search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "திமிரு புடிச்சவன் விமர்சனம்"

    விஜய் ஆண்டனி, நிவேதா பெத்துராஜ் நடிப்பில் கணேஷா இயக்கத்தில் உருவாகி இருக்கும் ‘திமிரு புடிச்சவன்’ படத்தின் விமர்சனம். #ThimiruPudichavan #ThimiruPudichavanReview
    சாதாரண குடும்பத்தில் பிறந்த விஜய் ஆண்டனி, தனது தம்பியுடன் வாழ்ந்து வருகிறார். போலீஸ் ஏட்டாக இருக்கும் விஜய் ஆண்டனி, தம்பியை நன்றாக படிக்க வைக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறார். இதற்காக தம்பியிடம் மிகவும் கண்டிப்பாக இருந்து வருகிறார். ஒருநாள் ஒரு பிரச்சனையில், விஜய் ஆண்டனியிடம் சண்டைப் போட்டுக்கொண்டு ஊரை விட்டு சென்று விடுகிறார் தம்பி. 

    சில காலங்கள் கழித்து சென்னைக்கு வருகிறார் விஜய் ஆண்டனி. வந்த இடத்தில் ஒரு கொலையை பார்க்கிறார். அந்த கொலையை தான் பார்த்ததாக போலீசிடம் கூறுகிறார். இந்த கொலையை செய்தது விஜய் ஆண்டனியின் தம்பி என்று தெரிய வருகிறது. தம்பிக்கு விஜய் ஆண்டனி எஸ்.ஐ.ஆக இந்த ஊருக்கு வந்திருக்கிறார் என்றும் தெரிய வருகிறது. ஒரு கட்டத்தில் தனது தம்பியை சுட்டுக் கொன்று விடுகிறார் விஜய் ஆண்டனி.



    இதன் பின் இன்ஸ்பெக்டராக மாறும் விஜய் ஆண்டனி, 18 வயதுக்குட்பட்ட சிறுவர்களை வைத்து பல சம்பவங்கள் மற்றும் கொலைகளை ரவுடியான சாய் தீனா செய்து வருவது தெரிய வருகிறது. இதனால், சாய் தீனாவை என்கவுண்டர் செய்ய முடிவு செய்கிறார் விஜய் ஆண்டனி.

    இறுதியில் சாய் தீனாவை விஜய் ஆண்டனி என்கவுண்டர் செய்தாரா? இல்லையா? என்பதே படத்தின் மீதிக்கதை.

    படத்தில் நாயகனாக நடித்திருக்கும் விஜய் ஆண்டனி, நேர்மையான போலீஸ் அதிகாரியாகவும், தம்பி மீது அக்கறை காட்டுபவராகவும், வில்லனை பழிவாங்க துடிப்பவராகவும் சிறப்பாக நடித்திருக்கிறார். நல்ல கதைகளை தேர்ந்தெடுத்து நடிக்கும் விஜய் ஆண்டனி, இந்த படத்திலும் மீண்டும் அதை நிரூபித்திருக்கிறார். 



    எஸ்.ஐ. கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் நாயகி நிவேதா பெத்துராஜ். போலீஸ் உடை இவருக்கு கச்சிதமாக பொருந்தி இருக்கிறது. விஜய் ஆண்டனியுடன் குறும்பு செய்வது, அவரை காதலிப்பது என அழகாக நடித்திருக்கிறார். காமெடியிலும் ஸ்கோர் செய்திருக்கிறார். 

    தம்பியாக வருபவர் எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். வழக்கம்போல் வில்லத்தனத்தில் மிரட்டி இருக்கிறார் சாய் தீனா. லொள்ளு சபா சுவாமிநாதன் காமெடியில் கலக்கி இருக்கிறார்.

    18 வயதுக்கு உட்பட்ட சிறுவர்களை சிலர் தப்பான முறையில் உபயோகித்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் கொலை செய்தால், சட்டத்தில் இருந்து எளிதாக தப்பிவிடலாம் என்ற நோக்கில் சிலர் செயல்படுகிறார்கள் என்பதை சொல்லியிருக்கிறார் இயக்குனர் கணேஷா. போலீஸ் மீது மக்களுக்கு இருக்கும் சில நெகட்டிவ் எண்ணங்களை போக்குகிறார். ஆனால், சில லாஜிக் இல்லாத காட்சிகளை தவிர்த்திருக்கலாம். 



    விஜய் ஆண்டனியே இப்படத்திற்கு இசையமைத்திருக்கிறார். பல நாட்கள் கழித்து அவரின் இசையை கேட்ட ஒரு திருப்தி இங்கேயும் உள்ளது. பின்னணி இசை, பாடல் என தனக்கே உரிய ஸ்டைலில் கொடுத்திருக்கிறார். ரிச்சர்ட் எம்.நாதனின் ஒளிப்பதிவு படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறது.

    மொத்தத்தில் ‘திமிரு புடிச்சவன்’ சாந்தமானவன்.
    ×