search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தனி கோர்ட்டு"

    தமிழ்நாட்டில் எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்குகளை விசாரிக்க தனி கோர்ட்டு அமைப்பதற்கான அரசாணையை உள்துறை செயலாளர் நிரஞ்சன்மார்டி பிறப்பித்தார். #separatecourt #TNGovt
    சென்னை:

    நாடு முழுவதும் எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் மீது கிரிமினல் வழக்குகள் உள்பட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன.

    இதையடுத்து சுப்ரீம் கோர்ட்டில் மூத்த வக்கீல் அஸ்வினிகுமார் என்பவர் ஒரு மனுதாக்கல் செய்தார். அதில் ஜெயில் தண்டனை பெறும் அரசியல்வாதிகள் 6 ஆண்டுகள் தேர்தலில் நிற்க தடை விதிக்கும் மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தை அரசியல் அமைப்பு சட்டத்தின் அடிப்படை விதிகளில் சேர்க்க வேண்டும் என்று குறிப்பிட்டு இருந்தார்.

    இது தொடர்பான வழக்கு விசாரணையின் போது சுப்ரீம்கோர்ட்டு நீதிபதிகள் மத்திய அரசிடம் பல்வேறு விளக்கங்கள் கேட்டு இருந்தனர்.

    நாடு முழுவதும் எத்தனை எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் மீது எவ்வளவு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதில் எத்தனை வழக்குகள் முடிவுக்கு வந்துள்ளது, எத்தனை வழக்குகள் நிலுவையில் உள்ளன என்பன போன்ற விவரங்களை கேட்டு இருந்தனர்.

    இதற்கு பதில் அளித்து மத்திய அரசு பிரமாண பத்திரம் தாக்கல் செய்தது. அதில் மாநிலங்களில் ரூ.7.8 கோடி செலவில் தனி கோர்ட்டுகள் அமைக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டு இருந்தது.

    நேற்று முன்தினம் இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது 12 சிறப்பு கோர்ட்டுகள் அமைக்க 11 மாநிலங்கள் அறிவிக்கைகள் வெளியிட்டு உள்ளன என்று மத்திய அரசு தெரிவித்தது.

    அதன்படி டெல்லியில் 2 சிறப்பு கோர்ட்டுகளும், தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா, உத்தரப்பிரதேசம், பீகார், கர்நாடகா, மராட்டியம், மேற்கு வங்காளம், மத்தியப் பிரதேசம், தெலுங்கானா ஆகிய மாநிலங்களில் தலா ஒரு தனி கோர்ட்டும் அமைக்கப்பட்டுள்ளது. இவற்றில் 6 செசன்ஸ் அந்தஸ்து நீதிமன்றம், 5 மாஜிஸ்திரேட்டு கோர்ட்டுகள் ஆகும்.

    தமிழ்நாட்டில் எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்குகளை விசாரிக்க தனி கோர்ட்டு அமைத்து தமிழக அரசு கடந்த 6-ந்தேதி உத்தரவிட்டது. உள்துறை செயலாளர் நிரஞ்சன்மார்டி இதற்கான அரசாணை பிறப்பித்தார். இது விரைவு கோர்ட்டு போல் சிறப்பு நீதிமன்றமாக இயங்கும்.

    தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் உள்ள வழக்குகள் இந்த கோர்ட்டுக்கு மாற்றப்பட்டு வருகின்றன. தனி நீதிமன்றத்தை அமைப்பதற்கான இடம் தேர்வாகி வருகிறது. தனி நீதிபதி நியமன அறிவிப்பும் விரைவில் வெளியிடப்படும் என்று அரசு வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டது.

    தனி கோர்ட்டில் எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்குகள் நாள் தோறும் விசாரிக்கப்படும். தனி கோர்ட்டு அமைக்கும் முடிவுக்கு சுப்ரீம்கோர்ட்டு அனுமதி அளித்தும் இதில் 9 மாதங்கள் தாமதம் ஏற்பட்டுள்ளது.

    தமிழ்நாட்டில் பல்வேறு கோர்ட்டுகளில் 178 எம்.எல்.ஏ., எம்.பி.க்கள் மீதான வழக்குகள் நடைபெற்று வருகின்றன. இதில் 324 வழக்குகள் கிரிமினல் குற்றச்சாட்டுகளின் கீழ் தொடரப்பட்டது என்றும் சுப்ரீம்கோர்ட்டில் மத்திய அரசு தாக்கல் செய்த அறிக்கையின் மூலம் தெரிய வந்துள்ளது.

    கிரிமினல் வழக்குகள் தவிர ஏராளமான சிறு சிறு வழக்குகளும் சொத்து குவிப்பு வழக்குகளும் நிலுவையில் உள்ளன.


    திருச்சி மேற்கு தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ. கே.என். நேரு மீது தான் அதிக வழக்குகள் உள்ளன. ஆள் கடத்தல், மோசடி, நில அபகரிப்பு, சொத்து குவிப்பு வழக்கு, போலி ஆவணம் தயாரித்தல் என 11 வழக்குகள் நிலுவையில் உள்ளன. இவை பல ஆண்டுகளாக கோர்ட்டில் ஆரம்ப கட்ட விசாரணை நிலையிலேயே நிலுவையில் இருந்து வருகின்றன.

    அதிக வழக்குகளைப் பொறுத்தவரை உத்தரப்பிரதேச மாநிலம் முதலிடத்தில் உள்ளது. அதற்கு அடுத்தப்படியாக தமிழ்நாடு 2-வது இடத்தில் உள்ளது.

    இந்தியா முழுவதும் வெளியான வழக்குகளின் புள்ளி விவரப்படி தேர்தலில் போட்டியிடும் அரசியல் கட்சி வேட்பாளர்களில் 3-ல் ஒரு பங்கு பேர் கிரிமினல் குற்றச்சாட்டுக்கு ஆளானவர்கள் என கூறப்பட்டுள்ளது.  #separatecourt #TNGovt
    ×