search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தீவிர முயற்சி"

    • கடம்பூர் வனத்துறையினர் மற்றும் மருத்துவ குழுவினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர்.
    • வனப்பகுதியில் உள்ள தொட்டியில் தண்ணீரை நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    சத்தியமங்கலம்:

    ஈரோடு மாவட்டம் சத்திய மங்கலம் புலிகள் காப்பகத்தில் ஆசனூர், கடம்பூர், பர்கூர் உட்பட மொத்தம் 10 வனச்சரகங்கள் உள்ளன. இங்கு யானை, சிறுத்தை, கரடி, காட்டெருமை உள்பட ஏராளமான வனவிலங்குகள் வசித்து வருகின்றன.

    தற்போது வனப்பகுதியில் கடும் வறட்சி நிலவுவதால் வனப்பகுதியில் உள்ள குளம், குட்டை, ஏரிகள் நீரின்றி வறண்டு காணப்படுகிறது. இதனால் வனப்பகுதியை விட்டு சமீப காலமாக வெளியேறும் காட்டு யானைகள் தேசிய நெடுஞ்சாலையோரம் உலா வருவதும், அங்கு வரும் வாகனங்களை தடுத்து நிறுத்தி உணவு இருக்கிறதா என்று தேடுவதும் தொடர்கதை ஆகி வருகிறது.

    மேலும் சில யானைகள் வனப்பகுதியை விட்டு வெளியேறி அருகே இரு க்கும் கிராமத்துக்குள் புகுந்து விளை நிலங்களை சேதப்படுத்தி வருகிறது. இந்நிலையில் சத்தியமங்கலம் அடுத்த கடம்பூர் அருகே உள்ள குரும்பூர் என்னும் இடத்தில் நேற்று இரவு வனப்பகுதியை விட்டு வெளியேறிய பெண் காட்டு யானை ஒன்று வெயிலின் தாக்கம் காரணமாக தண்ணீரை தேடி அங்கும் இங்கும் அலைந்து உள்ளது.

    அதேப்பகுதியில் தங்கவேலு என்பவருக்கு சொந்தமான தோட்டத்துக்கு அருகே புறம்போக்கு இடத்திற்கு அந்த யானை வந்துள்ளது. அப்போது யானைக்காக தோண்டி வைக்கப்பட்டிருந்த அகழியில் அந்தப் பெண் யானை தவறி கீழே விழுந்தது.

    ஏற்கனவே உணவு குடிநீரின்றி பலவீனமாக இருந்த அந்த பெண் யானை அகழியில் விழுந்ததால் அடிப்பட்டு உயிருக்கு போராடியது. இதைப் பார்த்த அப்பகுதி மக்கள் கடம்பூர் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக கடம்பூர் வனத்துறையினர் மற்றும் மருத்துவ குழுவினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர்.

    அங்கு உயிருக்கு போராடும் யானையை காப்பாற்றுவதற்காக அதன் காது நரம்பு வழியாக குளுக்கோஸ் ஏற்றி வருகின்றனர். யானையின் உடல்நிலை மிகவும் மோசமாக உள்ளதால் மருத்துவ குழுவினர் அதனை தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

    மேலும் ஜே.சி.பி. எந்திரம் மூலம் யானையை வெளியே எடுக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். தற்போது வனப்பகுதியில் வரட்சியான நிலை உள்ளதால் தன்னார்வலர்கள் மூலம் வனப்பகுதியில் உள்ள தொட்டியில் தண்ணீரை நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ×