search icon
என் மலர்tooltip icon

  நீங்கள் தேடியது "Tamil film industry"

  • தமிழில் பல திறமையான இயக்குனர்கள் உள்ளனர் என்றார் அனில் கபூர்
  • இயக்குனர்களிடம் வாய்ப்பு கேட்க நான் தயங்கியதில்லை என்றார் அனில் கபூர்

  80களிலும், 90களிலும் இந்தி திரையுலகில் முன்னணி கதாநாயகனாக திகழ்ந்தவர், அனில் கபூர் (67).

  சில தினங்களுக்கு முன் அனில் கபூர் சென்னை வந்திருந்த போது அவரிடம் அவரது திரைப்பயணம் குறித்து பல கேள்விகள் கேட்கப்பட்டன.

  அதற்கு அவர் பதிலளித்ததாவது:

  இந்தி, தெலுங்கு, கன்னடம், மலையாளம் என பல மொழிகளில் நான் நடித்திருந்தாலும் தமிழ் படத்தில் நடிக்காதது எனக்கு வருத்தம்தான்.

  தமிழில் திறமையான இயக்குனர்கள் இருக்கிறார்கள்; ஆனால், எனக்கு இதுவரை எவரும் வாய்ப்பு அளிக்கவில்லை.

  இயக்குனர்களிடம் வாய்ப்பு கேட்க நான் என்றுமே தயங்கியதில்லை. தமிழில் வெற்றி பெற்ற "முதல்வன்" மற்றும் தெலுங்கில் வெற்றி பெற்ற "ஸ்வாதி முத்யம்" ஆகிய படங்கள் இந்தியில் உருவான போது அந்த இயக்குனர்களை நானாக தேடிச் சென்றுதான் வாய்ப்பு கோரினேன். அவை இன்றும் பேசப்படுகின்ற திரைப்படங்கள்.


  கே. பாக்யராஜ் அவர்களின் பல வெற்றி படங்களின் இந்தி உருவாக்கத்தில் நான் பங்கேற்றதில் எனக்கு மகிழ்ச்சிதான்.

  கலைத்துறையின் சிறப்பே கலை படைப்புகள் குறித்து மாறுபட்ட கருத்துகள் உருவாவதுதான்.

  நல்ல எதிர்காலத்திற்காக, நிகழ்காலத்தில்தான் நாம் கவனம் செலுத்த வேண்டும்.

  இவ்வாறு அனில் கபூர் கூறினார்.

  பிரபல இயக்குனர் மணிரத்னம் கன்னட மொழியில் உருவாக்கிய "பல்லவி அனுபல்லவி" திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்தவர் அனில் கபூர். அதில் தோன்றும் பல காட்சிகளை மீண்டும் மணிரத்னம் "மவுன ராகம்" திரைப்படத்தில் கார்த்திக்-ரேவதி பங்கேற்கும் காட்சிகளில் கையாண்டிருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.

  90களின் இறுதி வரையில் இந்தி திரையுலகில் மிகக் குறைவான நடிகர்கள்தான் திரையில் மீசை வைத்து கொண்டு நடித்தனர். ஆங்கில பட கதாநாயகர்கள் போல் மீசை மற்றும் தாடி இல்லாமல் நடிப்பதுதான் அங்கு வழக்கமாக இருந்தது.


  சத்ருகன் சின்கா, நானா படேகர் போன்ற ஒரு சிலர் மட்டுமே இதற்கு விதிவிலக்காக இருந்தனர்.

  அவர்களை போன்றே அனில் கபூரும், மீசையுடனே தனது படங்களில் நடித்தார்.

  கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் அளித்து நடிப்பதில் அனில் கபூர் கவனம் செலுத்துபவர்.

  எடுத்துகாட்டாக, இசையமைப்பாளர் ஏ. ஆர். ரகுமானுக்கு ஆஸ்கர் விருதை பெற்று தந்த "ஸ்லம்டாக் மில்லியனர்", 2011ல் ஹாலிவுட் ஆக்ஷன் ஹீரோ, டாம் க்ரூயிஸ் (Tom Cruise) கதாநாயகனாக நடித்த "மிஷன் இம்பாசிபிள் – கோஸ்ட் ப்ரோடோகால்", 2023ல் வெளிவந்த "அனிமல்" உள்ளிட்ட படங்களில் அவர் ஏற்ற முக்கிய கதாபாத்திரங்கள் விமர்சகர்களின் பாராட்டுகளை பெற்று தந்தது.


