search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தனியார் நிறுவன டிரைவர்"

    • நீலா நர்சிங் பணியை மேற்கொண்டபடியே படிப்பை தொடர்ந்தார். அதன் விளைவாகத்தான் நேற்று அவர் 12-வது பட்டத்தையும் பெற்று சாதனை படைத்திருக்கிறார்.
    • மனைவியின் படிப்பு ஆசையை, தனியார் நிறுவனத்தில் டிரைவராக பணியாற்றி, அதில் வரும் வருமானத்தை கொண்டு பூர்த்தி செய்திருக்கிறார் ஷேக் காதர்.

    சென்னை:

    சென்னை கிண்டியில் உள்ள தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் ஒரு நெகிழ்ச்சி சம்பவம் நடந்தது. இதில் 41 பேருக்கு டாக்டர் மற்றும் ஆராய்ச்சி பட்டங்கள் வழங்கப்பட்டன. கடைசி ஆளாக ஆராய்ச்சி பட்டம் பெற்ற நீலா என்ற பெண்மணி, 'படிப்புக்கு வயது தடையில்லை' என்பதற்கு சிறந்த உதாரணமாக திகழ்ந்தார்.

    49 வயதை கடந்திருக்கும் நீலா, 12-ம் வகுப்பு முடித்த கையோடு, பி.எஸ்சி. நர்சிங், எம்.எஸ்சி. நர்சிங், எம்.ஏ. சமூக நல நிர்வாகம், எம்.பி.ஏ. உள்பட பல்வேறு பட்டங்களை பெற்றுள்ளார். நேற்று அவர் நர்சிங் படிப்பில் 'ஹீமோடயாலிசிஸ்' என்ற தலைப்பில் ஆராய்ச்சி பட்டம் பெற்றார்.

    குடும்பத்தில் 2-வது பெண் குழந்தையாக பிறந்த நீலாவுக்கு படிப்பில் தீராத ஆசை. அதற்கு அவருடைய தந்தை வழிகாட்டியதுடன், ஊக்கப்படுத்தியும் இருக்கிறார். அதனால் 12-ம் வகுப்பில் சிறந்த மதிப்பெண் பெற்ற நீலா, முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியிடம் பரிசும் பெற்றுள்ளார். காதல் கணவர் ஷேக் காதரை கரம்பிடித்த இவர், படிப்பை தொடர ஆசைப்பட்டுள்ளார்.

    அதற்கு கணவர் ஷேக் காதர் பச்சைக்கொடி காட்டினார். அதனால் நீலா நர்சிங் பணியை மேற்கொண்டபடியே படிப்பை தொடர்ந்தார். அதன் விளைவாகத்தான் நேற்று அவர் 12-வது பட்டத்தையும் பெற்று சாதனை படைத்திருக்கிறார்.

    மனைவியின் படிப்பு ஆசையை, தனியார் நிறுவனத்தில் டிரைவராக பணியாற்றி, அதில் வரும் வருமானத்தை கொண்டு பூர்த்தி செய்திருக்கிறார் ஷேக் காதர்.

    நேற்று பட்டமளிப்பு விழா மேடையில் நிர்மலா சீதாராமன் கையில் பட்டம் பெற்ற நீலா, இதுபற்றி அவரிடம் தெரிவித்தார். அதையடுத்து மேடையில் இருந்தபடி நிர்மலா சீதாராமன், நீலாவையும், அவருடைய படிப்புக்கு ஊன்றுகோலாய் இருந்த கணவர் ஷேக் காதரையும் பாராட்டினார்.

    நிகழ்ச்சி முடிந்ததும் நீலா நிருபர்களிடம் கூறுகையில், 'பெண் குழந்தைகளுக்கு கல்வி என்பது மிகவும் அவசியம். குடும்பத்தில் இருப்பவர்கள், பெண் குழந்தைகள் மேற்படிப்பு படிக்க விரும்பினால் தடை செய்யாதீர்கள். அவர்களுக்கு வழிகாட்டியாக இருங்கள்' என்றார்.

    ×