search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "திருப்பூர் அரசு பள்ளி மாணவர்கள்"

    • 2 ஆயிரத்து 700 பேரின் விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டு கவுன்சிலிங்கில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டது.
    • திருப்பூர் மாவட்டத்தில் அழைக்கப்பட்ட 166 பேரில், 84 பேர் முதல் நாள் கவுன்சிலிங்கில் பங்கேற்றனர்.

    திருப்பூர் :

    அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்புகளில் உள்ள மொத்த இடங்களில் 7.5 சதவீதம் உள் ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது. இவர்களுக்கான கவுன்சிலிங், கடந்த 20ந் தேதி துவங்கியது. சென்னையில் நேரடியாக நடந்த இந்த கலந்தாய்வில் அரசு பள்ளி ஒதுக்கீட்டில், 2 ஆயிரத்து 700 பேரின் விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டு கவுன்சிலிங்கில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டது.

    திருப்பூர் மாவட்டத்தில் அழைக்கப்பட்ட 166 பேரில், 84 பேர் முதல் நாள் கவுன்சிலிங்கில் பங்கேற்றனர். இதில் ஜெய்வாபாய் மாதிரி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் மட்டும் 7 மாணவிகளுக்கு விரும்பிய கல்லுாரியில் மருத்துவம் பயில வாய்ப்பு கிடைத்துள்ளது.

    குறிப்பாக சென்னை ஸ்டான்லி மருத்துவ கல்லூரி, கோவை மருத்துவ கல்லூரி, கோவை இ.எஸ்.ஐ., பி.எஸ்.ஜி., மருத்துவ கல்லூரி, கே.எம்.சி.எச்., மருத்துவ கல்லூரி, ராமகிருஷ்ணா பல் மருத்துவ கல்லூரி, ராஜா முத்தையா கல்லூரி, சென்னை, துாத்துக்குடி, கடலூர் பல் மருத்துவமனை, நந்தா பல் மருத்துவமனை ஈரோடு, மதுரை, திருச்சி, அரியலூர், கரூர், திருப்பூர் போன்ற மருத்துவ கல்லூரிகளில் சேர்ந்து பயில மாணவ, மாணவிகள் தேர்வாகியுள்ளனர்.

    அதிகபட்சமாக ஜெய்வாபாய் மாதிரி பெண்கள் பள்ளியில் 7 பேர், கணபதிபாளையம் பள்ளியில் 3, உடுமலை பெண்கள் பள்ளியில் 3, அய்யன்காளிபாளையத்தில் 2, பெருமாநல்லூர் ஆண்கள் பள்ளியில் 2, கணக்கம்பாளையத்தில் 2 பேர் வீதம் மருத்துவ படிப்பில் சேர இடம் கிடைத்துள்ளது. எம்.பி.பி.எஸ்., படிப்பில், 18 பேர், பி.டி.எஸ்., பல் மருத்துவ படிப்பில் 15 பேருக்கு சீட் கிடைத்துள்ளது.

    இது குறித்து மாவட்ட 'நீட்' ஒருங்கிணைப்பாளர் சுரேஷ் கூறுகையில், அரசு பள்ளி மாணவர்களுக்கு இலவச நீட் பயிற்சி வழங்க துவங்கியது முதல் நிறைய மாணவர்கள் ஆர்வத்துடன் மருத்துவ கல்வி பயில முன்வருகின்றனர். அரசின் 7.5 ஒதுக்கீடு திட்டம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

    திருப்பூரில் கடந்தாண்டை விட 5 பேர் இம்முறை கூடுதலாக மருத்துவ கவுன்சிலிங்கில் தேர்வாகியுள்ளனர். அரசு பள்ளி அளவில் 7.5 சதவீத இடஒதுக்கீட்டில் மருத்துவ கல்லூரிகளை சேர்ந்தவர்களின் எண்ணிக்கையில், திருப்பூர் மாநில அளவில் மூன்றாம் இடத்தை பிடித்துள்ளது. திருப்பூர் அரசு பள்ளி மாணவர்களிடையே மருத்துவ கல்வி பயில்வதற்கான ஆர்வமும், முனைப்பும் அதிகரித்துள்ளதை காட்டுகிறது என்றார்.

    ×