  எப்போதும் இளமை குன்றாத தோற்றத்துடன் இருக்கும் அனில் கபூர், 2019ல் ஒரு பேட்டியில் தனது இளமைக்கு காரணம் தான் விரும்பி உண்ணும் தென்னிந்திய இட்லி, சாம்பார், சட்னி, அரிசி, ரசம் ஆகியவை என கூறியிருந்தார்.

  • இயற்கையாகவே உதவி மனப்பான்மை உடையவர் விஜயகாந்த்.
  • விமர்சிப்பவர்களிடம் எந்தவித காழ்ப்புணர்ச்சியும் இன்றி பழகி வந்தார்.

  திரையுலகில் முன்னணி கதாநாயகர்களாக வலம் வருபவர்கள், தங்கள் வருவாயில் சமூக பணிகளுக்காகவும், ஏழை, எளிய மக்களின் நலனுக்காகவும் பொதுத்தொண்டு செய்யும் வழக்கத்தை முதலில் தொடங்கி வைத்தவர் மறைந்த முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர். எம்.ஜி.ஆரின் திரைப்படங்களை கண்டு சினிமாவில் நடிக்கும் ஆர்வத்தால் 70களில் சென்னைக்கு படையெடுத்தவர்களில் நடிகர் விஜயகாந்த்தும் ஒருவர்.

  நீண்ட நெடிய போராட்டத்திற்கு பிறகு திரையுலகில் தனக்கென ஒரு இடம் பிடித்த விஜயகாந்த் இயற்கையாகவே பிறருக்கு உதவும் நோக்கம் கொண்டிருந்தார்.  தனது நண்பர் இப்ராகிம் ராவுத்தருடன் இணைந்து விஜயகாந்த், திரைப்படங்களை தயாரித்து வந்தார். அவரது திரைப்பட தயாரிப்பு நிறுவனமான "ராவுத்தர் பிலிம்ஸ்" அலுவலகம் தியாகராய நகர், பாண்டி பஜார் பகுதியில் ராஜாபாதர் தெருவில் செயல்பட்டு வந்தது. அங்கு வருபவர்களுக்கு விஜயகாந்த் இருந்தாலும், இல்லாத நேரத்திலும் எந்நேரமும் உணவு இலவசமாக வழங்கப்பட்டு வந்தது. திரைப்பட துறையை சார்ந்தவர்கள் மட்டுமின்றி பசியுடன் வரும் பலருக்கும் அங்கு உணவு வழங்குவது தொடர்ந்து நடைபெற வேண்டும் என்பதில் விஜயகாந்த் உறுதியுடன் இருந்தார்.

  இலங்கை தமிழர்களின் நலனுக்காக பல போராட்டங்களையும் நடத்தி அதில் ஈடுபட்டவர்களின் நலனையும் பாதுகாத்தவர் விஜயகாந்த். திரைப்பட படப்படிப்பு தளங்களில் துணை நடிக நடிகையர்களுக்கு பாதுகாப்பு, உணவு, உடை, தொலைத்தொடர்பு வசதி ஆகியவை நேரத்தில் கிடைக்க விஜயகாந்த் மிகவும் கவனம் செலுத்தி வந்தார்.  நடிகர் சங்க தலைவராக பொறுப்பேற்ற விஜயகாந்த், அச்சங்கத்தின் கடனை அடைக்க வெளிநாடுகளில் நட்சத்திர விழாவை நடத்தி அதில் ரஜினி, கமல் ஆகிய இருவரையும் பங்கேற்க வைத்து அதன் மூலம் சங்கத்தின் கடனையும் அடைத்து உபரியாக பெரும் தொகையை வங்கி கணக்கில் வைக்க வழிவகை செய்தார்.

  சங்கத்தில் நடிகர்-தயாரிப்பாளர், இயக்குனர்-நடிகர் என ஏற்படும் பல பிரச்சனைகளை சுமூக வழியில் தீர்த்து வைத்தாலும், அது குறித்து விளம்பரம் தேடி கொள்ளாதவர். விஜயகாந்த், புதிதாக திரைத்துறைக்கு வர துடிக்கும் பலரை நடிப்பு, இயக்கம், இசை என பல்வேறு துறைகளில் வாய்ப்பு அளித்து ஊக்கமளிப்பதை வழக்கமாக கொண்டிருந்தார்.  சரத்குமார், அருண்பாண்டியன், மன்சூர் அலிகான் உட்பட பல நடிகர்களுக்கு வாய்ப்பளித்தது மட்டுமின்றி பல பட தயாரிப்பு நிறுவனங்களுக்கும், இயக்குனர்களுக்கும் சிபாரிசும் செய்தார். இந்த தகவல்கள் குறித்து அவர்கள் பிற்காலத்தில் தெரிவித்ததால்தான் மக்களுக்கு தெரிய வந்ததே தவிர விஜயகாந்த் எங்கும் இதை கூறி புகழ் தேடி கொள்ள விரும்பவில்லை.

