search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தாய் நாய்"

    • தீ அணைக்கப்பட்டாலும் கடையில் இருந்து கடும் புகை மூட்டம் வெளியே வந்து கொண்டு இருந்தது.
    • தெரு நாய் ஒன்று அங்கு திரண்டு இருந்தவர்களுக்கு மத்தியில் சுற்றி சுற்றி வந்தது.

    பொன்னேரி:

    மீஞ்சூர்- திருவொற்றியூர் சாலையில் உள்ள மரக்கடையில் பயங்கர தீவிபத்து ஏற்பட்டது. சுமார் 10 மணி நேரம் போராடி தீயணைப்பு வீரர்கள் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். எனினும் கடையில் இருந்த மரப்பொருட்கள் முழுவதும் எரிந்து நாசமானது. தீ அணைக்கப்பட்டாலும் கடையில் இருந்து கடும் புகை மூட்டம் வெளியே வந்து கொண்டு இருந்தது. இதனால் தீயணைப்பு வீரர்கள் கடைக்குள் செல்ல முடியாமல் திணறிக்கொண்டு இருந்தனர். அப்போது அங்கு வந்த தெரு நாய் ஒன்று அங்கு திரண்டு இருந்தவர்களுக்கு மத்தியில் சுற்றி சுற்றி வந்தது. இதனை வேடிக்கை பார்த்தவர்கள் அந்த நாயை விரட்டிவிட்டனர். ஆனாலும் அந்த நாய் தொடர்ந்து அங்கேயே வந்தது. அப்போதுதான் கடை உரிமையாளர், கடைக்குள் நாய் குட்டி போட்டு உள்ளது என்று தெரிவித்தார்.

    இதையடுத்து அந்த நாய்க்கு கடையின் வெளியே நின்றவர்கள் வழிவிட்டனர். உடனே அந்த தாய் நாய், புகை மூட்டத்தில் மோப்பம் பிடித்தபடி உள்ளே சென்று மரப்பலகையின் கீழ் தீயிலும் பாதுகாப்பாக இருந்த 6 குட்டிகளை ஒவ்வொன்றாக பாசத்துடன் வாயில் கவ்வியபடி வெளியே எடுத்து வந்தது. பின்னர் அந்த குட்டிகளை கடையின் அருகில் உள்ள பின்பகுதியில் மற்றொரு இடத்தில் பாதுகாப்பாக ஒளித்து வைத்தது. இதில் இரண்டு நாய்க்குட்டிகள் இறந்து இருந்தன. இதனை கண்ட அங்கிருந்தவர்கள் வருத்தம் அடைந்தனர். பின்னர் இறந்த 2 குட்டிகளையும் தனியாக எடுத்தனர். மீதியிருந்த 4 குட்டிகளுக்கும் தாய் நாய் பாசத்துடன் பாலூட்டியது.

    ×