search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தவில் இசை"

    • தமிழகத்திற்கு மேலும் பெருமை சேர்க்கும் வகையில் இசைக்கப்பட்ட தவில் உலக தலைவர்கள் மட்டுமின்றி மாநாட்டில் பங்கேற்ற அனைவரையும் மெய்மறக்க செய்தது.
    • சபாக்களில் மட்டுமே ஒலித்த இசை சர்வதேச மாநாட்டில் ஒலித்துள்ளது.

    சிவகங்கை:

    சர்வதேச நாடுகளின் கவனத்தை பெரிதும் ஈர்த்த ஜி 20 மாநாடு டெல்லியில் இரண்டு நாட்கள் வெற்றிகரமாக நடந்து முடிந்தது. அமெரிக்கா, இங்கிலாந்து, சீனா, ரஷ்யா, கனடா உள்ளிட்ட உலக நாடுகளில் தலைவர்கள் பங்கேற்றதன் மூலம் இந்தியாவின் பெருமை உலகறிய செய்துள்ளது.

    முன்னதாக குடியரசுத்தலைவர் திரவுபதி முர்மு உலக தலைவர்களை மகிழ்விக்கும் வண்ணம் அளித்த விருந்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் கலந்துகொண்டார். இதையொட்டி விருந்தில் பங்கேற்றவர்களின் நாவின் சுவைக்கு ஏற்ப பாரம்பரிய உணவு வகைகள் பரிமாறப்பட்டன. அதேபோல் செவிக்கு விருந்தளிக்கும் வகையில் இசை நிகழ்ச்சியும் நடத்தப்பட்டன.

    பல்வேறு நாடுகள், பல்வேறு மாநிலங்களின் பாரம்பரியத்தை பறைசாற்றும் வகையிலான இசை நிகழ்ச்சிகள் ஜி 20 மாநாட்டை கலகலக்க செய்தது. உலக தலைவர்கள் கலந்துகொண்ட மாநாட்டில் நாட்டின் பாதுகாப்பு, நலன், எதிர்காலம் மட்டுமின்றி அனைவரின் கவனத்தையும் ஈர்க்கும் வகையில் இசை நிகழ்ச்சிகள் நடத்தப்படுவது வழக்கம். இதில் மேற்கத்திய இசைகள் எப்போதும் முதலிடம் பிடித்து வந்த நிலையில், அந்தந்த நாட்டின், மாநில இசைக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டது.

    இதில் தமிழகத்திற்கு மேலும் பெருமை சேர்க்கும் வகையில் இசைக்கப்பட்ட தவில் உலக தலைவர்கள் மட்டுமின்றி மாநாட்டில் பங்கேற்ற அனைவரையும் மெய்மறக்க செய்தது. இதனை இசைக்க சிவகங்கையை சேர்ந்த மணி கண்டன் டெல்லிக்கு அழைக்கப்பட்டிருந்தார்.

    தமிழகத்தின் இசை பாரம்பரியத்தை உலகறிய செய்யும் வகையில் சிவகங்கை அரசு இசைப்பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வரும் பிள்ளைவயல் காளியம்மன் நகரை சேர்ந்த தவில் வித்வான் மணிகண்டன் (வயது 46) மற்றும் நாதஸ்வர கலைஞரான திருவாரூரை சேர்ந்த அரசு இசைப்பள்ளி நாதஸ்வர ஆசிரியர் இளையராஜா ஆகியோரை மத்திய அரசு சார்பில் அதிகாரிகள் டெல்லி அழைத்து சென்றனர்.

    இவர் மும்பை உட்பட பல்வேறு நகரங்களில் நடைபெறும் கான சபா, மார்கழி உற்சவம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு தவில் இசைத்து வருகிறார். மேலும் புதுடெல்லியில் உள்ள சங்கீத நாடக சபாவிலும் உறுப்பினராக உள்ளார்.

    இதனை அறிந்தே அவர் ஜி 20 மாநாட்டிற்கு அழைக்கப்பட்டு இருந்தார். தமிழகத்தின் அடையாளமான தவிலை மணிகண்டனும், மற்றொரு கலைஞர் நாதஸ்வரத்தையும் இசைத்து தமிழகத்தின் இசை பாரம்பரியத்தை உலக தலைவர்களின் செவிகளுக்கு விருந்தாக்கினர்.

    இதுபற்றி மணிகண்டன் 'மாலை மலர்' நிருபரிடம் கூறுகையில், உலக தலைவர்கள் பங்கேற்று இந்தியா தலைமையேற்று நடத்திய ஜி 20 மாநாட்டில் ஒவ்வொரு மாநிலத்தின் பாரம்பரிய இசையை ஒலிக்க செய்யும் வகையில் 75 இசை கலைஞர்கள் அழைக்கப்பட்டு இருந்தனர். இதில் அவர்கள் அந்தந்த மாநில இசை கருவிகளுடன் வந்திருந்தனர்.

    மாலை 6 மணி முதல் இரவு 9.30 மணி வரை விருந்து நிகழ்ச்சியில் இசைக்கப்பட்ட ஒலியானது உலக தலைவர்களுக்கு பெரிதும் வியப்பை ஏற்படுத்தியது. அதிலும் நம்முடைய நாதஸ்வரம், தவில் இசையை அவர்கள் அனைவரும் மெய்மறந்து கேட்டு ரசித்தனர். நம்முடைய நாதஸ்வரம், தவில் இசை சுமார் அரை மணி நேரம் இசைக்கப்பட் டது.

    அந்த நேரத்தில் நாங்கள் காவடி சிந்து, பஜனை பாடல்கள், தமிழக கலாசார பாடல்கள், மாலை மாற்றுதல் உள்ளிட்டவைகளை இசையாக வடித்தோம். இது எங்களுக்கு மிகவும் பெருமையாக இருக்கிறது. சபாக்களில் மட்டுமே ஒலித்த இசை சர்வதேச மாநாட்டில் ஒலித்துள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார். 

    ×