search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "துரித பணி"

    • காசநோய் இல்லாத மாவட்டமாக உருவாக்க துரித பணிகளை மேற்கொள்ள வேண்டும்.
    • கலெக்டர் மதுசூதன்ரெட்டி அறிவுறுத்தினார்.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்ட கலெக்டர் அலுவலகக் கூட்டரங்கில் உலக காசநோய் தினவிழா கலெக்டர் மதுசூதன் ரெட்டி தலைமையில் நடந்தது. இதில் அவர் பேசியதாவது:-

    காசநோய் குறித்து பொதுமக்கள் போதிய விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். நோய்த்தொற்று உள்ளவர்கள் வெளியில் தெரிந்தால் அச்சம் என்ற அடிப்படையில், தங்களை பரிசோதனைக்கு உட்படுத்தப்படாமல் உள்ளனர். தற்போதுள்ள நவீன காலக்கட்டத்தில் அனைத்துவிதமான நோய்களுக்கும் தரமான சிகிச்சைகள் அளிக்கும் வகையில் தமிழக அரசால் சிறப்பான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு, அதற்கான போதிய மருந்து வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

    சரிவர மருந்தை சாப்பிடாமல் இருப்பதால் தான் விளைவுகள் ஏற்படுகிறது. மேலும், மற்றவர்களுக்கு தொற்று நோயாக பரவாமலும் பாதுகாத்துக் கொள்ள வேண்டும். மருத்துவ மனைகளை அணுகி முறை யாக பரிசோதனை மேற்கொண்டு சிகிச்சை எடுப்பதன் அடிப்படையில் தங்களைச் சார்ந்தோர்களுக்கும் பரவாமல் பாதுகாக்க முடியும். வருகிற 2025-க்குள் காசநோய் இல்லாத தமிழகமாக மாற்றுவதற்கு முதலமைச்சர் இலக்கு நிர்ணயித்து, பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.

    அரசு அலுவலர்கள் மற்றும் பள்ளி ஆசிரியர்கள், மாணவ-மாணவிகள் இது குறித்து விழிப்புணர்வுடன் இருந்து தங்களை சார்ந்தவர்களுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

    காசநோய் உள்ளவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளதால் அதிக ஊட்டச்சத்து உணவினை எடுத்துக் கொள்ள வேண்டும். அவர்களுக்கு அரசால் மாதாந்திர உதவித்தொகையும் வழங்கப்படுகிறது. இதுதவிர, தன்னார்வலர்களும் தங்களது பங்களிப்பை ஏற்படுத்தும் வகையில் அரசுடன் இணைந்து சிறப்பாக செயல்பட்டு வருவது பாராட்டுக்குரியதாகும்.

    சிவகங்கை மாவட்டத்தில் 52 காசநோய் கண்டறியும் நுண்ணோக்கி மையங்கள் உள்ளன. மேலும், 14 புதிய இருகண் நுண்ணோக்கிகள், மாவட்டத்தின் பல்வேறு அரசு மருத்துவமனைகளுக்கு பொதுமக்களின் உபயோகத்திற்கென தற்போது வழங்கப்பட்டுள்ளது.

    பொதுமக்களின் ஒத்துழைப்பின் அடிப்படையில் காசநோயை முற்றிலுமாக ஒழிக்கும் வகையில், அனைத்துத்துறையைச் சார்ந்த அரசு அலுவலர்களும் ஒருங்கிணைந்து பணியாற்றி, காசநோய் இல்லாத மாவட்டமாக சிவகங்கை மாவட்டத்தை உருவாக்குவதற்கான பணிகளை சிறப்பாகவும், துரிதமாகவும் மேற்கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    ×