  திரைத்துறையில் அவரை விமர்சித்தவர்களுடன் எந்தவித பாகுபாடும் இன்றி விஜயகாந்த பழகி வந்தார்.

  அவரது தொடக்க திரைப்பயண போராட்ட காலத்தில் அவருடன் நடிக்க மறுத்த பல நடிகைகள் பின்னர் அவர் வெற்றிகரமான முன்னணி கதாநாயகனாக உருவெடுத்ததும் அவருடன் நடிக்க சம்மதித்தனர். ஆனால், விஜயகாந்த் அவர்களிடம் எந்த காழ்ப்புணர்ச்சியும் இல்லாமல் பழகி வந்ததாக பலர் தெரிவித்துள்ளனர்.

  மனிதர்களில் விஜயகாந்த் ஒரு சகாப்தம் என்றால் அது மிகையாகாது.

  • திருமணத்திற்கு பிறகு கணவரின் குடும்ப பெயரை தன்னுடன் இணைத்து கொண்டார்
  • தனது பதிலுடன் ஒரு நகைச்சுவை எமோஜியை இணைத்து பதிவிட்டார் சமந்தா

  தெலுங்கு மற்றும் தமிழ் திரைப்படங்களில் முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்பவர் 36 வயதாகும் சமந்தா (Samantha). இவரது இயற்பெயர் சமந்தா ரூத் பிரபு.

  4 முறை தென்னிந்திய ஃபிலிம்ஃபேர் அவார்டுகள் (Filmfare Awards South) வென்ற சமந்தா, 2010ல் "யே மாயா சேஸவே" (Ye Maaya Chesave) எனும் தெலுங்கு திரைப்படத்தில் அறிமுகமானார். அத்திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்தவர் பிரபல தெலுங்கு நடிகர் அக்கினேனி நாகார்ஜுனாவின் (Akkineni Nagarjuna) மகன் அக்கினேனி நாக சைதன்யா (Akkineni Naga Chaitanya).

  சமந்தாவிற்கு அவருடன் ஏற்பட்ட நட்பு வளர்ந்து, இருவரும் 2017 அக்டோபர் மாதம் திருமணம் செய்து கொண்டனர்.

  திருமணத்திற்கு பிறகு தனது பெயரை சமந்தா அக்கினேனி (Samantha Akkineni) என மாற்றம் செய்து கொண்டார்.

  ஆனால், 2021 ஜூலை மாதம், சமூக வலைதளங்களில் தனது பெயரில் "அக்கினேனி" எனும் கணவர் குடும்ப பெயரை அவர் நீக்கினார். இது பல யூகங்களுக்கு வழிவகுத்தது.

  சமந்தா-சைதன்யா திருமண வாழ்க்கை நீண்ட நாட்கள் நீடிக்கவில்லை.

  2021 அக்டோபர் மாதம், இருவரும் விவாகரத்து செய்தனர்.

  இந்நிலையில் சமூக வலைதளங்களில் முனைப்புடன் கருத்துக்களை அவ்வப்போது வெளியிட்டு வந்த சமந்தா, இன்ஸ்டாகிராம் சமூக வலைதளத்தில் அவரது அதிகாரபூர்வ கணக்கில் "என்ன வேண்டுமானாலும் கேளுங்கள்" (Ask Me Anything) எனும் அமர்வில் ரசிகர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தார்.

  அப்போது ஒரு பயனர் அவரிடம், "மீண்டும் திருமணம் செய்து கொள்ள நீங்கள் நினைக்கவில்லையா?" என கேட்டார்.

  அதற்கு சமந்தா, "அது (மறுமணம்) ஒரு தவறான முடிவாகி விடும் என புள்ளி விவரங்கள் காட்டுகின்றன" என பதிலளித்தார். அத்துடன் ஒரு நகைச்சுவை எமோஜி பதிவிட்ட சமந்தா, 2023 வருட விவாகரத்துக்கள் குறித்த புள்ளி விவரங்களையும் இணைத்து பதிவிட்டார்.

  சமந்த இணைத்துள்ள புள்ளி விவரங்களில் முதல் திருமணத்தில் விவாகரத்து 50 சதவீத அளவில் நடைபெற்றதாகவும், 2-ஆம் திருமணங்களில் 67 சதவீதம், 3-ஆம் திருமணங்களில் 73 சதவீதம் எனவும் மணமுறிவு ஏற்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

  ×