுத்தி வருகிறது

    செம்பட்டி:

    திண்டுக்கல் மாவட்டம், செம்பட்டி அருகே ஆத்தூர் மேற்குத் தொடர்ச்சி மலை, கன்னிவாடி வனச்சரக பகுதியில் சுமார் 11 யானைகள் உள்ளது. இதில் கடந்த இரண்டு நாட்களாக 2 பெண் யானைகள் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதியில் உள்ள ஆத்தூர் காமராஜர் அணை அருகே அடர்ந்த காட்டுப்பகுதியில் பதுங்கியுள்ளது.

    இந்த யானைகள் இரவு நேரங்களில் மட்டும் அங்குள்ள தோட்டத்து பகுதிகளுக்குச் சென்று, வாழை மற்றும் தென்னை மரங்களை சேதப்படுத்தி வருகிறது. பகல் நேரங்களில் அடர்ந்த காட்டுப் பகுதிகளில் யானைகள் பதுங்கி உள்ளதாக கூறப்படுகிறது.

    இந்த பகுதியைச் சேர்ந்த நரசிங்கபுரம் தங்கப்பாண்டி என்பவருக்கு சொந்தமான தென்னை தோப்புக்குள் புகுந்த யானைகள், சுமார் 25-க்கும் மேற்பட்ட தென்னை மரங்களை உடைத்து சேதப்படுத்தி உள்ளது. அதேபோல் அவரது தோட்டத்தில் உள்ள வாழை மரங்களையும் சேதப்படுத்தி விட்டு அங்கிருந்து தப்பி ஓடி விட்டது. இதுகுறித்து, தங்கபாண்டி கன்னிவாடி சரக வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தார்.

    இதையடுத்து அங்கு சென்ற வனத்துறையினர் யானைகள் சேதப்படுத்திய இடங்களை பார்வையிட்டனர். அங்கு யானைகளின் கால் தடங்களை வைத்து யானை வந்து சேதப்படுத்தியதை உறுதிப்படுத்தினர். மேலும், அந்தப் பகுதியில் அடர்ந்த காட்டுப் பகுதியில் பதுங்கியுள்ள யானையின் சத்தத்தை வைத்து அது இரண்டு பெண் யானை எனவும் உறுதிப்படுத்தியுள்ளனர்.

    இதையடுத்து, இரவு நேரங்களில் ஆத்தூர் காமராஜர் அணை பகுதியில் உள்ள யானைகளை மேற்கு தொடர்ச்சி மலைக்கு விரட்டிவிடும் நடவடிக்கைகளில் வனத்துறை ஈடுபட உள்ளனர். இரண்டு யானைகள் அந்த பகுதியில் முகாமிட்டு உள்ளதால் அந்த பகுதி விவசாயிகள் பெரும் பீதியில் உள்ளனர்.

    ×