search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தயாள குணம்"

    • இயற்கையாகவே உதவி மனப்பான்மை உடையவர் விஜயகாந்த்.
    • விமர்சிப்பவர்களிடம் எந்தவித காழ்ப்புணர்ச்சியும் இன்றி பழகி வந்தார்.

    திரையுலகில் முன்னணி கதாநாயகர்களாக வலம் வருபவர்கள், தங்கள் வருவாயில் சமூக பணிகளுக்காகவும், ஏழை, எளிய மக்களின் நலனுக்காகவும் பொதுத்தொண்டு செய்யும் வழக்கத்தை முதலில் தொடங்கி வைத்தவர் மறைந்த முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர். எம்.ஜி.ஆரின் திரைப்படங்களை கண்டு சினிமாவில் நடிக்கும் ஆர்வத்தால் 70களில் சென்னைக்கு படையெடுத்தவர்களில் நடிகர் விஜயகாந்த்தும் ஒருவர்.

    நீண்ட நெடிய போராட்டத்திற்கு பிறகு திரையுலகில் தனக்கென ஒரு இடம் பிடித்த விஜயகாந்த் இயற்கையாகவே பிறருக்கு உதவும் நோக்கம் கொண்டிருந்தார்.



    தனது நண்பர் இப்ராகிம் ராவுத்தருடன் இணைந்து விஜயகாந்த், திரைப்படங்களை தயாரித்து வந்தார். அவரது திரைப்பட தயாரிப்பு நிறுவனமான "ராவுத்தர் பிலிம்ஸ்" அலுவலகம் தியாகராய நகர், பாண்டி பஜார் பகுதியில் ராஜாபாதர் தெருவில் செயல்பட்டு வந்தது. அங்கு வருபவர்களுக்கு விஜயகாந்த் இருந்தாலும், இல்லாத நேரத்திலும் எந்நேரமும் உணவு இலவசமாக வழங்கப்பட்டு வந்தது. திரைப்பட துறையை சார்ந்தவர்கள் மட்டுமின்றி பசியுடன் வரும் பலருக்கும் அங்கு உணவு வழங்குவது தொடர்ந்து நடைபெற வேண்டும் என்பதில் விஜயகாந்த் உறுதியுடன் இருந்தார்.

    இலங்கை தமிழர்களின் நலனுக்காக பல போராட்டங்களையும் நடத்தி அதில் ஈடுபட்டவர்களின் நலனையும் பாதுகாத்தவர் விஜயகாந்த். திரைப்பட படப்படிப்பு தளங்களில் துணை நடிக நடிகையர்களுக்கு பாதுகாப்பு, உணவு, உடை, தொலைத்தொடர்பு வசதி ஆகியவை நேரத்தில் கிடைக்க விஜயகாந்த் மிகவும் கவனம் செலுத்தி வந்தார்.



    நடிகர் சங்க தலைவராக பொறுப்பேற்ற விஜயகாந்த், அச்சங்கத்தின் கடனை அடைக்க வெளிநாடுகளில் நட்சத்திர விழாவை நடத்தி அதில் ரஜினி, கமல் ஆகிய இருவரையும் பங்கேற்க வைத்து அதன் மூலம் சங்கத்தின் கடனையும் அடைத்து உபரியாக பெரும் தொகையை வங்கி கணக்கில் வைக்க வழிவகை செய்தார்.

    சங்கத்தில் நடிகர்-தயாரிப்பாளர், இயக்குனர்-நடிகர் என ஏற்படும் பல பிரச்சனைகளை சுமூக வழியில் தீர்த்து வைத்தாலும், அது குறித்து விளம்பரம் தேடி கொள்ளாதவர். விஜயகாந்த், புதிதாக திரைத்துறைக்கு வர துடிக்கும் பலரை நடிப்பு, இயக்கம், இசை என பல்வேறு துறைகளில் வாய்ப்பு அளித்து ஊக்கமளிப்பதை வழக்கமாக கொண்டிருந்தார்.



    சரத்குமார், அருண்பாண்டியன், மன்சூர் அலிகான் உட்பட பல நடிகர்களுக்கு வாய்ப்பளித்தது மட்டுமின்றி பல பட தயாரிப்பு நிறுவனங்களுக்கும், இயக்குனர்களுக்கும் சிபாரிசும் செய்தார். இந்த தகவல்கள் குறித்து அவர்கள் பிற்காலத்தில் தெரிவித்ததால்தான் மக்களுக்கு தெரிய வந்ததே தவிர விஜயகாந்த் எங்கும் இதை கூறி புகழ் தேடி கொள்ள விரும்பவில்லை.

    திரைத்துறையில் அவரை விமர்சித்தவர்களுடன் எந்தவித பாகுபாடும் இன்றி விஜயகாந்த பழகி வந்தார்.

    அவரது தொடக்க திரைப்பயண போராட்ட காலத்தில் அவருடன் நடிக்க மறுத்த பல நடிகைகள் பின்னர் அவர் வெற்றிகரமான முன்னணி கதாநாயகனாக உருவெடுத்ததும் அவருடன் நடிக்க சம்மதித்தனர். ஆனால், விஜயகாந்த் அவர்களிடம் எந்த காழ்ப்புணர்ச்சியும் இல்லாமல் பழகி வந்ததாக பலர் தெரிவித்துள்ளனர்.

    மனிதர்களில் விஜயகாந்த் ஒரு சகாப்தம் என்றால் அது மிகையாகாது.

    ×