search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தமிழ்நாடு சுர்ச்சை"

    • தமிழ்நாட்டின் பெயரை மாற்றுவதற்கான பரிந்துரை போல பொருள் கொள்வதோ, அனுமானம் செய்து கொள்வதோ தவறானது.
    • வரலாற்று பண்பாட்டு சூழலில் தமிழகம் என்பதை மிகவும் பொருத்தமான வெளிப்பாடு என்ற கண்ணோட்டத்தில் குறிப்பிட்டேன்.

    தமிழக கவர்னர் ஆர்.என்.ரவிக்கும், தமிழக அரசுக்கும் இடையே தொடக்கத்தில் இருந்தே பல்வேறு விஷயங்களில் கருத்து வேறுபாடு இருந்து வருகிறது.

    கவர்னர் ரவி பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்று பேசும்போது தெரிவிக்கும் கருத்துக்கள் சர்ச்சையாக மாறுகின்றன. கடந்த 4ம் தேதி கவர்னர் மாளிகையில் நடந்த விழாவில் அவர் பேசும்போது, "தமிழ்நாடு என்பதற்கு பதில் தமிழகம் என்பதுதான் பொருத்தமானது" என்று பேசி இருந்தார்.

    கவர்னரின் இந்த கருத்துக்கு தி.மு.க. மற்றும் அதன் தோழமை கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. தி.மு.க. சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில், "தமிழ்நாடு என்றால் கவர்னருக்கு எட்டிக்காயாக இருப்பது ஏன்?" என்று கேள்வி எழுப்பப்பட்டது.

    அதுபோல காங்கிரஸ், ம.தி.மு.க., விடுதலை சிறுத்தைகள் கட்சிகளும் கவர்னருக்கு எதிராக அறிக்கை வெளியிட்டன. போராட்டங்களும் நடத்தப்பட்டன.

    இந்த நிலையில் கடந்த 9ம் தேதி நடப்பாண்டுக்கான முதல் சட்டசபை கூட்டம் தொடங்கி நடந்தது. அன்று கவர்னர் ஆர்.என்.ரவி உரையாற்றினார். தமிழக அரசு தயாரித்து வழங்கியிருந்த அந்த உரையில் சில பகுதிகளை கவர்னர் ஆர்.என்.ரவி படிக்காமல் தவிர்த்தார்.

    குறிப்பாக தமிழ்நாடு, திராவிட மாடல், சட்டம் ஒழுங்கு போன்ற பத்திகளை அவர் வாசிக்காமல் கடந்து சென்றார். மேலும் கவர்னர் உரையில் சில புதிய கருத்துக்களை சேர்த்தார். இது தி.மு.க. தலைவர்களுக்கு கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது.

    கவர்னரின் செயலுக்கு முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் சட்டசபையில் உடனடியாக பதில் அளிக்கும் வகையில் 2 பக்க தீர்மானத்தை வாசித்து அதை நிறைவேற்றினார். தமிழக அரசு தயாரித்து கொடுத்த கவர்னர் உரை தான் சட்டசபை குறிப்புகளில் இடம்பெறும் என்றும் அறிவித்தார். இதையறிந்த கவர்னர் ஆர்.என்.ரவி உடனடியாக தனது இருக்கையில் இருந்து எழுந்து பாதியிலேயே புறப்பட்டு சென்றுவிட்டார்.

    கவர்னரின் இந்த நடவடிக்கைக்கு தி.மு.க.வும், கூட்டணி கட்சிகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. தி.மு.க. சார்பில் இதுபற்றி ஜனாதிபதியிடம் புகார் அளிக்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி கடந்த 12-ந் தேதி சட்ட அமைச்சர் ரகுபதி தலைமையில் தி.மு.க.வினர் டெல்லி சென்று ஜனாதிபதியை சந்தித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினின் கடிதத்தை கொடுத்தனர்.

    கடிதத்தை பெற்றுக் கொண்ட ஜனாதிபதி திரவுபதி முர்மு அதை மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு அனுப்பி வைத்தார். இதற்கிடையே மறுநாள் (13-ந் தேதி) கவர்னர் ஆர்.என்.ரவி டெல்லி புறப்பட்டு சென்றார். அவர் சட்டசபையில் ஏற்பட்ட சர்ச்சை தொடர்பாக பேசுவதற்காக சென்றிருப்பதாக கூறப்பட்டது.

    ஆனால் 14ம் தேதி இரவே டெல்லியில் இருந்து கவர்னர் சென்னை திரும்பிவிட்டார். டெல்லியில் அவர் யாரையும் சந்திக்கவில்லை என்று கூறப்பட்டது. ஆனால் டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சக மூத்த அதிகாரிகளில் சிலரை கவர்னர் சந்தித்து பேசிவிட்டு வந்ததாக டெல்லி வட்டாரங்கள் தெரிவித்தன.

    இந்தநிலையில் கவர்னர் ஆர்.என்.ரவி தமிழ்நாடு என்பதற்கு பதில் தமிழகம் என்று பேசியது ஏன் என்பதற்கு விளக்கம் அளித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    2023 ஜனவரி 4ம் தேதி அன்று கவர்னர் மாளிகையில், சமீபத்தில் நிறைவடைந்த "காசியுடன் தமிழ் மக்களின் பழமையான கலாசார தொடர்பை கொண்டாடும்' ஒரு மாத காசி தமிழ் சங்கமம் விழாவில் பங்கேற்ற தன்னார்வ தொண்டர்களைப் பாராட்டும் நிகழ்ச்சி' நடைபெற்றது.

    அந்நிகழ்வில் வரலாற்றுப் பண்பாடு பற்றிப் பேசும்போது, காசி மற்றும் தமிழ்நாட்டுக்கும் இடையே உள்ள தொடர்பை குறிக்க, 'தமிழகம்' என்ற வார்த்தையைப் பயன்படுத்தினேன்.

    அந்தக் காலத்தில் 'தமிழ்நாடு' என்பது இருக்கவில்லை. எனவே வரலாற்றுப் பண்பாட்டுச் குழலில், 'தமிழகம்' என்பதை 'மிகவும் பொருத்தமான வெளிப்பாடு' என்ற கண்ணோட்டத்தில் குறிப்பிட்டேன்.

    எனது கண்ணோட்டத்தை 'தமிழ்நாட்டின் பெயரை மாற்றுவதற்கான பரிந்துரைபோல பொருள் கொள்வதோ அனுமானம் செய்து கொள்வதோ தவறானது மற்றும் யதார்த்தத்துக்கு புறம்பானது என்று தெரிவித்துக் கொள்கிறேன்.

    எனது பேச்சின் அடிப்படை புரியாமல், ஆளுநர் 'தமிழ்நாட்டின் பெயரை மாற்றுவதற்கான பரிந்துரை எனும் வாதங்கள், விவாதப்பொருளாகி இருக்கிறது. அதற்கு முற்றுப்புள்ளி வைக்கவே இந்த விளக்கம்.

    இவ்வாறு அந்த செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

    ×